முப்பதுக்கு பின் முன்னுரிமை டில்ஷான்

306

T20 கிரிக்கெட் மெல்ல மெல்ல பிரபல்யமடைந்துவந்த காலமது. எனினும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 400 இற்கு அதிகமான ஓட்டங்களை விரட்டுவது என்பது அப்போதும் இப்போதும் பெரும் சவாலான விடயம். 2006 இல் 435 ஓட்டங்களை தென்னாபிரிக்கா விரட்டியதே 400 இற்கு அதிகமான ஓட்டங்களை விரட்டிய ஒரேயோரு சந்தர்ப்பமாகும். 

இவ்வாறான நிலமையில், இந்தியா தன்னோட முதலாவது இன்னிங்ஸில் ஆடி 413 ஓட்டங்களை இலங்கைக்கு இலக்காக வழங்கியிருந்தது. 414 எனும் இமாலய இலக்கை விரட்டும் நோக்கில் களம் இறங்கியது உபுல் தரங்க – திலகரட்ன டில்ஷான் ஜோடி.

இந்த ஜோடி அதிரடியான இணைப்பாட்டத்தை வழங்கியது. பந்துவீச்சாளர்களை பாரபட்சமின்றி துவம்சம் செய்தார் டில்ஷான். எதிர்கொண்ட 124 பந்துகளில் 160 ஓட்டங்களை குவித்து உலகையே திரும்பிபார்க்க வைத்தார். அதன்மூலம் முதல் திலக்கரட்ன டில்ஷான் என்ற பெயரை உலகறிய செய்தார். 

ஒரே இரவில் IPL ஹீரோவான தினக்கூலி தொழிலாளியின் மகன்

2008ஆம் ஆண்டிற்கு முன் டில்ஷான் என்றால் பெரும்பாலும் ஒரு பந்துவீச்சாளராக அல்லது சிறந்த களத்தடுப்பாளரகவே பலரும் அறிந்திருப்பர். ஓர் அதிரடி துடுப்பாட வீரராக டில்ஷான் ஆட ஆரம்பித்தது 2008 ஆம் ஆண்டில் தான். Lower middle order இல் ஆடும் வீரராகவே டில்ஷான் ஆரம்ப காலங்களில் ஆடியிருந்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கமுன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 6,245 ஓட்டங்கள் (37.0 சராசரி), 53 விக்கெட்டுகள் மற்றும் 100 ஆட்டமிழப்புகளை நிகழ்த்தினார் . 

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பின் டில்ஷான் வேறோர் அவதாரம் எடுத்தார் என்றே கூறவேண்டும். சனத்திற்கு பின் இலங்கை அணியின் சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பெயர்பெற்றார் டில்ஷான். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த கௌரவம் வாய்ந்தவர்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துகொண்டார். அவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குவித்த பத்தாயிரம் ஓட்டங்களுள் 7367 ஓட்டங்களை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பெற்றார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் பட்டியலில் பத்தாவது இடம்பெற இவ்வோட்டங்கள் அவருக்கு உதவின. 

குறிப்பிட்டதோர் வருடத்தில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களை குவித்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும் டில்ஷான் தான். பத்தாயிரம் ஓட்டங்கள், நூறு விக்கட்டுகளை பெற்ற வீரர்கள் என்ற கௌரவமான க்லபிலும் டில்ஷானின் பெயருண்டு. டில்ஷான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகமுன் 42 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பின்பும் அவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 64 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

டில்ஷான் அணித்தலைவராக செயற்பட்டபோது, ஒரு அணித்தலைவராக அவரது அடைவுகள் திருப்தியளிக்காதபோதும் ஒரு துடுப்பாட்ட வீரராக அவர் சிறப்பாகவே செயற்பட்டார் எனலாம். அணித்தலைவராக ஒருநாள் சர்வதேசம், டெஸ்ட் மற்றும் T20 என மூன்று வகை கிரிகெட்டிலும் சதம் அடித்த முதல் அணித்தலைராக டில்ஷான் காணப்படுகிறார். அதேபோன்று, T20 போட்டிகளில் முதன் முறையாக ஒரு அணித்தலைவராக சதம் அடித்ததும் டில்ஷானே ஆவார்.

டில்ஷான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அணியில் இருந்தபோது இலங்கை ஓர் திடமான பலம்வாய்ந்த அணியாக காணப்பட்டது. பல உலக கிண்ணங்களில் இலங்கை இறுதி போட்டிகள்வரை சென்றது. இவ்வாறு இலங்கை உலக கிண்ணங்களில் சிறப்பாக செயற்பட டில்ஷானும் ஓர் முக்கிய காரணம். துடுப்பாட்டத்தில் அவர் பெரிதும் உதவினார். 

கடந்த 2009 T20 உலக கிண்ணத்தில் அதிகூடிய ஓட்டங்கள் குவித்த வீரராக டில்ஷான் காணப்பட்டார். அதேபோன்று, 2011 உலக கிண்ணத்தில் 500 ஓட்டங்களை பெற்று அவ்உலகக் கிண்ணத்தின் அதிகூடிய ஓட்டம் பெற்றவர் என்ற கௌரவத்தினை பெற்றார். ஓர் இலங்கை வீரர் உலக கிண்ணமொன்றின் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற நாமத்தை பெற்ற முதல் சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது. உலக கிண்ண வரலாற்றில் அதிகூடிய சராசரி கொண்ட துடுப்பாட்ட வீரர்களுள் டில்ஷான் இரண்டாவது வீரராவார். உலக கிண்ண போட்டிகளில் அதிகூடிய சதங்கள் கடந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்.

தனது 31 வயதிலேயே டில்ஷான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மாற்றம்பெற்றார். அவரது கிரிகெட் வாழ்வின் பெரும்பகுதி முப்பதுகளின் பின்னரான காலங்களாகும். சாதாரண கிரிகெட் வீரரின் கிரிகெட் வாழ்வானது 35 வயதுகளின் பின் நிறைவுபெற்றுவிடும். உடல் ரீதியான பலமே இதற்கான காரணம். எனினும், டில்ஷான் 35 வயதின் பின்னே பல சாதனைகளின் சொந்தக்காரரானார். அவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்கள், நூறு விக்கட்களை கடக்கும்போது அவரது வயது 38 ஆகும். 

தனது 35 ஆவது வயதின் பின் 6,834 ஓட்டங்களை 35.15 எனும் சராசரியில் சர்வதேச போட்டிகளில் குவித்தார் டில்ஷான். இவற்றுள் 16 சதங்களும் காணப்படுகின்றன. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பெற்ற 22 சதங்களுள் 12 சதங்கள் டில்ஷானின் 35 வயதின் பின் பெறப்பட்டவை. 

49 வருடங்களில் 4 தடவைகள் மாத்திரம் பதிவாகிய அரிய சாதனை!

தனது 35 வயதிற்கு முன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆறு இன்னிங்ஸிற்கு ஒரு முறை அரைசத்திற்கு அதிகமான (50+) ஓட்டங்களை கடந்திருப்பார். ஆனால் 35 வயதானபின் அரைசதம் அடிக்கும் வேகத்தை இரண்டு மடங்கால் அதிகரித்தார். அதாவது மூன்று இன்னிங்ஸிற்கு ஒருமுறை அரைச்சதம் அடித்தார் டில்ஷான். வயது அதிகரிக்க அதிகரிக்க டில்ஷானின் போர்மும் அதிகரித்தது. 

டில்ஷான் 35 வயதுகளின்பின் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறிப்பிட்ட வருடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்ற சந்தர்ப்பங்கள் மூன்றாகும். 35 வயதுகளின் அதிகமுறை ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரரும் டில்ஷான் தான். 

கிரிக்கெட் வாழ்வின் இறுதி நூறு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றவர்களுள் டில்ஷான் மூன்றாமிடத்திலுள்ளார். 4,264 ஓட்டங்களை 47.91 எனும் சராசரியில் டில்ஷான் தனது இறுதி நூறு போட்டிகளில் பெற்றார். இதிலிருக்கும் இன்னுமோர் சிறப்பம்சம் தனது இறுதி நூறு போட்டிகளை 35 வயதுகளின் பின் ஆடி 4000+ ஓட்டங்களை பெற்ற ஒரே வீரர் டில்ஷான் ஆவார். 

சுமார் பதினேழு வருடங்கள் கிரிக்கெட் உலகில் ஜொலித்த ஓர் உச்ச நட்சத்திரம் டில்ஷான். எனினும் அவரது கிரிக்கெட் வாழ்வில் ஓர் பகுதியில் அவர் தனக்காகவும் இலங்கை கிரிக்கெட்டிற்காகவும் வழங்கிய பங்களிப்பை காட்டிலும் பன்மடங்கு அதிகமான பங்களிப்பை தனது கிரிக்கெட் வாழ்வின் இரண்டாம் இன்னிங்ஸில் கொடுத்திருந்தார். தனது கிரிக்ட் வாழ்வின் முடிவில் கிரிகெட் வரலாற்றின் சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். 

பின் நிலை துடுப்பாட்ட வீரராக, பகுதி நேர பந்துவீச்சாளராக தனது கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்து ஒய்வு பெரும் போது உலகின் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக தன்னை மாற்றிய டில்ஷானிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<