இலங்கை வரவிருந்த பங்களாதேஷ் வீரருக்கு கொவிட்-19 தொற்று

102
bdcrictime

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் அபூ ஜெயாட், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நேற்று (23) அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், எந்த வீரருக்கும் கொவிட்-19 வைரஸ் உறுதிசெய்யப்படவில்லை என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பங்களாதேஷ் வீரருக்கு கொவிட்-19 தொற்று சந்தேகம்!

அபு ஜெயாட் தொடர்பில் கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் அணியின் உடற்கூறு வைத்தியர் டெபஷில் சௌத்ரி கூறுகையில், “வேகப் பந்துவீச்சாளர் அபூ ஜெயாட்டுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர், கொவிட்-19 விதிமுறையை பின்பற்றி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைகளை பெற்று வருகின்றார்” என்றார்.  

இலங்கை தொடருக்காக பங்களாதேஷ் அணியின் திறன் பயிற்சியில் இணைந்திருந்த 27 வீரர்களின் மாதிரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம், பயிற்றுவிப்பாளர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஏற்கனவே திட்டமிட்டப்படி நாளைய தினம் (24) பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாம் ஏற்னவே திட்டமிட்டதன்படி, இலங்கைக்கு புறப்படுவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்படவிருந்த கொவிட்-19 பரிசோதனையை திட்டமிட்ட திகதியில் நடத்த முடியாது. இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட நீண்ட இடைவெளி எடுக்குமானால், நாம் மீண்டும் பணிகளை ஆரம்பித்து ஒரு வாரத்துக்குள் 2 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம். குறிப்பாக இறுதி பரிசோதனையை நாம் புறப்படுவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டும். 

அதேவேளை, முக்கியமாக வீரர்கள் எத்தனை நாட்கள் கொவிட்-19 பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டும் என்ற கால எல்லை கிடைக்காத நிலையில், அவர்கள் கடுமையான அழுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்” என டெபஷில் சௌத்ரி மேலும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக அடுத்த மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை – பங்களாதேஷ் சுற்றுப் பயணத்திற்கான உறுதியான இறுதி முடிவுகளை பெறுவதில் இரண்டு கிரிக்கெட் சபைகளும் தற்போதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை.

Video – எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திய RCB | Cricket Galatta Epi 36

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முறைமை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்த நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையால் குறித்த விடயம் நிராகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இறுதியாக இலங்கை கிரிக்கெட் சபை, கொவிட்-19 அதிரடிப்படையுடன் கலந்துரையாடி, இரண்டு நாடுகளிலும் வீரர்கள் தலா 7 நாட்கள் தனிமைப்படுத்தலை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டது. இதற்கும் சரியான முடிவு இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<