இலங்கை தொடருக்காக புதிய கோரிக்கைகளை விடுக்கும் பங்களாதேஷ்

126

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முன்வைத்திருக்கும் புதிய கோரிக்கைகள், இரண்டு அணிகளுக்கும் இடையிலான தொடரை அறிவிக்கப்பட்ட திகதியில் நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கை அரசாங்கம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கியுள்ள நிலையில், பங்களாதேஷ் அணி தற்போது 3 நாட்கள் தனிமைப்படுத்தலை கோரியுள்ளதாக எமது Thepapare.com இணையத்தளத்துக்கு செய்தி கிடைத்துள்ளது.

இலங்கை வரவிருந்த பங்களாதேஷ் வீரருக்கு கொவிட்-19 தொற்று

அதன்படி, இலங்கை வரும் பங்களாதேஷ் அணி முதல் மூன்று நாட்களுக்கும் ஹோட்டலில் தனிமைப்படுத்தலை கடைப்பிடிப்பதுடன், அதற்கு அடுத்த 4 நாட்களில் உடற்பயிற்சிக்கூடத்தை பயன்படுத்த அனுமதி கோரியுள்ளது. அதேநேரம், 8வது நாள் பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கான கோரிக்கையையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் சபை இதற்கு முன்னர், கொவிட்-19 அதிரடிப்படையுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் படி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக அறிவித்தது. எனினும், மேலும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் படி, பங்களாதேஷ் அணியை அவர்களுடைய நாட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்தலையும், இலங்கையில் 7 நாட்கள் தனிமைப்படுத்தலையும் கடைப்பிடிக்குமாறு யோசனையொன்றை முன்வைத்திருந்தது.

ஆனாலும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தற்போது முன்வைத்துள்ள இந்த கோரிக்கைகள், இந்த தொடரை நடத்துவதில் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது. 

அதேநேரம், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் அபூ ஜெயாட் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக நேற்று, அந்த அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. எனினும், ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், எவருக்கும் கொவிட்-19 வைரஸ் உறுதிசெய்யப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டது.

அதேநேரம், அபூ ஜெயாட்டுக்கு ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் காரணமாக, பங்களாதேஷ் அணி புறப்படுவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த கொவிட்-19 பரிசோதனை ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது என குறிப்பிட்டிருந்தது. இந்த பரிசோதனை அடுத்துவரும் நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டால், பங்களாதேஷ் அணி ஏற்கனவே குறிப்பிட்டவாறு 27ம் திகதி இலங்கையை வந்தடைய முடியாது.

Video – எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திய RCB | Cricket Galatta Epi 36

அவ்வாறு, பங்களாதேஷ் அணி குறிப்பிட்ட திகதியில் இலங்கைக்கு வருகைத்தராத பட்சத்தில், மூன்று போட்டிகள் கொண்ட ஐசிசி சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடர், 2 போட்டிகள் கொண்டதாக நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையால் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இரண்டு கிரிக்கெட் சபைகளின் ஒப்புதல் அடிப்படையில், பங்களாதேஷ் அணி எதிர்வரும் 27ம் திகதி இலங்கை வருவதாகவும், இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஒக்டோபர் 23ம் திகதி ஆரம்பமாகும் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<