இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து திமுத் கருணாரத்ன நீக்கம்?

427

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இலகு வெற்றியினைப் பதிவு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இந்தப்போட்டியில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கட்டை விரல் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக நீக்கப்பட்டார். அத்துடன், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமால் அணியின் தலைமை பொறுப்பை ஏற்று, அணியை வழிநடத்தினார்.

இந்தநிலையில், முதல் போட்டியின் நிறைவில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில், திமுத் கருணாரத்ன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார்.

“திமுத் கருணாரத்ன விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு.  தென்னாபிரிக்க தொடரிலிருந்து எமது உபாதைகளின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளன. திமுத் விளையாடுவாதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ளன. அடுத்த இரண்டு நாட்களில் இதுதொடர்பில் தீர்மானிக்கப்படும்“

அதேநேரம், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஓட்டங்களை பெறத்தவறிவரும், குசல் மெண்டிஸ் தொடர்பிலும் மிக்கி ஆர்தர் கருத்து வெளியிட்டார். தென்னாபிரிக்க தொடரில் ஓட்டங்களின்றி திரும்பிய குசல் மெண்டிஸ், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் ஓட்டங்களை பெறவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் 15 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.

“குசல் மெண்டிஸ் அற்புதமான வீரர். இவர், எதிர்காலத்தில் அணிக்காக அதிக ஓட்டங்களை பெறக்கூடியவர்.  அவருக்கு வாய்ப்பு கொடுப்பது தொடர்பில் அடுத்த இரண்டு நாட்களில் சிந்திக்கப்படும். குறிப்பாக அவர் மிக அதிக அழுத்தத்தில் உள்ளார். 

கடந்த தொடரில், ஓட்டங்களை குவிக்க தவறியதால், அவருக்கு சாதகமான இந்த ஆடுகளங்களில், அவரின் ஓட்டக்குவிப்பை ஆரம்பிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

சர்வதேச துடுப்பாட்ட வீரர் ஒருவர் தொடர்ந்து ஓட்டங்களை குவிக்க தவறினால், அழுத்தம் எவ்வாறு இருக்கும் என்பதை அறியமுடியும். ஆனால், அதிலிருந்து வெளியில் வருவதுதான் முக்கியமான விடயம். எனவே, அடுத்த இரண்டு நாட்களில் குசல் மெண்டிஸிற்கு வாய்ப்பு கொடுப்பது தொடர்பில்  முடிவு செய்யப்படும்” என மிக்கி ஆர்தர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22ம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<