கொரோனாவிலிருந்து மீண்டார் ரொனால்டோ

223

ஜுவன்டஸ் மற்றும் போர்த்துக்கல் கால்பந்து அணிகளின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மூன்றாவது முறையாக இடம்பெற்ற  COVID-19 பரிசோதனைக்கு பிறகு, அவருக்கு தொற்று இல்லை என ஜுவன்டஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரொனால்டோவுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி COVID-19 தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்நேரம் அவர் போர்த்துக்கல் அணியோடு ஐரோப்பா நேஷன்ஸ் கிண்ணத்தொடரில் விளையாடிக் கொண்டிருந்ததால் உடனேயே அவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு அடுத்த நாள் சுவீடனுக்கு எதிராக  நடைபெற்ற ஐரோப்பா நேஷன்ஸ் கிண்ணப் போட்டியில் விளையாடமுடியாமல் போனது.

இந்நிலையில் ரொனால்டோவுக்கு கடந்த 21ஆம் திகதி இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவருக்கு தோற்று இருக்கின்றது என்றே முடிவு வந்தது.

தற்பொழுது வந்துள்ள மூன்றாவது பரிசோதனையின் முடிவில் அவருக்கு COVID-19 தொற்று இல்லையென உறுதியாக்கப்பட்டுள்ளதால், ரொனால்டோ தற்போது தனிமைப்படுத்தலில் இருந்து விலகி தன்னை அணியுடன் இணைத்து  பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ரொனால்டோ எதிர்வரும் முதலாம் திகதி ஸ்பேசியா அணியுடன் இடம்பெறும் போட்டியில் விளையாடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரொனால்டோ இல்லாமல் சீரி A தொடரில் விளையாடிய ஜுவன்டஸ் அணியால், இரண்டு போட்டிகளை சமன் செய்யவே முடிந்தது. அத்தோடு சம்பியன்ஸ் லீக் தொடரில் டைனமோ கிவிவ் அணிக்கெதிராக 2-0 என்ற வெற்றியையும் இறுதியாக பார்சிலோனா அணிக்கெதிராக 2-0 என்ற தோல்வியையும் சந்தித்தது. தற்பொழுது ஜுவன்டஸ் அணி சீரி A  தொடரில் ஐந்தாம் இடத்திலும் சம்பியன்ஸ் கிண்ண குழு நிலையில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

35 வயதான ரொனால்டோ இந்த பருவகாலத்தில் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மூன்று கோல்களையும், ஒரு கோலுக்கான உதவியையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.