வசீமின் ஹெட்ரிக்கோடு நியு யங்ஸை வீழ்த்திய அப் கண்ட்ரி லயன்ஸ்

Super League 2021

128

அங்குரார்ப்பண சுபர் லீக் தொடரின் இரண்டாம் வாரத்திற்கான இறுதி இரண்டு ஆட்டங்களும் ஞாயிற்றுக்கிழமை (25) சுகததாச அரங்கில் இடம்பெற்றன. இதில் ரட்னம் மற்றும் ரெட் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதல் கோல்கள் எதுவும் இன்றி சமநிலையில் நிறைவுபெற, நியு யங்ஸ் அணியை அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் 4-1 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வென்றனர். 

ரெட் ஸ்டார்ஸ் கா.க எதிர் ரட்னம் வி.க 

ரெட் ஸ்டார்ஸ் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையிலும், ரட்னம் அணி முதல் போட்டியை சமநிலையில் முடித்த நிலையிலும் இன்றைய இந்த மோதலுக்குள் களம் கண்டது. 

தமது முதல் போட்டியில் அப் கண்ட்ரி அணிக்கு எதிராக 5 பின்கள வீரர்களை பயன்படுத்தி தடுப்பாட்டம் மேற்கொண்ட விதத்திலேயே இன்றைய போட்டியின் ஆரம்பத்திலும் ரட்னம் அணி விளையாடியது. 

சீ ஹோக்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றி: டிபெண்டர்ஸ் – புளூ ஈகல்ஸ் மோதல் சமநிலை

இதனால் ரெட் ஸ்டார்ஸ் வீரர்களுக்கு முதல் பாதியி்ல் கோல் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. 

எனினும், இரண்டாம் பாதியில் ரட்னம் வீரர்கள் தடுப்பாட்டத்தை மாத்திரம் மேற்கொள்ளாமல் கோலுக்கான முயற்சிகளையும் மேற்கொண்டது. எனினும், குறித்த பாதியிலும் எந்தவொரு அணியினரும்  கோல் பெறாத காரணத்தினால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. 

முழு நேரம்: ரெட் ஸ்டார்ஸ் கா.க 0 – 0 ரட்னம் வி.க

அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க எதிர் நியு யங்ஸ் கா.க  

தமது முன்னயை போட்டியில் அப் கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் சமநிலையான முடிவைப் பெற்றிருக்க, நியு யங்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வி கண்டிருந்தது. 

இந்நிலையில், இந்த போட்டி ஆரம்பமாகி 20ஆவது நிமிடத்தில் நிதர்சனின் பந்துப் பரிமாற்றத்தினால் வசீம் ராசிக் அப் கண்ட்ரி அணிக்கான முதல் கோலைப் பெற்றார். எனினும், அடுத்த 3 நிமிடங்களில் ஜோய் நிதுசன் நியு யங்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார். எனவே, முதல் பாதி தலா ஒரு கோல்களுடன் சமநிலையடைந்தது. 

கொழும்பு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை சுவைத்த புளூ ஸ்டார்

எனினும், இரண்டாவது பாதியில் 66  மற்றும் 83ஆவது நிமிடங்களில் வசீம் ராசிக் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்று தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார். இது ரெட் ஸ்டார்ஸ் வீரர் ரஹுமானைத் தொடர்ந்து இந்த தொடரில் பெறப்படும் இரண்டாவது ஹெட்ரிக் கோலாகும். 

தொடர்ந்து போட்டியின் உபாதையீடு நேரத்தில் அப் கண்ட்ரி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோல் காப்பாளரும், அணியின் தலைவருமான சுஜான் பெரேரா பெற்று அதனை கோலாக்கினார். 

எனவே, போட்டி நிறைவில் 4-1 கோல்களினால் வெற்றி பெற்ற அப் கண்ட்ரி லயன்ஸ் இந்த தொடரில் தமது முதல் வெற்றியை சுவைத்தது. நியு யங்ஸ் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். 

முழு நேரம்: அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க 4 – 1 நியு யங்ஸ் கா.க  

  • கோல் பெற்றவர்கள் – மொஹமட் அகீல் 78‘
  • அப் கண்ட்ரி லயன்ஸ் கா.க – வசீம் ராசிக் 20‘, 66‘, 83‘, சுஜான் பெரேரா 90+3‘
  • நியு யங்ஸ் கா.க  – ஜோய் நிதுசன் 23‘ 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<