உள்ளூர் T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் மாலிங்க

301

ஐ.பி.எல். மற்றும் எல்.பி.எல். போன்ற கிரிக்கெட் போட்டிகளில் (Franchise Tournaments) இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க குறிப்பிட்டிருக்கின்றார்.

>>ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் கைகோர்க்கும் குமார் சங்கக்கார<<

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் குழாத்தில் தன்னை தக்க வைக்க வேண்டாம் எனக் கூறிய லசித் மாலிங்க, இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்தே லசித் மாலிங்கவின் ஓய்வு  முடிவும் வெளியாகியிருக்கின்றது. 

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக 12 வருடங்கள் திகழ்ந்த லசித் மாலிங்கவே, ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை (170) கைப்பற்றிய பந்துவீச்சாளராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

லசித் மாலிங்கவின் ஓய்வு குறித்து கருத்து வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி இவ்வாறு தெரிவித்திருந்தார். 

“லசித் மாலிங்க (கடந்த) 12 வருடங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடித்தளமாக இருந்தார். அவரை இன்னும் 5 வருடங்களுக்கு நான் அணிக்காக உபயோகம் செய்த எதிர்பார்த்த போதும் அவரின் (ஓய்வு) முடிவுக்கு மதிப்பளிக்கின்றேன்.”  

இதேநேரம், தான் ஓய்வு பெறுவது குறித்து லசித் மாலிங்க வெளியிட்ட கருத்து இவ்வாறு அமைந்திருந்தது. 

“நான் குடும்பத்துடன் கலந்தாலோசித்த பின்னர், இதுவே எல்லாவகையான (உள்ளூர் T20) போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதற்கான சரியான தருணம் எனக் கருதுகின்றேன். அடுத்த ஆண்டில் கொரோனா வைரஸ் காரணமாக உலகில் உருவாகிய பயணத் தடைகள் எனது தனிப்பட்ட ரீதியான சூழ்நிலைகளை பாதிப்பதால் இப்போதே தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலை இருக்கின்றது.”  

>>மும்பை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் லசித் மாலிங்க!<<

“மும்பை இந்தியன்ஸ் அணி அதன் குடும்பம் போல என்னை பார்த்துக் கொண்டது. மைதானத்திற்கு வெளியே, உள்ளே என அனைத்து சந்தர்ப்பங்களிலும் 100% ஆதரவு அவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்தது. அதோடு, மைதானத்திற்குள் நுழைந்த பின்னர் எனது இயற்கையான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் சுதந்திரமும் அங்கே இருந்தது.” 

லசித் மாலிங்கவின் செய்தி ஒரு பக்கம் இருக்க, இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் பங்கெடுக்கவிருக்கும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இலங்கை அணியினை சேர்ந்த இசுரு உதானவினை தமது அணிக் குழாத்தில் இருந்து விடுவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<