குமார் சங்கக்காரவுக்கு விருப்பமான துடுப்பாட்ட வீரர்கள்

1038
Photo - Getty Images

இலங்கை கிரிக்கெட் அணி கிரிக்கெட் உலகிற்கு பரிசளித்த துடுப்பாட்ட நட்சத்திரங்களில் ஒருவரான குமார் சங்கக்கார தனக்கு பிடித்த துடுப்பாட்ட வீரர்கள் பற்றி கருத்து வெளியிட்டிருக்கின்றார்.  

மீண்டும் பிற்போடப்பட்டது லங்கன் ப்ரீமியர் லீக்

தற்போது கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக இருக்கும் குமார் சங்கக்கார, மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் டுவிட்டர் கணக்கில் நடாத்தப்பட்ட கேள்வி-பதில் நிகழ்ச்சி ஒன்றின் போதே, தனக்கு பிடித்தமான துடுப்பாட்ட வீரர்கள் குறித்துக் கூறியிருந்தார்.  

”(எனக்கு பிடித்தமான துடுப்பாட்டவீரர் யார் என்று குறிப்பிட வேண்டுமென்றால்) பிரையன் லாரா வரும் வரையில் அது விவியன் ரிச்சர்ட்ஸ் தான். பின்னர், (இந்த வீரர்கள்) இருவரும் எனது பட்டியலில் சமமான இடத்தினைப் பெற்றுக்கொண்டனர்.” என்றார். 

மேலும் கருத்து வெளியிட்ட சங்கக்கார மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர்கள் இருவருமே தனது துடுப்பாட்ட ஹீரோக்கள் எனத் தெரிவித்ததோடு, தான் கிரிக்கெட் விளையாட்டினை தெரிவு செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் 1996ஆம் உலகக் கிண்ண வெற்றி காரணமாக இருந்தது எனவும் குறிப்பிட்டார்.

”சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் உம், பிரையன் லாராவுமே எனது துடுப்பாட்ட ஹீரோக்கள். 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணியும் நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு என்னை ஊக்கப்படுத்தின.” 

இதேநேரம் தான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர்கள் பற்றியும் குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டார். 

மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகும் நியூசிலாந்து!

”இரவில் வரும் பேய்க்கனவு போல வசீம் அக்ரமின் பந்துவீச்சு இருக்கும். சஹீர் கானினையும் நான் நிறைய தடவைகள் எதிர்கொண்டிருக்கின்றேன் அவரும் (நான் எதிர்கொண்ட) கடினமான ஒரு பந்துவீச்சாளர்.”

இன்னும் தான் விக்கெட்காப்பில் ஈடுபடும் போது தனக்கு கடினமாக இருந்த பந்துவீச்சாளர் இலங்கையின் கிரிக்கெட் அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் என குமார் சங்கக்கார தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 12,400 ஓட்டங்களை குவித்திருக்கும் குமார் சங்கக்கார, டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் ஆறாம் இடத்தில் இருப்பதோடு ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் 14,234 ஓட்டங்கள் பெற்று ஒருநாள் போட்டிகள் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<