ரோஹித்தின் உபாதை தொடர்பில் கேள்வி எழுப்பிய கவாஸ்கர்!

93
Rohit Sharma

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மாவின் உபாதை குறித்த வெளிப்படைத்தன்மை தொடர்பில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்னணையாளருமான சுனில் கவாஸ்கர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான இந்திய குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த குழாம்களில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா இணைக்கப்படவில்லை. இதற்கான காரணமாக, ரோஹித் சர்மாவின் உபாதையை இந்திய கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியிருந்தது.

>> ஆஸி. தொடருக்கான இந்திய குழாமில் 4 தமிழ்நாட்டு வீரர்கள்

இந்திய கிரிக்கெட் சபையின் அறிக்கையின் படி, “இந்திய கிரிக்கெட் சபையின் வைத்திய குழு இசாந்த் சர்மா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் உபாதைகளை தொடர்ந்தும் கவனித்து வருகின்றது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

ரோஹித் சர்மா தற்போது ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். எனினும், பஞ்சாப் அணிக்கு எதிரான சுப்பர் ஓவர் தோல்வியின் பின்னர், அவர் போட்டிகளில் விளையாடவில்லை. தசைப்பிடிப்பு காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார் என மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்திருந்ததுடன், அணித்தலைவராக கீரன் பொல்லார்ட் செயற்பட்டு வருகின்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் அறிக்கையில், “ரோஹித் சர்மாவின் இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த 4 நாட்களாக உபாதை தனிந்து வருகின்றது. அவரின் உபாதையை தொடர்ந்தும் பி.சி.சி.ஐ யுடன் இணைந்து அணி முகாமைத்துவம் கவனித்து வருகின்றது. ரோஹித் சர்மாவை சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கீரன் பொல்லார்ட் அணித் தலைவராக செயற்படுவார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், ரோஹித் சர்மா ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடவில்லை. இந்தப் போட்டிக்கு முதல் நாள் இந்திய தெரிவுக்குழு, அவுஸ்திரேலிய தொடருக்கான குழாத்தை தெரிவுசெய்திருந்தது. இதனையடுத்து நேற்றைய தினம் ரோஹித் சர்மா மீண்டும், பயிற்சிக்கு திரும்பிய காணொளியை மும்பை இந்தியன்ஸ் அணி டுவிட்டரில் பதிவிட்டிருந்தது.

இந்த பதிவினையடுத்து சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மாவின் உபாதை குறித்த தன்னுடைய கேள்வியை முன்வைத்துள்ளார்.

 “நான் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பயிற்சிகளில் ஈடுபடுவதை பார்த்தேன். எனவே, அவருடைய உபாதை எதுபோன்ற உபாதை என எனக்கு தெரியவில்லை. பாராதூரமான உபாதை என்றால், அவர் பயிற்சிக்கு திரும்பியிருக்க முடியாது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20I தொடர் நவம்பர் மாத இறுதியில் ஆரம்பமாகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 17ம் திகதி தொடங்குகிறது. தொடருக்கு சுமார் ஒன்றரை மாதங்கள் வரை நேரம் இருக்கிறது. அவர் இப்போது மும்பை அணிக்காக பயிற்சிகளில் ஈடுபடுகிறார். எனவே, இந்த உபாதை தொடர்பில் எனக்கு தெரியவில்லை

Watch –  “அதிக விமர்சனங்களுக்கு முகங்கொடுப்பவர்கள் தேர்வளார்கள் மாத்திரமே” – பிரெண்டன் குருப்பு

குறிப்பாக ரோஹித் சர்மாவுடன் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை கொஞ்சம் தெளிவாகவும், விளக்கமாகவும் அறிவிக்க வேண்டும். அப்படி, ஏதாவது இருந்தால், இந்திய ரசிகர்கள் அதனை தெரிந்துக்கொள்ள வேண்டும். 

மும்பை இந்தியன்ஸ் அணி இலகுவாக விட்டுக்கொடுக்கும் அணி அல்ல. அவர்கள் போட்டிகளை வெற்றிக்கொள்ள முற்படுபவர்கள். அவர்கள் எதிரணிக்கு உளவியல் ரீதியான சாதகத்தை கொடுக்க மாட்டார்கள். ஆனால், நாம் இப்போது இந்திய அணி தொடர்பில் பார்க்கிறோம்.  மயங்க் அகர்வாலை எடுத்துக்கொண்டால், அவர் உபாதைக்கு பின்னர் விளையாடவில்லை. இந்திய ரசிகர்கள் என்ற ரீதியில், முன்னணி இரு வீரர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் நிறைவின் பின்னர், நீண்ட தொடருக்காக இந்திய அணி, அவுஸ்திரேலிய செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<