பயிற்சிப் போட்டியில் சதமடித்து அசத்திய குசல் மெண்டிஸ்

957

தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரினை முன்னிட்டு இலங்கை அணி வீரர்களுக்கிடையில் நடைபெற்ற உள்ளகப் பயிற்சிப் போட்டியில் குசல் மெண்டிஸ் சதமடித்து அசத்த, சந்தூஷ் குணதிலக்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் அரைச்சதங்களைக் குவித்து வலுச்சேர்த்தனர்.

இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரினை இலக்காகக் கொண்டு அறிவிக்கப்பட்ட 22 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த 13ஆம் திகதி முதல் கண்டி பல்லேகலை மைதானத்தில் வதிவிட பயிற்சி முகாமில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை டெஸ்ட் அணி உள்ளக வீரர்களுக்கிடையிலான (பயிற்சி முகாமில் உள்ள வீரர்கள் இரண்டு அணியாகப் பிரிந்து மோதும்) இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி இன்று (20) ஆரம்பமாகியது

Video – இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இளம் வீரர்கள் | Sports Roundup – Epi 140

இதில் நாணய சுழற்சியில் வென்ற தினேஷ் சந்திமால் தலைமையிலான அணி முதலில் துடுப்பெடுத்தாட, திமுத் கருணாரத்ன தலைமையிலான அணி களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் தலைமையிலான அணி, தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 318 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணிக்காக குசல் ஜனித் பெரேரா மற்றும் ஓசத பெர்ணான்டோ ஆகிய இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கியதுடன், முதல் விக்கெட்டுக்காக 39 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டனர்.

இதில் குசல் ஜனித் பெரேரா 27 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், காலில் ஏற்பட்ட தசை தளர்வு காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

LPL தொடரில் மாலிங்க இல்லை என்பது உறுதி

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் கண்டி அணியின் தலைவராக குசல் ஜனித் பெரேரா செயற்படவுள்ளதால், அவரது உபாதை அந்த அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தினேஷ் சந்திமாலின் அணிக்காக மத்திய வரிசையில் பிரகாசித்த குசல் மெண்டிஸ் 125 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 100 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, இலங்கை டெஸ்ட் அணிக்காக முதல்தடவையாக அழைக்கப்பட்டுள்ள 21 வயதுடைய இளம் வீரரான சந்தூஷ் குணதிலக்க அரைச்சதம் கடந்து 58 ஓட்டங்களை எடுத்தார்.

அத்துடன், அணித் தலைவராக துடுப்பாட்டத்தில் அசத்திய தினேஷ் சந்திமால், 70 பந்துகளில் 57 ஓட்டங்களைக் குவித்தார்

பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா 3 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித்த மற்றும் துஷ்மன்த சமீர ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.

நாளை போட்டியின் கடைசி நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தினேஷ் சந்திமால் பதினொருவர் அணி – 318/10 (68.2) குசல் மெண்டிஸ் 100, சந்தூஷ் குணதிலக்க 58, தினேஷ் சந்திமால் 57, டில்ருவான் பெரேரா 3 விக்கெட், கசுன் ராஜித்த 2 விக்கெட், துஷ்மன்த சமீர 2 விக்கெட்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<