T20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

209
BCCI picks nine venues

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதல் தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி சம்பியன் பட்டம் பெற்றது.

>> ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் மீண்டும் ஒத்திவைப்பு

இதுவரை 6 தடவைகள் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகள் 2 தடவையும் (2012, 2016), இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு தடவையும் T20 உலகக் கிண்ண சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற வேண்டிய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரத்து செய்யப்பட்டது.

இதன்காரணமாக அடுத்த ஆண்டு அந்நாட்டில் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதனிடையே, 7ஆவது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 45 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதேநேரம், இந்தப் போட்டி நடைபெறும் இடங்களும், திகதி விபரங்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

>> IPL கிரிக்கெட்டில் தடம்பதித்த இந்த சேத்தன் சக்காரியா யார்?

இந்த நிலையில், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்களின் விபரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஆலோசிக்க பிசிசிஐ உயர்மட்டக் குழு நேற்று காணொளி மூலம் கூடியது. இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விபரங்கள் குறித்து பிசிசிஐ முக்கிய அதிகாரி கூறுகையில்,

“உலகக் கிண்ண T20 போட்டியை நடத்தும் இடங்கள் குறித்து பிசிசிஐ உயர்மட்டக் குழுவில் விவாதிக்கப்பட்டது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஒன்பது இடங்களில் உலகக் கிண்ண T20 போட்டியை நடத்தலாம் என ஆலோசனை தெரிவித்தார். இறுதிப் போட்டியை அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

>> ICC இன் மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு

இதன்படி, T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை சென்னை, அஹமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், லக்னோ, தர்மசாலா ஆகிய இடங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர சிங் மோடி மைதானத்தில்தான் T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<