திமுத்தின் கன்னி இரட்டைச்சதத்துடன் இமாலய ஓட்டங்களை எட்டிய இலங்கை

Bangladesh tour of Sri Lanka 2021

174

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, திமுத் கருணாரத்னவின் கன்னி இரட்டைச்சதம் மற்றும் தனன்ஜய டி சில்வாவின் சதம் என்பவற்றின் உதவியுடன் 3 விக்கெட்டுகளை இழந்து 512 ஓட்டங்களை குவித்துள்ளது.

நேற்றைய தினம் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, ஆட்டநேர நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் களமிறங்கியது.

திமுத், திரிமான்னவின் அரைச்சதங்களுடன் முன்னேறும் இலங்கை

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ

பங்களாதேஷ் அணி

தமிம் இக்பால், சயிப் ஹசன், நஜ்முல் ஹுசைன் செண்டோ, மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகூர் ரஹீம், லிடன் டாஸ், மெஹிடி ஹாசன், தாஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமட், அபு ஜெயட், எப்டொட் ஹுசைன்

களத்தில் இருந்த திமுத் கருணாரத்ன சதத்தை நெருங்கியிருந்ததுடன், தனன்ஜய டி சில்வா 26 ஓட்டங்களை பெற்றிருந்தவாறு களமிறங்கியிருந்தார். இதில், திமுத் கருணாரத்ன தன்னுடைய 11வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்ய, தனன்ஜய டி சில்வா அரைச்சதம் கடந்தார்.

இவர்கள் இருவரும் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தாடியதுடன், மதியபோசன இடைவேளையின் போது, இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 331 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

மதியபோசன இடைவேளையின் பின்னரும், தனன்ஜய டி சில்வா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் சிறப்பாக ஆடினர். பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்காக எந்த வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. இலகுவாக ஓட்டங்களை குவித்த இருவரில், தனன்ஜய டி சில்வா தன்னுடைய 7வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார்.

மதியபோசன இடைவேளையில் இருந்து தேநீர் இடைவேளைவரை விக்கெட்டுக்கள் வீழ்த்தப்படாமல் இருக்க, இலங்கை அணி 442 ஓட்டங்களை குவித்ததுடன், தனன்ஜய டி சில்வா 134 ஓட்டங்களை கடந்ததுடன், திமுத் கருணாரத்ன 184 ஓட்டங்களை பெற்று, கன்னி டெஸ்ட் இரட்டைச்சதத்தை நோக்கி பயணித்தார். எனினும், தேநீர் இடைவேளையின் பின்னர், போட்டியானது போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும் மீண்டும் ஆரம்பித்த இந்தப்போட்டியில், திமுத் கருணாரத்ன தன்னுடைய கன்னி டெஸ்ட் இரட்டைச்சதத்தை பதிவுசெய்து சாதித்தார். இதற்கு முன்னர் கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 196 ஓட்டங்களை பெற்றிருந்த இவர், முதன்முறையாக இரட்டை சதத்தை கடந்தார்.

மறுமுனையில் இருந்த தனன்ஜய டி சில்வா டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய இரண்டாவது 150 ஓட்டங்களை பதிவுசெய்து, திமுத் கருணாரத்னவுக்கு பங்களிப்பு வழங்கினார். இவர்கள், இருவரும் இலங்கை அணிக்கான பலமான துடுப்பாட்டத்தை வழங்க, இன்றைய ஆட்டநேரமானது போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டது.

சதமடித்து பங்களாதேஷ் அணிக்கு பலம் கொடுத்த மொமினுல், நஜ்முல்

ஆட்டம் நிறுத்தப்படும் போது, திமுத் கருணாரத்ன 234 ஓட்டங்களை பெற்றிருக்க, தனன்ஜய டி சில்வா 154 ஓட்டங்களை பெற்றிருந்தார். அத்துடன், இவர்கள் இருவரும் 4வது விக்கெட்டுக்காக 322 ஓட்டங்களை பகிர்ந்துள்ளனர். இந்த ஓட்ட எண்ணிக்கையானது இலங்கை அணி சார்பாக 4வது விக்கெட்டுக்காக பகிரப்பட்ட இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியுள்ளது. இதற்கு முதல் கடந்த 2009ம் ஆண்டு மஹேல ஜயவர்தன மற்றும் திலான் சமரவீர ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 437 ஓட்டங்களை பதிவுசெய்திருந்தனர்.

இதேவேளை, இலங்கை அணியானது, பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு இன்னும் 29 ஓட்டங்களை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…