இங்கிலாந்து பதினொருவரில் களமிறங்கும் ஜேம்ஸ் அண்டர்சன்

England Tour of Sri Lanka 2021

132
AFP

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (22) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட்டுக்கு ஓய்வளிப்பதற்கு இங்கிலாந்து அணி முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்துள்ளது

இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய ஸ்டுவர்ட் ப்ரோட், முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்

இதன்படி, இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டுவர்ட் ப்ரோட்டுக்குப் பதிலாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் இங்கிலாந்து அணியின் இறுதி பதினொருவரில் இடம்பெறுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மோசமான நாடு அல்ல – அண்டர்சன்

இங்கிலாந்து அணியின் சிரேஷ் வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் இலங்கைக்கு வந்து விளையாடியிருந்தார். ஆனாலும் குறித்த இரண்டு சுற்றுப்பயணங்களிலும் அவரால் எதிர்பார்த்தளவு சோப்பிக்க முடியாமல் போனது.

எனினும், சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இலங்கை வந்த அவர், இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்களின் தலைவராக முன்நின்று செயற்பட்டு காலி டெஸ்டில் 72 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில், இறுதியாக 2018இல் இடம்பெற்ற சுற்றுப்பயணத்தில், ஜேம்ஸ் அண்டர்சன் மீண்டும் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார். அவர் இரண்டு போட்டிகளில் 41 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார்.

Video – இலங்கை டெஸ்ட் குழாத்திலிருந்து Dimuth, Kusal Mendis அதிரடி நீக்கம்..!

எனவே, நாளை (22) ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் அண்டர்சன் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இல்லாவிடின் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் அவர் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

38 வயதான ஜேம்ஸ் அண்டர்சன், இதுவரை 157 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 600 விக்கெட் மைல்கல்லை எட்டிய முதலாவது வேகப் பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை கடந்த வருடம் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இங்கிலாந்து அணியுடன் இணையும் மொயின் அலி

இதனிடையே, கொவிட் – 19 வைரஸ் காரணமாக சுய தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் இங்கிலாந்து அணியுடன் இணைந்துகொண்ட மொயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவருக்கும் நாளை ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பதினொருவர் அணி விபரம் 

ஜோ ரூட் (தலைவர்), டொமினிக் சிப்லி, ஸெக் க்ரௌவ்லி, ஜொன்னி பெயாஸ்டோ, டான் லோரன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரண், டொமினிக் பெஸ், ஜெக் லீச், மார்க் வூட், ஜேம்ஸ் அண்டர்சன்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<