நான் மின்னல் வேகத்தில் பந்துவீசியது எனக்கு தெரியாது: நோக்கியா!

156
WWW.IPLT20.COM

ஐ.பி.எல். தொடரில் நேற்று (14) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி கெபிட்டல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் என்ரிச் நோக்கியா ஐ.பி.எல். தொடரில் அதிவேகமான பந்தினை வீசி சாதனைப்படைத்துள்ளார்.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை எதிர்கொண்ட, டெல்லி கெபிட்டல்ஸ் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் டெல்லி கெபிட்டல்ஸ் அணி வெற்றிபெறுவதற்கு, அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் முக்கிய காரணமாக இருந்தனர்.  

டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு தொடரும் சோகம்!

தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சு இரட்டையாக இந்த ஐ.பி.எல். தொடரில், காகிஸோ ரபாடா மற்றும் என்ரிச் நோக்கியா ஆகியோர் அசத்திவருகின்றனர். அந்தவரிசையில், நேற்றைய போட்டியிலும் இவர்கள் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 

இதில், நேற்றைய தினம் டெல்லி கெபிட்டல்ஸ் அணியின் மூன்றாவது ஓவரை வீசிய என்ரிச் நோக்கியா, ஓவரின் ஐந்தாவது பந்தை 156.22km/h என்ற வேகத்தில் வீசி, ஐ.பி.எல். தொடரில் வேகமான பந்தினை வீசியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேநேரம், இந்த ஓவரின் இறுதிப்பந்தை 155.21km/h என்ற வேகத்தில், வீசி இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தையும் நோக்கியா பிடித்துக்கொண்டதுடன், 154.74 என்ற வேகத்தில் பந்துவீசி இந்த பட்டியலின் மூன்றாவது இடத்தையும் என்ரிச் நோக்கியா தக்கவைத்துக்கொண்டார்.  

தனது இந்த வேகப் பந்துவீச்சு குறித்து என்ரிச் நோக்கியா போட்டிக்கு பின்னர் கருத்து வெளியிடுகையில், “குறித்த சந்தர்ப்பத்தில் வேகமான பந்தினை வீசியது தெரியாது. பின்னர்தான் தெரியும். நான் எனது பந்தின் வேகத்தை அதிகரிக்க கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். பந்தின் வேகத்தை அதிகரிப்பதற்கான நல்ல அணுகுமுறை இருக்க வேண்டும் என்பதுடன், அதனை சரியான இடத்தில் வீசுவதற்கான திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார். 

என்ரிச் நோக்கியா வீசிய ஐ.பி.எல். தொடரின் வேகமான பந்தினை, ஜோஸ் பட்லர் ஸ்கூப் முறையில் பௌண்டரிக்கு விளாசியதுடன், அடுத்த பந்தினையும் ஸ்கூப் முறையில் பௌண்டரிக்கு அனுப்பியிருந்தார். எனினும், அடுத்ததாக வீசப்பட்ட 155.21km/h வேக பந்தில், பட்லர் போவ்ல்ட் முறையில் விக்கெட்டினை பறிகொடுத்திருந்தார்.

Video – Army லீக்கில் துடுப்பாட்டத்தில் கலக்கும் Chandimal..! |Sports RoundUp – Epi 135

“பட்லருடனான போட்டி சிறப்பாக இருந்தது. அவர் ஸ்கூப் முறையில் துடுப்பெடுத்தாடுவார் என எனக்கு தெரியும். முதலில் அவர் ஸ்கூப் முறையில் பௌண்டரி பெற்ற போது ஆச்சரியமடைந்தேன். இரண்டாவது முறையும் அதேபோன்று துடுப்பெடுத்தாடுவார் என நான் நினைக்கவில்லை. ஆனால், அடுத்த பந்தில் அவர் அதே போன்று பௌண்டரி அடித்தார். எனவே, நான் எனது பலத்தை பயன்படுத்தி, ஆடுகளத்திற்கு ஏற்ப பந்தினை மாற்றி வீசினேன்” என்றார்.

ஐ.பி.எல். தொடரை பொருத்தவரை அதிவேகமாக பந்துவீசியவர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் என்ரிச் நோக்கியா பிடித்துள்ளதுடன், 4வது இடத்தை டேல் ஸ்டெய்னும், 5வது இடத்தை காகிஸோ ரபாடாவும் பிடித்துள்ளனர். இதேவேளை, ஐ.பி.எல். தொடரின் வேகமான பந்தினை வீசிய வீரர்கள் பட்டியலின் முதல் 8 இடங்களையும் தென்னாபிரிக்க வீரர்களான இவர்கள் மூவரும் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<