பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை உத்தேச குழாத்தில் புதுமுக வீரர்

Bangladesh tour of Sri Lanka 2021

246

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான உத்தேச இலங்கை குழாத்தில், முதன்முறையாக இடதுகை  சுழல் பந்துவீச்சாளர் ப்ரவீன் ஜயவிக்ரம இணைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தேர்வுக்குழு,  பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடவுள்ள 17 பேர்கொண்ட இலங்கை குழாத்தை தெரிவுசெய்துள்ளது.

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரை இழக்கும் பெதும் நிஸ்ஸங்க?

குறித்த இந்த குழாத்தில் இறுதியாக நடைபெற்ற கழகங்களுக்கு இடையிலான 50 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய ப்ரவீன் ஜயவிக்ரம இணைக்கப்பட்டுள்ளார். மொத்தமாக 10 முதற்தர போட்டிகளில் விளையாடியுள்ள  இவர், 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்காரணமாக முதன்முறையாக இலங்கை டெஸ்ட் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

அதேநேரம், கழக கிரிக்கெட் தொடரின் போது, தோற்பட்டை உபாதைக்கு உள்ளாகிய குசல் மெண்டிஸ், பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இவர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இணைக்கப்பட்டிருக்கவில்லை.

அதேநேரம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருடன், நாடு திரும்பியிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ், பங்களாதேஷ் அணிக்கு எதிரான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி, உபாதைக்குள்ளாகிய லசித் எம்புல்தெனிய இந்த தொடருக்கான குழாத்தில் இணைக்கப்படவில்லை.

எனினும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய ஏனைய வீரர்கள், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தொடைப்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க, பங்களாதேஷ் அணிக்கு எதிரான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை உத்தேச டெஸ்ட் குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), தசுன் ஷானக, பெதும் நிஸ்ஸங்க, ஓசத பெர்னாண்டோ, லஹிரு திரிமான்ன, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் டிக்வெல்ல, ரொஷேன் சில்வா, தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், விஷ்வ பெர்னாண்டோ, சுரங்க லக்மால், அசித பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, ப்ரவீன் ஜயவிக்ரம

Note – இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக குழாத்தை இதுவரை அறிவிக்கவில்லை.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<