Friday 25 September 2020

`தக்கன பிழைக்கும்’ என்ற வாதத்தை தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடப்போகின்றது


 


நேர்காணல் – கே.எஸ்.சுதாகர்/தி.ஞானசேகரன் இணையவளி

பகுதி (2/2)

9) எழுத்து தவிர்ந்த வேறு என்ன இலக்கியச் செயற்பாடுகளில் இயங்கி வருகிறீர்கள்?

எழுதுவதைக் காட்டிலும் வாசிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. சிறுவயது முதல் இன்றுவரை தொடர்ச்சியாக வாசித்து வருகின்றேன். வாசித்த புத்தகங்களில் சிறந்தவற்றை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வது, நண்பர்களிடையே புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வது, கலந்துரையாடுவது மகிழ்ச்சி தரும் செயல்கள். போகும் இடங்களில் இலக்கியநண்பர்களைச் சந்தித்து உரையாடுவது மனதிற்கு இதமானது. கனடா, இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்றபோது சில எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அதேபோல பிறநாடுகளில் இருந்து இங்கு வரும் இலக்கியவாதிகளைச் சந்திப்பதும் உண்டு. கனடா சென்றிருந்தபோது குரு.அரவிந்தன், வ.ந.கிரிதரன், எல்லாளன்(ராஜசிஙகம்), கடல்புத்திரன்(பாலமுரளி), தேவகாந்தன், அகில், ஸ்ரீரஞ்சனி என்பவர்களைச் சந்தித்தது இன்னமும் பசுமையாக இருக்கின்றது. அதேபோல் இந்தியாவிற்குச் சென்றபோது நா.முத்துநிலவன், அண்டனூர் சுரா, ஸ்ரீரசா (இரவிக்குமார்) என்பவர்களைச் சந்தித்திருந்தேன்.

இணையங்களில் இல்லாத மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடிப்பிடித்து தமிழில் தட்டச்சு செய்தும், இணையம் / வலைப்பூ இல்லாத எழுத்தாளர்களின் சில நல்ல படைப்புகளைத் தேடிப் பெற்றும் எனது வலைப்பூவில் பதிவிடுகின்றேன். நல்ல படைப்புகளை இனம் கண்டுகொண்டு, அவற்றை வாசகர்கள் படிப்பதற்காக இணையங்களிலும் முகநூல்களிலும் அறிமுகம் செய்கின்றேன்.

10) வெளிவந்த தங்களது நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?

இதுவரை இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.

’எங்கே போகின்றோம்’ என்ற சிறுகதைத்தொகுதி அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்க வெளியீடாக (குமரன் பதிப்பகம்) 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஏறக்குறைய இருபத்திரண்டு வருட காலத்தை (2006 – 1984) உள்ளடக்கிய பதினெட்டுக் கதைகள் இத்தொகுதியில் உள்ளன. இந்தக் கதைகளை எழுத்தாளர்கள் கதிர்.பாலசுந்தரம், காவலூர் இராசதுரை என்பவர்கள் செவ்வைப்படுத்தித் தந்தார்கள். தொகுப்பிற்கான அணிந்துரையை காவலூர் இராசதுரை அவர்களும், பதிப்புரையை லெ.முருகபூபதி அவர்களும் எழுதியிருக்கின்றார்கள். அட்டைப்பட ஓவியத்தை, ஓவியக்கலைவேள் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் வரைந்திருக்கின்றார்.


‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத்தொகுதி ‘அக்கினிக்குஞ்சு’ வெளியீடாக (மித்ர பதிப்பகம்) 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. 2006 – 2013 காலப்பகுதிகளில் பரிசு பெற்ற 12 சிறுகதைகளை உள்ளடக்கியது. தொகுப்பிற்கான அணிந்துரையை `புலம்பெயர் வாழ்க்கை’ என்ற தலைப்பில் வெங்கட் சாமிநாதன் அவர்களும், பதிப்புரையை யாழ்.எஸ்.பாஸ்கரும் எழுதியிருக்கின்றார்கள். அட்டைப்பட ஓவியத்தை, ஓவியக்கலைவேள் மு.க.சு.சிவகுமாரன் அவர்களும், கதைகளுக்கான படங்களை தவம் அவர்களும் வரைந்திருக்கின்றார்கள்.

 

11) அவுஸ்திரேலியாவில்  நிறுவன ரீதியாக எத்தகைய இலக்கியச் செயற்பாடுகள் நடைபெறுகின்றன?  அத்கைய செயற்பாடுகளில் தங்களின் பங்களிப்புப் பற்றிக் கூறுங்கள்

அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் சிட்னி (நியூ சவுத் வேல்ஸ்), மெல்பேர்ண் (விக்டோரியா), பிறிஸ்பேர்ண் (குவீன்ஸ்லாந்து), பேர்த் (மேற்கு அவுஸ்திரேலியா), அடிலையிட் (தெற்கு அவுஸ்திரேலியா) பகுதிகளில் கலை இலக்கியச் செயற்பாடுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. எல்லா இடங்களின் பெயரோடு ஒட்டி - சிட்னி தமிழ்ச்சங்கம், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம், மெல்பேர்ண் தமிழ்ச்சங்கம், பிறிஸ்பேர்ண் தமிழ்ச்சங்கம், மேற்கு அவுஸ்திரேலியா தமிழ்ச்சங்கம், அடிலையிட் தமிழ்ச்சங்கம் என தமிழ்ச்சங்கள் இயங்கி வருகின்றன.

தவிர -

சிட்னியில் – தமிழ்மன்றம், தமிழ் வளர்ச்சி மன்றம், தமிழ்க்கலை பண்பாட்டுக்கழகம், தமிழ் இலக்கியக் கலைமன்றம், அவுஸ்திரேலிய தமிழ்ச்சங்கம், அவுஸ்திரேலிய தமிழ்க்கலைகள் மற்றும் பண்பாட்டு மையம், கம்பன் கழகம், அவுஸ்திரேலிய பட்டதாரிகள் சங்கம், சிட்னி தமிழ் அறிவகம் (நூல் நிலையம்)

மெல்பேர்ணில் – அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், கேசி தமிழ்மன்றம், வள்ளுவர் அறக்கட்டளை, பாரதிபள்ளி

பிறிஸ்பேர்ணில் – தாய்த்தமிழ்ப்பள்ளி, குவீன்ஸ்லாந்து தமிழ்மன்றம், தமிழ்நதி இலக்கிய வட்டம் போன்றவை இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.

இவை பொங்கல்விழா, சித்திரைத்திருவிழா, கம்பன்விழா, சிலப்பதிகாரவிழா, விபுலானந்தர் விழா, தொல்காப்பியர் விழா, எழுத்தாளர்விழா போன்ற விழாக்களையும்; திருக்குறள் மகாநாடு, உலகத் தமிழ் இலக்கிய மகாநாடு போன்ற மகாநாடுகளையும்; பறையிசை சிலம்பாட்டம் நாட்டுக்கூத்து போன்றவற்றைப் பயிற்றுவித்து கலை நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். அத்துடன் திருக்குறள் மனனப் போட்டி, சிறுவர்களுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

அத்தோடு ஒவ்வொரு இடங்களிலும் - நூல்களைப் படித்து, தமது வாசிப்பு அனுபவத்தை வெளிப்படுத்துவதும் விவாதிப்பதுமென, பல வாசகர் வட்டங்கள் இயங்கி வருகின்றன. எழுத்தாளர்களின் நூல்களைத் தனியாகவோ அல்லது தொகுப்பாகவே சில அமைப்புகள் வெளியிடுகின்றன. என்னுடைய இரண்டு சிறுகதைத்தொகுப்புகளும் கூட இப்படியாகத்தான் வெளியிடப்படுள்ளன என்பதை மேலே அறியத் தந்திருந்தேன்.

இவற்றுடன் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ATBC), இன்பத்தமிழ் வானொலி, தாயகம் தமிழ் ஒலிபரப்புச்சேவை, அரச ஆதரவுடன் இயங்கும் SBS தமிழ் வானொலி போன்ற வானொலிகளும்; மாநில அளவில் இயங்கும் பல பகுதி நேர வானொலிகளும் தமிழ் இலக்கிய முன்னெடுப்புக்களைச் செய்கின்றன. பல சமய நிறுவனங்கள், தமிழ்ப்பாடசாலைகள் கூட இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றுகின்றன.

அச்சு ஊடகங்களில் தமிழோசை, உதயசூரியன், இளவேனில் என்ற இதழ்களும், எதிரொலி என்ற பத்திரிகையும் வருகின்றன. இணைய இதழ்களாக அக்கினிக்குஞ்சு, அவுஸ்திரேலியா தமிழ்முரசு என்பவை வருகின்றன.

புலம்பெயர்ந்தநாள் முதல் சங்கங்கள், அமைப்புகளின் நிர்வாகத்திற்குள் இருந்துகொள்வதைத் தவிர்த்துக்கொள்ளவே விரும்பினேன். ஆனாலும் தவிர்த்துக்கொள்ள முடியவில்லை.

என்னுடைய பங்களிப்பாக தமிழ் எழுத்தாளர் விழாக்களின்போது கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கின்றேன். எழுத்தாளர் விழாக்களைத் தொடர்ந்து நடத்தும்போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்துக்கொள்ள அதை ஒரு அமைப்பாக்கும் முயற்சியில் லெ.முருகபூபதி, நல்லைக்குமரன் க.குமாரசாமி போன்ற பலரும் விரும்பினோம். அதன்படி அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தலைவராக லெ.முருகபூபதியும், செயலாளராக க.குமாரசாமியும், பொருளாளராக நானும் தெரிவுசெய்யப்பட்டோம். அதன்பின்னர் வந்த பத்து வருடங்களில் பொருளாளர், செயலாளர், பத்திராதிபர் போன்ற பதவிகளை மாறி மாறி வகித்திருக்கின்றேன். எழுத்தாளர் விழா வரும்போதெல்லாம் ஒருவாரகாலம் வேலையில் இருந்து விடுப்பு எடுத்துவிடுவேன். புத்தகக் கண்காட்சிகளை ஒழுங்குபடுத்துவது முதற்கொண்டு அழைப்பிதழ்கள் அடிப்பது வரை பல வேலைகள் காத்திருந்தன. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தனது 10வது எழுத்தாளர்விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியபோது, அனைத்துலக சிறுகதை கவிதைப்போட்டிகளை நடத்தியது. அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்தது பெரும் அனுபவமாகும். இந்த எழுத்தாளர்விழாக்கள் மெல்பேர்ண், சிட்னி, கன்பரா, பிறிஸ்பேர்ண் என்று பல இடங்களிலும் மாறி மாறி நடந்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டிலிருந்து சில தவிர்க்கமுடியாத காரணங்களினால், நிர்வாகத்தினுள் இருந்து செயற்படமுடியவில்லை. இருப்பினும் தொடர்ந்தும் ஸ்தாபக உறுப்பினராக இருந்து வருகின்றேன்.

`அக்கினிக்குஞ்சு’ என்றொரு சஞ்சிகை எஸ்.பொ வைப் பிரதம ஆசிரியராகவும், யாழ்.எஸ்.பாஸ்கரை ஆசிரியராகவும் கொண்டு 1991 முதல் மெல்பேர்ணிலிருந்து வெளிவந்தது. மொத்தம் 11 இதழ்கள் வெளிவந்த நிலையில் நின்று போக, 2011 முதல் அதன் ஆசிரியரான யாழ்.எஸ்.பாஸ்கரினால் இணைய இதழாக வருகின்றது. தினமும் பதிவேற்றங்கள் காணும் இணையசஞ்சிகை இது. அக்கினிக்குஞ்சு நடத்திய எஸ்.பொ ஞாபகார்த்த சிறுகதைப்போட்டி, அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த சிறுகதைப்போட்டிகளில் நடுவராகவும் பணிபுரிந்திருக்கின்றேன். அதன் அமைப்பான தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தில் இணைந்துகொண்டு அவருக்கு சில உதவிகளை தற்போது செய்து வருகின்றேன்.

 

12) புலம் பெயர்ந்தவர்களின் அடுத்த தலைமுறையினரின் இலக்கிய ஆர்வம், செயற்பாடுகள்  எத்தகையதாக இருக்கிறது?

தமிழ் இலக்கியத்தில் ஆர்வம், செயற்பாடுகள் என்று கூறும்போது நம்பிக்கை தரும் விதத்தில் இல்லை என்றுதான் கூறவேண்டும். அவுஸ்திரேலியா ஒரு பல்கலாச்சார நாடாக இருப்பதால், அரசு பல்வேறு வழிகளில் பிற மொழிகளும் வளர உதவி புரிகின்றது. அந்த உதவிகளைப் பெற்றுக்கொண்டு, தமிழ் மொழியும் எமது கலைகளும் தொடர வேண்டும் என்பதில் பலரும் அக்கறை காட்டி வருகின்றோம்.

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, மாநிலங்கள் தோறும் வாசகர் வட்டங்கள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றன. சிட்னியில் `தமிழ் அறிவகம்’ என்னும் நூல் நிலையம் வாரத்தில் நான்கு நாட்கள் முழுநேரமாக தொழிற்படுகின்றது.

தமிழ்மொழியைக் கற்பிப்பதில் தமிழ்ப்பாடசாலைகளின் பங்களிப்பு போற்றக்கூடியதாக இருக்கின்றது. இவை தமிழ்மொழியுடன் கலை கலாசாரம் பண்பாடுகளையும் சொல்லித் தருகின்றன. 1977 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் முதல் தமிழ்ப்பள்ளியாக `பாலர் மலர் தமிழ்ப் பள்ளி’ சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையிலிருந்து பலர் புலம்பெயர்ந்ததன் பின்னர், 1987 ஆம் ஆண்டு சிட்னியில் ஹோம்புஸ் என்ற இடத்தில் தமிழ்க்கல்வி நிலையம் ஒன்று ஆரம்பிக்கபட்டது. தற்போது 12 இற்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் அங்கே உள்ளன. மெல்பேர்ணில் 1979 ஆம் ஆண்டு ஈழம் தமிழ்க்கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப்பாடசாலை இன்று பல கிளைகளுடன் தமிழ் கற்பிப்பதில் உதவி புரிகின்றது. மற்றும் மாவை நித்தியானந்தனால் 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட `பாரதி பள்ளி’ இன்று பல கிளைகளுடன் விரிவடைந்திருக்கின்றது. குயீன்ஸ்லாந்தில் `பிறிஸ்பேர்ண் தாய்த்தமிழ்ப்பள்ளி’, `பிறிஸ்பேர்ண் தமிழ்ப்பாடசாலை’ என்பனவும்; மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவில் அடிலையிட் என்னுமிடத்திலும், மேற்கு அவுஸ்திரேலியாவில் பேர்த் என்னுமிடத்திலும், வடக்கில் டார்வினிலும், தலைநகர் கன்பராவிலும் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. எனினும் இங்கே செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

அடுத்த தலைமுறையினரில் சிலர் திறம்பட பேசுகின்றார்கள், எழுதுகின்றார்கள், கலைகளில் வல்லவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் இவர்களுக்கு அடுத்த தலைமுறையினரும் உருவாகிவிட்டார்களல்லவா? அவர்களின் நிலை கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. அவர்கள் அந்தந்த நாட்டு மொழிகளிலேதான் இலக்கியம் படைக்கப் போகின்றார்கள். இதற்கான அத்திவாரம் ஏற்கனவே பலநாடுகளில் தொடங்கப்பட்டுவிட்டது. அவர்கள் கவனிப்புக்குரியவர்களாகவும் வளர்ந்து வருகின்றார்கள்.

காலம் கற்றுத் தந்த பாடங்களாக - பிஜி, மொரிசியஸ், தென் ஆபிரிக்கா போன்று – கலைகளிலும் பண்பாடுகளிலும் சில தங்கி நிற்க, மொழி தேய்ந்துவிடும் போல் தான் உள்ளது.

 

13) இலக்கியப் பங்களிப்புக்காக தாங்கள் பெற்ற கௌரவங்கள் விருதுகள் பற்றிக் கூறுங்கள்?

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம், பத்தாவது எழுத்தாழர்விழாவைக் கொண்டாடியபோது, ஜேர்மனியில் இருந்து வெற்றிமணி ஆசிரியர் வந்து அதில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். அதற்கடுத்த மாதம் வந்த வெற்றிமணி இதழ் (ஆனி இதழ்) `அவுஸ்திரேலியா சிறப்பிதழாக’ வந்தது. அதில் என்னை கெளரவ ஆசிரியராக அறிமுகம் செய்து கெளரவப்படுத்தியிருந்தார்.

`அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களும் தமிழினமும்’ என்ற ஆய்வு சம்பந்தமான கட்டுரையை `வல்லமை’ இணையத்தில் எழுதியதற்காக, 2014 ஆம் ஆண்டு `வல்லமையாளர் விருது’ வழங்கப்பட்டது. இந்தக் கட்டுரை கனடாவில் இருந்து வெளியாகிய `சங்கப்பொழில்’ என்ற மலரிலும் வெளியாகியிருக்கின்றது.

அவுஸ்திரேலியாவில் இயங்கும் அக்கினிக்குஞ்சு என்ற அமைப்பு, 2018 ஆம் ஆண்டு `தமிழ் சிறுகதை இலக்கியப் பணிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிக் கெளரவித்திருக்கின்றது.

விருதுகளைப் பெற்றுக்கொள்ள, இந்தியா கனடா போன்ற வெளிநாடுகளுக்குப் போகவேண்டிய நிலை வந்தபோது, நான் அந்த விருதுகளைப் பெற்றுக்கொள்ளவில்லை.

 

14) உங்கள் படைப்புகள் பிறமொழியில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளனவா? யாராவது ஆய்வு செய்துள்ளார்களா?

என்னுடைய ஐந்து சிறுகதைகள் ஆ.தேவராஜன், க.குமாரசாமி, சியாமளா நவரத்தினம், கதிர்.பாலசுந்தரம் என்பவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் கதிர்.பாலசுந்தரம் அவர்கள் மொழிபெயர்த்ததைத் தவிர ஏனையவற்றை அவர்கள் தாங்களாகவே தெரிவு செய்து மொழிபெயர்த்திருந்தார்கள்.

திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற `தமிழ்ச்சிறுகதைகளின் பன்முகத்தன்மை’ என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் - முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் கணபதிராமன் ஆகிய இருவரும் இணைந்து எனது `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதியை முன்வைத்து கட்டுரை சமர்ப்பித்துள்ளார்கள். இந்தக்கட்டுரை பின்னர் `முத்துக்கமலம்’ இணைய இதழில் வந்திருக்கின்றது. பிரான்ஸ் நாட்டில் தொடராக நிகழும் `வாசிப்பு மனநிலை விவாத’த்தில் எனது இதே தொகுதியை முன்வைத்து உரையாடல் செய்திருக்கின்றார்கள். வாசகசாலை(இந்தியா) அமைப்பினர் நடத்தும் கதையாடல் நிகழ்விற்கு `அனுபவம் புதுமை’, `யாரோ ஒளிந்திருக்கின்றார்கள்’ என்ற சிறுகதைகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை ஞானம் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்று, ஞானம் சஞ்சிகையில் வெளியானவை. பின்னர் கணையாழி சஞ்சிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டவை. மேலும் எனது சிறுகதைத்தொகுப்புகளை நூலகவியலாளர் என்.செல்வராஜா, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜெயராமசர்மா, லெ.முருகபூபதி ஆகியோர் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றார்கள்.

 

15) இந்த நேர்காணல் மூலம் வேறு என்ன கூற விரும்புகிறீகள்?   

அரசியல் நம் வாழ்வில் இரண்டறக் கலந்தது. இலக்கியத்திலும் கலந்திருக்கின்றது. அதற்காக நாம் ஒருவரையொருவர் தவிர்த்துக்கொள்ளத் தேவையில்லை எனக் கருதுகின்றேன்.

இக்காலத்தில் பொய்யும் புரட்டும் புரளியும் இட்டுக்கட்டியும் பல படைப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அவற்றை இணையங்கள் துரித கதியில் கடத்திச் செல்கின்றன. சிலர் புனைவுகள் என்றவுடன் எதையும் எப்படியும் எழுதிவிடலாம் என நினைக்கின்றார்கள். தகவல் பிழைகள், தவறான செய்திகள், தொழில்நுட்ப பிழைகள் தலைகாட்டுகின்றன. புனைவிற்கும் ஒரு வரையறை உண்டு என்பதை மறந்துவிடுகின்றார்கள். புனைவுகளில் வரும் தரவுகள் சரியாக இருக்கவேண்டும். தமது அமைப்புக்குச் சார்பாகவும், மற்றவர்களை மறுத்து ஒதுக்கியும் எழுதுகின்றார்கள். எழுதியவர்களுக்கு வேண்டப்பட்ட சிலர் அவற்றை ஓகோவென்று புகழ்ந்தவண்ணமும் உள்ளனர். துர் அதிஸ்டவசமாக தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால் அவை காலம் கடந்தும் நிற்கப் போகின்றன. ஒரு நீண்ட காலத்தின் பின்னர் வரும் சந்ததியினர், எது சரி எது பிழை எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கப் போகின்றார்கள். முந்தைய காலங்களில் எழுதப்பட்ட (சங்ககாலம் உட்பட) படைப்புகளில் `சிலவற்றை’ கறையான்கள் செல்லரித்தும், கவனிப்பாரற்றுத் தொலைந்தும் போய்விட்டதாக அறிகின்றோம். உண்மையில் அவை தொலைந்துதான் போயினவா? வேண்டுமென்றே தேவையற்றவை திட்டமிட்டு அழித்தும் தீயிலிட்டுக் கொழுத்தியும் இருக்கலாம் அல்லவா? `தக்கன பிழைக்கும்’ என்ற வாதத்தை தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடப்போகின்றது.

புதிய எழுத்தாளர்கள் எழுதியவற்றை அவசர அவசரமாக பதிவேற்றம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அவற்றை இன்னொருவர் மூலம் செம்மைப்படுத்தியிருந்தால் வெளியிடுவதில் தப்பில்லை. அதற்கு முடியாதவர்கள், ஆறப்போட்டு திருப்பிப் திருப்பி வாசித்து முடிவெடுக்கவேண்டும். உங்கள் படைப்பொன்று பிரசுரமாவதிலிருந்து நிராகரிக்கப்படும்போது, அது உண்மையிலேயே எழுதப்பட்ட விதத்திலோ அல்லது ஏதோ சில காரணங்களால் சிறந்த படைப்பாக இல்லாமல் இருக்கலாம்; அல்லது அவர்கள் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடு; அல்லது நிர்வாகத்தின் கொள்கைகள் காரணமாக இருக்கலாம். எனவே எழுதிய படைப்பை மறு ஆராய்ச்சிக்கு உட்படுத்துங்கள். திருத்தங்கள் செய்யவேண்டும் என்றால் திருத்துங்கள். அல்லாமலும் மீண்டும் அது சரியானதே என மனம் உறுதி கொண்டால் இன்னொரு இடத்திற்கு அனுப்பி வையுங்கள். சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு படைப்பை எழுதியவருக்கு அதை எங்கே அனுப்ப வேண்டும் என்றும் தெரிந்திருக்கவேண்டும். இலக்கியப்படைப்புகள் சமூக அக்கறை கொண்டனவாக இருக்கவேண்டும். சிறுகதை, நாவல், கவிதை என்பவை இலக்கியத்தன்மை கொண்டதாக எல்லாருக்கும் புரியக்கூடிய விதத்தில் எழுதப்படவேண்டும். வாசிப்பவர்களைக் குழப்ப எத்தனிக்கக்கூடாது. பொழுதுபோக்குவதற்கு மட்டும் என்றில்லாமல் மனவளத்தை பெருக்குவதாகவும் இருக்க வேண்டும்.

இறுதியாக,

நான் ஏற்கனவே இலங்கையில் இருக்கும்போது எழுத ஆரம்பித்திருந்தாலும், என்னை வெளிச்சமிட்டுக் காட்டியது `ஞானம்’ சஞ்சிகைதான். மார்கழி 2006 ஆம் ஆண்டு, ஞானம் சஞ்சிகையில் `புதிய தலைமுறைப் படைப்பாளிகள்’ வரிசையில் என்னை எட்டாவதாக அறிமுகம் செய்தது. இந்த நேர்காணல் மூலம் ஞானம் சஞ்சிகையினருக்கும் அதன் வாசகர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முற்றும்.

No comments:

Post a Comment