இலங்கை சிரேஷ்ட வீரர்களுக்கு எதிரான அணியில் சிராஸ், வியாஸ்காந்த்

Charity Match – Sri Lanka Greats XI vs Team Sri Lanka

249

இலங்கை சிரேஷ்ட வீரர்கள் பதினொருவர் அணியுடனான கண்காட்சி T20  போட்டிக்கான இலங்கை அணியில் யாழ்பாணத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்் மற்றும் மடவளையைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளரான மொஹட் சிராஸ் ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளார். 

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸுக்கு எதிராக செயற்படுவதற்காக நிதி திரட்டும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கையின் சிரேஷ் வீரர்கள் பதினொருவர் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையிலான கண்காட்சி T20 போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி கண்டி பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்

இலங்கை தேசிய அணியுடன் மோதும் லெஜண்ட்ஸ் அணி ; திகதி அறிவிப்பு

கொரேனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டியை நேரடியாக கண்டுகளிப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள போதிலும், நேரடி ஒளிபரப்பை தேசிய தொலைக்காட்சி வாயிலான பார்ப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் சிரேஷ் வீரர்கள் பதினொருவர் அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சனத் ஜயசூரிய செயற்படவுள்ளதுடன், 1992ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய அரவிந்த டி சில்வா, உபுல் தரங்க, உப்புல்ந்தன, சாமர சில்வா, நுவன் குலசேகர, தம்மிக்க பிரசாத், மலிந்த வர்ணபுர, சமன் ஜயரத்ன, ஜெஹான் முபாரக், திலின துஷா மிரண்டோ மற்றும் இந்திக்க டி சேரம் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்

அதேபோல, தற்போது நடைபெற்று வருகின்ற பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் வர்ணனையளார்களாக செயற்பட்டு வருகின்ற பர்வீஸ் மஹ்ரூப்  இலங்கை சிரேஷ் வீரர்கள் பதினொருவர் அணியுடன் இணைந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுஇவ்வாறிருக்க, இலங்கை சிரேஷ் வீரர்கள் பதினொருவர் அணியின் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஹஷான் திலகரத்ன செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் அணியைப் பொறுத்தமட்டில் இலங்கை வளர்ந்து வரும் அணி மற்றும் இலங்கை அபிவிருத்தி அணிகளில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

இதன்படி, இலங்கை T20 அணியின் தலைவரான தசுன் ஷானக்க தலைமையிலான இலஙகை அணியில் அணியின் நட்சத்திர வீரர்களான திசர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, அவிஷ் பெர்னாண்டோ, இசுரு உதான, சதீர சமரவிக்ரம, பானுக ராஜபக், ரமேஷ் மெண்டிஸ், விஜயகாந்த் வியாஸ்காந்த், மொஹமட் சிராஸ், தனன்ஜய லக்‌ஷான், அஷேன் பண்டார, ஷிரான் பெர்னாண்டோ, மஹேஷ் தீக்ஷன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணியில் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவனான விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் கண்டி மடவளை மதீனா மத்திய கல்லூரியின் பழைய மாணவனான மொஹமட் சிராஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.

இதில் அண்மையில் நடைபெற்ற அங்குரார்ப்பண லங்கா ப்ரிமியர் லீக் T20 தொடரில் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காகவும், மொஹமட் சிராஸ் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்காகவும் விளையாடியிருந்தனர்

இலங்கை – இலங்கை லெஜண்ட்ஸ் இடையிலாக போட்டி வேண்டாம் – டில்ஷான்

இதில் குறிப்பாக, இம்முறை இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) ஏலப்பட்டியலில் இலங்கை சார்பில் வியாஸ்காந்த் தனது பெயரை பதிவுசெய்திருந்தார்.

அதுமாத்திரமின்றி, ஏராளமான தேசிய வீரர்கள் IPL ஏலத்தில் தமது பெயரை பதிந்திருந்தாலும் இறுதியில் ஏலத்துக்கு இணைக்கப்பட்ட 9 பேர்கொண்ட குறும்பட்டியலில் விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயர் இடம்பெற்றிருந்தமை சிறப்பம்சமாகும். எனினும், இலங்கை வீரர்கள் யாரும் ஏலத்தில் கொள்வனவு செய்யப்படவில்லை. 

எனவே, எதிர்வரும் 4ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள இலங்கை சிரேஷ் வீரர்கள் அணியுடனான கண்காட்சி T20 போட்டியில் விஜயகாந்த் வியாஸ்காந்த்துக்கும், மொஹமட் சிராஸுக்கும் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com  சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…