எண்ணம். வசந்தம். மாற்றம்.

படைப்பதை பகிர்தல் பற்றிய குறிப்புகள்

(இந்தப் பதிவை வாசிக்க 2 நிமிடங்களும் 43 செக்கன்களும் தேவைப்படும்)

2006 ஆம் ஆண்டு தொடக்கம் நிறம் வலைப்பதிவில் பதிவுகளை எழுதி வருகிறேன். இருந்தாலும், பதிவுகளின் நீளத்தைக் கண்டு நண்பர்கள் வாசிக்காமல் கடந்து செல்கிறார்களோ என்ற கேள்வி எனக்குள் எப்போதும் ஓடிக் கொண்டிருந்தது.

வலைப்பதிவுகளில் எழுதப்படும் பதிவுகளை Scroll செய்து பார்த்துவிட்டே பலரும் வாசிக்கவே தொடங்குகின்றனர். பதிவின் நீளம் கொஞ்சம் அதிகமாகத் தோன்றினால், “ஐயகோ, என்னைக் காப்பாற்றுங்கள்” என்றவாறு வலைப்பக்கத்தை விட்டு, வேறு பக்கமாகிச் செல்கின்றனர் என்று நான் நம்பினேன்.

இது உண்மைதானா என்று பார்த்தபோது, ஜெகொப் நீல்சன் என்கின்ற இணைய பயனர்களின் வழக்கங்கள் பற்றி ஆராயும் விற்பன்னர் 2008இல் செய்த ஆய்வின் முடிவுகள், இந்த நிலை உண்மையென உறுதிப்படுத்தியது.

ஒரு வலைப்பதிவிற்கு வரும், வாசகர் அங்குள்ள பதிவொன்றின் 18 சதவீதத்தை மட்டுமே வாசிக்கிறார். எவ்வளவுதான் வலைப்பதிவர்கள் சிரமப்பட்டு எழுதி, சரி பிழை பார்த்து, தொகுத்து வெளியிடும் பதிவுகளின் முதல் இரண்டு பந்திகள் மட்டுந்தான் பொதுவாக அநேகமானோரால் வாசிக்கப்படுகின்றன என்பதே அந்த ஆய்வின் முடிவாகவிருந்தது.

அது 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடுப்பகுதி.

இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்க்கலாம்? என்று யோசிக்கலானேன்.

வாசகர்கள் வாசிக்காமல் கடந்து செல்ல முதன்மைக் காரணமாக பதிவின் நீளத்தைக் கண்டு அவர்கள் பயப்படுவதைச் சொல்லலாம். ஆக, இந்தப் பயத்தை வாசகர்களிடமிருந்து போக்கி, எப்படி அவர்களை 18 சதவீதத்திற்கும் அதிகமாக வாசிக்கச் செய்யலாம் என்ற கேள்விக்கு விடை காண வேண்டும் என்பதில் தேட்டம் கொண்டேன்.

ஆக, பதிவுகள் நீளமாகத் தோன்றினாலும், இந்தப் பதிவை வாசிக்க உங்களுக்கு இவ்வளவு நேரம் தான் தேவைப்படும் என்பதை வாசகருக்கு ஆரம்பத்திலேயே சொல்லிவிடும் போது, “இரண்டு நிமிடத்துக்குள் இதை வாசிக்கலாமா?” என்று தன்னை கேட்டுக் கொண்டே, எந்த அலுப்புமில்லாமல் வாசித்து முடிக்க ஆரம்பிக்கிறார்.

ஆக, வாசிக்கத் தேவையான நேரத்தை ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்தில் சேர்ப்பது உசிதமானது. ஆனால், வாசிக்கத் தேவையான நேரத்தை எவ்வாறு கணித்துக் கொள்வது என்ற இன்னொரு கேள்வி எழுந்தது.

அதற்கு விடைகாண வேண்டுமென்று ஆராயத் தொடங்கினேன்.

பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் பிள்ளையொன்று வாசிக்கும் வேகத்திற்கும், பெரியோர்கள் வாசிக்கும் வேகத்திற்கு அவ்வளவு வித்தியாசமில்லை. மிகவும் வேகமாக வாசிக்கக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இங்கு பொதுமைப்பாடான வாசிப்பு வேகமாக நிமிடத்திற்கு 200 சொற்கள் கருதப்படுகிறது என்பதை பல உசாத்துணைகளின் உதவி கொண்டு அறிந்து கொண்டேன்.

அப்படியாயின், எமது பதிவிலுள்ள சொற்களின் எண்ணிக்கையை அந்த நியமமான அளவைக் கொண்டு கணிப்பு செய்வதால், பதிவை வாசிக்கத் தேவையான மொத்த நேரத்தையும் கண்டு கொள்ள முடியும். அப்படியானால், இதனை கணித்துக் கொள்ள ஏதாவது இலகுவான வழியுண்டா? என்ற கேள்வி எனக்குள் தோன்றியது.

வாசிக்கத் தேவையான நேரத்தைக் கணிக்கும் வகையில் நானொரு இணைய செய்நிரலொன்றை உருவாக்கினேன். எனது கணினியில் அதனைப் பயன்படுத்தி 2010 மார்ச் மாதம் முதல் எனது பதிவுகளில் வாசிக்கத் தேவையான நேரத்தை இணைத்தேன்.

எனது பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ள இந்த வாசிக்கத் தேவையான நேரம் பற்றி பலரும் அவதானித்து எப்படி தாங்களும் தங்கள் பதிவுகளுக்குக் கணிப்பது என்று கேட்கலானார்கள்.

ஆக, நான் பாவிக்கின்ற இந்தச் செயலி, மற்றயவர்களுக்கும் பயன்படும் என்று எண்ணி, அதன் பயனர் இடைமுகத்தை இணையச் செயலியின் பாவனை நிமித்தம் மெருகேற்றி, அனைவரும் தங்களின் பதிவுகளை வாசிக்கத் தேவையான நேரத்தை கணிக்கக் கூடிய வகையில் செய்து எனது இணையத்தளத்தில் 2010 செப்டம்பர் 4ஆம் திகதி வெளியிட்டேன். Read-o-Meter என்று அதற்கு பெயரும் வைத்தேன்.

வெளியிட்ட நாளிலிருந்து பத்து வருடங்கள் தாண்டிய நிலையிலும், இன்றும் இந்தச் செயலி பயனளிப்பதாக உலகின் பல பாகங்களிலிருந்தும் பல்வேறுபட்ட மொழிகளைப் பேசும் வெவ்வேறு தொழில்நிலைகளின் நிமித்தம் இந்தச் செயலியை பாவிக்கும் பயனர்களிடமிருந்து வரும் ட்வீட்டுகள், மின்னஞ்சல்கள் எப்போதும் ஆனந்தம் தரும் அற்புத நிகழ்வுகள்.

Read-O-Meter, உலகளவில் கொவிட்19இன் காரணமாக ஒன்லைன் வழியான கற்பித்தல் நிலைகளில் மிகவும் அதிகமாக பயன்படுவதாக, ஆசிரியர்களும் பல்கலைக்கழக பேராசியர்களும் மின்னஞ்சல் மற்றும் ட்வீட் வழியாக சொல்லியனுப்பிய போது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்து கொண்டது.

மாணவர்களுக்கு ஓர் ஒப்படையை வழங்கும் போது, அதனை வாசிக்க எடுக்கும் நேரத்தைக் கணித்து, அதற்குத் தேவையான மொத்த நேரத்தை வழங்கும் போது, ஒன்லைன் வழிக் கற்றலில் வினைத்திறனை உண்டாக்குகின்றது என்பதே அவர்களின் அவதானிப்பு.

Read-o-meter பற்றிய இன்னும் சில முக்கியமான நிகழ்வுத் தடங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகின்றேன்.

  • 21.12.2017 ஆம் திகதி அமெரிக்காவின் பிரபல நாளிதழான The Washington Post, தனது அரசியல் ஆய்வுக் கட்டுரையில் எனது செயலி Read-o-meter ஐ (http://niram.org/read) மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. (https://www.washingtonpost.com/…/to-read-the-tax-bill…/)
  • நோர்வே நாட்டின் பிரபல சஞ்சிகையான The Book இன் 2014 ஒக்டோபர் பதிப்பில் எனது செயலி Read-o-meter பற்றிய குறிப்பு வழங்கப்பட்டிருந்தது. (https://twitter.com/sainagasyda…/status/524205652491911168)
  • எனது செயலி Read-o-Meter ஆல் தாங்கள் அடையும் பயன்களை பற்றிச் ஆசிரியர்கள், பேராசியர்கள், இணைய படைப்பாக்கம் உருவாக்குநர்கள் என பலதரப்பட்ட பயனர்கள், ட்விட்டர் வழியாக சொன்னவைகளை இந்தப் பக்கத்தில் தொகுத்துள்ளேன். இங்கு காண்க. (https://www.notion.so/Read-o-Meter-What-Others-Say…)

பதிவை வாசிக்கத் தேவையான நேரத்தை கணிப்பதற்கான தகவை உண்டுபண்ணி, அதற்கான செயலியை நான் பயன்படுத்தி, மற்றவர்களோடு அவர்கள் இலவசமாகவே பயன்படுத்தும் வகையில் பகிர்ந்து கொண்டதால், அதன் பயன்கள் பல வடிவங்களிலும் நன்மை பயப்பதை எண்ணும் போது, மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு குறிப்பிட்ட செக்கனில், இந்தச் செயலியை சராசரியாக 10-15 பயனர்கள் பாவனை செய்வதாக Google Analytics இன் Realtime (Active Users Right now) புள்ளிவிபரம் சொல்வதும் இன்னொரு மகிழ்ச்சி.

மற்றயவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் விடயங்களை உருவாக்கும் போது, மகிழ்ச்சி மனதில் நிறைந்துவிடுகிறது.

படைப்போம். படைப்பதைப் பகிர்வோம்.

தாரிக் அஸீஸ்
02.12.2020

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்