சென்னை அணியுடன் இணையும் ரொபின் உத்தப்பா!

Indian Premier League 2021

178
IPLT20.COM

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் பரிமாற்றத்தின் மூலம், கடந்த ஆண்டு ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் விளையாடிய ரொபின் உத்தப்பா, சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடருக்கான வீர்கள் தக்கவைப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்துக்கொண்டு, ஏனைய வீரர்களை அணியிலிருந்து விடுவித்திருந்தது.

குறித்த தினத்தில் வீரர்கள் விடுவிக்கப்பட்ட அதேநேரம், வீரர்கள் பரிமாற்றமும் நடைபெற்றிருந்தது. இதில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியிலிருந்து அக்ஷர் பட்டேல் மற்றும் டேனியல் சேம்ஸ் ஆகியோர், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மாற்றப்பட்டிருந்தனர்.

பங்களா டைகர்ஸ் அணியின் பயிற்சியாளராக திலின கண்டம்பி

இந்தநிலையில், நேற்றைய தினம் வெளியாகிய அறிவிப்பின்படி, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பா, சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் அனைத்து பருவகாலங்களிலும் விளையாடியுள்ள ரொபின் உத்தப்பா 189 போட்டிகளில் விளையாடி 24 அரைச்சதங்களுடன் 4607 ஓட்டங்களை குவித்துள்ளார். இவர், 2014ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், குறித்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தையும் வெற்றிக்கொண்டது.

எனினும், கடந்த இரண்டு பருவங்களாக ரொபின் உத்தப்பா  துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறிவருகின்றார். 2019ம் ஆண்டு 282 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்ததுடன், 2020ம் ஆண்டு ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். எனினும், கடந்த ஆண்டும் 196 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடுத்திருந்தார்.

இந்தநிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது தங்களுடைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷேன் வொட்சனை இழந்துள்ளதுடன், முரளி விஜய் விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே, ரொபின் உத்தப்பாவை அணியில் இணைக்க சென்னை அணி தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட ரொபின் உத்தப்பா, “ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் இணைந்திருந்தமை மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தற்போது எனது புதிய அணியாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

இதேவேளை, ஐ.பி.எல். தொடரில் வீரர்கள் பரிமாற்றமானது திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களும் வீரர்கள் பறிமாற்றத்தின் மூலம் ஏனைய அணிகளுக்கு செல்லமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<