கன்னி டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த ப்ரவீன் ஜயவிக்ரம

Bangladesh tour of Sri Lanka 2021

209

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அறிமுக பந்துவீச்சாளர் ப்ரவீன் ஜயவிக்ரமவின் அபார பந்துவீச்சு பிரதியுடன், இலங்கை அணி மிகச்சிறந்த முன்னிலையை பெற்றுள்ளது. 

இன்றைய தினம் களமிறங்கிய இலங்கை அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 493 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்த, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 251 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

இரண்டாவது நாளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஓசத, டிக்வெல்ல

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், ரமேஷ் மெண்டிஸ், ப்ரவீன் ஜயவிக்ரம, விஷ்வ பெர்னாண்டோ

பங்களாதேஷ் அணி

தமிம் இக்பால், சயிப் ஹசன், நஜ்முல் ஹுசைன் செண்டோ, மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகூர் ரஹீம், லிடன் டாஸ், மெஹிடி ஹாசன், தாஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமட், அபு ஜெயட், சொரிபுல் இஸ்லாம்

இலங்கை அணிசார்பில் நேற்றைய தினம் ஆட்டமிழக்காமல் இருந்த நிரோஷன் டிக்வெல்ல மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் இன்றைய தினம் துடுப்பெடுத்தாட களமிறங்கினர். இருவரும் வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்பட்டதில், ரமேஷ் மெண்டிஸ் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இலங்கை அணி 493 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு, தமிம் இக்பால் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். எனினும், மறுமுனையில் களமிறங்கிய சயிப் ஹசன் மற்றும் நஜ்முல் ஹுசைன் சென்டோ ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, தன்னுடைய டெஸ்ட் அரைச்சதத்தை கடந்த தமிம் இக்பால், 70 ஓட்டங்களை பெற, போட்டியில் மதியபோசன இடைவேளை வழங்கப்பட்டது.

தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க தொடங்கினர். குறிப்பாக புதுமுக வீரர் ப்ரவீன் ஜயவிக்ரம, தமிம் இக்பாலை 92 ஓட்டங்களுடனும், முஷ்பிகூர் ரஹீமை  40 ஓட்டங்களுடனும் வெளியேற்றினார். இதனால், தேநீர் இடைவேளையின் போது. பங்களாதேஷ் அணி 214 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றிருந்த போதும், தேநீர் இடைவேளைக்கு பின்னர் பங்களாதேஷ் அணி, முழுமையாக தடுமாறியது. 49 ஓட்டங்களை பெற்றிருந்த மொமினுல் ஹக், அரைச்சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், பங்களாதேஷ் அணி வெறும் 251 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், இலங்கை அணியின் அறிமுக பந்துவீச்சாளர் ப்ரவீன் ஜயவிக்ரம தன்னுடைய கன்னி 5 விக்கெட் பிரதியை பதிவுசெய்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவருக்கு அடுத்தப்படியாக ரமேஷ் மெண்டிஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டெஸ்ட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டிய திமுத், திரிமான்ன

ப்ரவீன் ஜயவிக்ரம, அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் பிரதியை கைப்பற்றிய 6வது இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனைப்பட்டியலில் இணைந்துக்கொண்டார். அதேநேரம், தங்களுடைய 2வது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி ஆட்டநேர நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 17 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், 259 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…