வீரர்களை மையமாகக் கொண்ட விளையாட்டு மூலோபாயம் அமுல்படுத்தப்படும் – மஹேல ஜயவர்தன

208

இலங்கையில் உள்ள திறமையான வீரர்களுக்கு சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்கின்ற பாரிய வேலைத்திட்டமொன்றை விளையாட்டுப் பேரவையுடன் இணைந்து விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. 

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டுப் பேரவையினால் இந்த வேலைத்திட்டம் குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால தவணைகள் முறையில் முன்னெடுக்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதன்படி, தேசிய விளையாட்டுப் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்றுமுன்தினம் (03) விளையாட்டுத்துறையின் அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

பல்வேறு விளையாட்டு அனுபவமுள்ள நிபுணர்களால் ஆன புதிய விளையாட்டுப் பேரவையினால் அனுபவம் மற்றும் அறிவின் அடிப்படையில் எதிர்கால விளையாட்டை உருவாக்க மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த ஆண்டுக்கான விளையாட்டு மூலோபாயம் – 2021 தயாரிக்கப்பட்டுள்ளது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அத்துடன், புதிய வேலைத்திட்டத்தின் படி, இந்த ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சின் செலவில் 20 சதவீதம் நேரடியாக வீரர்களுக்காக செலவிடப்படும் என்று நாமல் ராஜபக்ஷ கூறியிருந்தார்.  

அதன்படி, விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்காக ஒரு வருடத்தில் ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய தொகையாக இது வரலாற்றில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய விளையாட்டு பேரவையின் 2021இற்கான பாதீடு மஹேலவினால் சமர்ப்பிப்பு

இந்த வைபவத்தில் கலந்து கொண்ட தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவர் மஹேல ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில்

விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்காக அரசாங்கத்தின் ஒதுக்கீட்டில் 20 சதவீதத்தை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ஒதுக்குவது ஒரு புரட்சிகர தீர்மானம் ஆகும். வீரர்களின் வளர்ச்சிக்கு நேரடியாக நிதி ஒதுக்க முன்வந்த விளையாட்டுத்துறை அமைச்சரின் முடிவைப் பாராட்ட வேண்டும்

உலகில் பல நாடுகள் விளையாட்டுக்களில் கவனம் செலுத்துவதன் மூலமும் பணத்தை செலவழிப்பதன் மூலமும் தான் விளையாட்டில் முன்னணி நாடுகளாக வலம் வந்துள்ளன. இந்தப் பணம் வீரர்களின் பயிற்சியில், மனிதவள மேம்பாடு, ஆளுமை மேம்பாடு மற்றும் பயிற்சியாளர் மேம்பாடு ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுகின்றது. இதனால் விளையாட்டு வீரர்கள் முன்வர இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்

அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வது முக்கியம். ஏனென்றால் இறுதியில் மைதானத்திற்கு செல்வது நாங்கள் அல்ல. நாங்கள் அவர்களுக்கு ஒரு முழுமையான மேடையையும், சிறந்த வழிகாட்டலையும் வழங்குகிறோம் என்று மஹேல ஜயவர்தன கூறினார்.

2021இல் வடக்கின் விளையாட்டிற்கு பாரிய வேலைத்திட்டங்கள்

புதிய திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் நான்கு தேசிய விளையாட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்படும், அதே நேரத்தில் 12 மாவட்ட விளையாட்டுத் தொகுதிகள், பாடசாலை நீச்சல் தடாகங்ளுடனான எட்டு விளையாட்டு மைதானங்கள் மற்றும் 22 கரப்பந்தாட்ட மைதானங்கள் நிர்மாணிக்கப்படும்

அத்துடன், தேசிய உயர் செயல்திறன் உத்திகள் மற்றும் விளையாட்டு வகைகளின் அமைப்பை உருவாக்கவும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டுத் தொகுதியை தேசிய விளையாட்டு மையமாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், 9 மாகாணங்களில் மாகாண மத்திய விளையாட்டு மையங்கள் நிறுவப்படும். இவை அனைத்தும் செயற்கை ஓடு பாதைகளுடன் முழுமையாக இடம்பெறும் விளையாட்டு மையங்களாக இருக்கும்.

விளையாட்டு திறன் மேம்பாட்டு மத்திய நிலையமாகும் கிளிநொச்சி விளையாட்டுத் தொகுதி

தேசிய உயர் செயல்திறன் உத்திகள் மற்றும் விளையாட்டுக் குழு அமைப்பின் கீழ், ஒலிம்பிக், பராலிம்பிக், ஆசிய, பொதுநலவாய, ஆசிய பரா மற்றும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லக்கூடிய விளையாட்டு நிகழ்ச்சிகள் முதல் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இரண்டாவது பிரிவின் கீழ் அந்த விளையாட்டு விழாக்களில் சிறந்து விளங்குகின்ற 8 தனிநபர் நிகழ்ச்சிகள் மற்றும் 6 குழு நிலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்

மூன்றாவது பிரிவின் கீழ் வளர்ந்து வரும் வீரர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது பாடசாலை மட்டத்திலிருந்து மூன்று வயதுப் பிரிவின் கீழ் விளையாட்டு வீரர்களை தேசிய மட்டத்துக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம். இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட பிற விளையாட்டுகளை நான்காவது பிரிவின் கீழ் முன்னேற்றுவதில் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறும் மெய்வல்லுனர்களுக்கு மில்லியன் தொகை பரிசு

இதேவேளை, குறித்த வைபவத்தில் தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர்களான குமார் சங்கக்கார மற்றும் ஜூலியன் போலிங், இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ மற்றும் தேசிய பளுதூக்குதல் பயிற்சியாளர் ஆர்.பி.திசநாயக்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<