2021 வரவு செலவு திட்டத்தில் நாடளாவிய ரீதியில் 15 செயற்கை ஓடுபாதைகள்

233
SPORTS BUDGET 2021

அடுத்த வருடத்துக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட கன்னி வரவு செலவுத் திட்டத்தில் அடுத்த நான்கு வருடங்களுக்கு இலங்கையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்படி, நாடளாவிய ரீதியில் செயற்கை ஓடுபாதையுடன் 10 விளையாட்டுப் பாடசாலைகள் நிர்மாணித்தல், 2032 ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டு விளையாட்டுத் தொகுதியொன்று நிர்மாணித்தல், விளையாட்டில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், 2025 இற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுகின்ற விளையாட்டு பொருளாதாரத்தை உருவாக்குதல், யாழ்ப்பாணம் முதல் ஹம்பாந்தோட்டை வரை சகல வசதிகளையும் கொண்ட விளையாட்டு மைதானங்களை உருவாக்குதல், கிரிக்கெட் கிராமம் ஒன்றை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அபிவித்தி திட்டங்களுக்கான யோசனைகள் பிரதமரினால் முன்வைக்கப்பட்டது

>> துரையப்பா அரங்கிற்கு செயற்கை ஓடுபாதை – அமைச்சர் நாமல்

இதற்காக சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டது

சுதந்திர இலங்கையின் 75ஆவது வரவு செலவுத் திட்டம் நேற்று (17) பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தை வழிப்படுத்தி முன்வைக்கப்பட்ட இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இலங்கையின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு முன் எப்பொழுதும் இல்லாமல் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் பிரதமரினால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி, விளையாட்டின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு தேசிய முதலீடாக நாடளாவிய ரீதியில் 10 விளையாட்டுப் பாடசாலைகளுக்கு செயற்கை ஓடுபாதைகளை நிர்மாணிக்கவும், 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு சகல வசதிகளையும் கொண்ட விளையாட்டு தொகுதியொன்றை அபிவிருத்தி செய்யவும் முதல்கட்டமாக 2 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்குவதற்கான முன்மொழி பிரதமரினால் சபையில் முன்வைக்கப்பட்டது

>> இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இளம் வீரர்கள் | Sports Roundup – Epi 140

அத்துடன், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பெண்களின் பங்குபற்றலை அதிகரிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவும், 2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை விளையாட்டின் மூலம் வருமானமாக ஈட்டிக் கொள்வதற்கான விளையாட்டு பொருளாதாரம் ஒன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது

இதனிடையே, குருநாகல், யாழ்ப்பாணம், டொரிண்டன், போகம்பர, தியகம உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளையாட்டரங்குகளை நவீன வசதிளைக் கொண்டதாக புனரமைப்பதற்கும், அங்கு செயற்கை ஓடுபாதைகளை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஹம்பாந்தோட்டைசூரியவெவவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு உகந்த வகையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக நவீன விளையாட்டு கிராமமொன்றை ஸ்தாபிக்கவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<