கிறிஸ்டல் பெலஸை போராடி வென்றது புளூ ஈகல்ஸ்

360

FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரில் E குழுவுக்காக இன்று இடம்பெற்ற போட்டிகளில் கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகத்தை 2 – 1 என புளூ ஈகல்ஸ் விளையாட்டுக் கழகமும், இலங்கை போக்குவரத்து சபை விளையாட்டு கழக அணியை 3 – 0 என கொழும்பு கால்பந்து கழக அணியும் வீழ்த்தி, இந்த தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தன.

கிறிஸ்டல் பெலஸ் கா.க எதிர் புளூ ஈகல்ஸ் வி.க

சுகததாஸ அரங்கில் செவ்வாய்க்கிழமை (11) இரவு ஆரம்பமான இந்த ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் புளூ ஈகல்ஸ் வீரர்கள் மைதானத்தின் ஒரு திசையில் இருந்து எதிரணியின் கோல் திசைக்கு செலுத்திய பந்தை கிறிஸ்டல் பெலஸ் பின்கள வீரர் ரொஷான் தடுக்கத் தவற, கவிந்து இஷான் புளூ ஈகல்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.   

பொலிஸ் இலகு வெற்றி; இறுதி நிமிடத்தில் சீ ஹோக்கை சமநிலை செய்த செரண்டிப்

கோலுக்கான வாய்ப்புக்களை குறைவாகப் பெற்ற கிறிஸ்டல் பெலஸ் அணிக்கு 40 ஆவது நிமிடத்தில் புளூ ஈகல்ஸ் கோல் காப்பாளர் ருவன் அறுனசிறிக்கு மேலால் பந்தை செலுத்தி மொஹமட் சைட் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

இதனால் முதல் பாதி தலா ஒரு கோல்களுடன் சமநிலையடைந்தது.  

இரண்டாம் பாதியில் 60 ஆவது நிமிடத்தில் புளூ ஈகல்ஸ் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்து பல முயற்சிகளின் பின்னர், கோல் காப்பாளர் இஷ்ஹாக்கிடம்  சென்றது.  அதனை அவர் நழுவவிட, கோலுக்கு அருகில் இருந்த நெத்ம மல்ஷான் பந்தை கோலுக்குள் செலுத்தினார்.

போட்டி நிறைவை எட்டும்போது கிறிஸ்டல் பெலஸ் வீரரை புளூ ஈகல்ஸ் அணியின் ஜீவன்த பெர்னாண்டோ பெனால்டி எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக கிறிஸ்டல் பெலஸ் வீரர்கள் நடுவரிடம் பெனால்டி வாய்ப்பிற்கு கோரிக்கை விடுத்தனர். எனினும், நடுவர் அந்த வாய்ப்பை நிராகரிக்க, போட்டி நிறைவில் மேலதிக ஒரு கோலினால் புளூ ஈகல்ஸ் வெற்றியை சுவைத்தது.  

முழு நேரம்: கிறிஸ்டல் பெலஸ் கா.க 1(1) – 2(1) புளூ ஈகல்ஸ் வி.க

கோல் பெற்றவர்கள்

  • கிறிஸ்டல் பெலஸ் கா.க – மொஹமட் சைட் 40’ 
  • புளூ ஈகல்ஸ் வி.க –  கவிந்து இஷான் 16’, நெத்ம மல்ஷான் 60’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

  • புளூ ஈகல்ஸ் வி.க – நெத்ம மல்ஷான் 20’

கொழும்பு கா.க எதிர் இலங்கை போக்குவரத்து சபை வி.க (SLTB)

இந்த தொடரில் குழு E இற்கான முதல் ஆட்டமாக சுகததாஸ அரங்கில் செவ்வாய்க்கிழமை (11) மாலை இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதி முழுவதும் கொழும்பு அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.  

Video – இரண்டு GOLDEN BOOT வீரர்களுக்கிடையில் காலிறுதி மோதல்! | FOOTBALL ULLAGAM

அவ்வணி வீரர்கள் முதல் பாதியில் 20இற்கும் அதிகமான கோல்களுக்கான வாய்ப்புக்களை பெற்ற போதும் மிகவும் மோசமான நிறைவுகள் காரணமாக அனைத்து வாய்ப்புக்களும் வீணாகின. 

இதன்போது கொழும்பு அணி வீரர் மொமாஸ் யாபோ எதிரணியின் பெனால்டி எல்லையில் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்ட போதும், அதற்காக பெனால்டி வழங்கப்படாமையால் கொழும்பு அணி வீரர்கள் அதிருப்தியடைந்தனர்.  

முதல் பாதி கோல்கள் எதுவும் இன்றி நிறைவுபெற்ற நிலையில், இரண்டாம் பாதி ஆரம்பித்தவுடனும் வாய்ப்புக்கள் கொழும்பு அணியின் பக்கமே இருந்தன. 

போட்டியின் 51ஆவது நிமிடத்தில் மொமாஸ்  யாபோ கோல் எல்லைக்கு வெளியில் இருந்து உதைந்த பந்து SLTB கோல் காப்பாளர் சுதேஷின் கைகளில் பட்டு கம்பங்களுக்குள் செல்ல, முதல் கோல் பதிவாகியது. 

ஆட்டத்தின் முதல் கோல் பெறப்பட்டு 10 நிமிடங்களில் பசால் அவ்வணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றார். 

மீண்டும் 70ஆவது நிமிடத்தில்  சர்வான் ஜோஹர் உதைந்த பந்து கோலுக்குள் செல்ல, கொழும்பு அணி 20 நிமிட இடைவெளியில் 3 கோல்களைப் பெற்றது. 

அதன் பின்னரும் கொழும்பு அணி வீரர்கள் அடுத்தடுத்து வாய்ப்புக்களைப் பெற்ற போதும், அவற்றையும் நிறைவு செய்யத் தவற ஆட்டம் 3 – 0 என நிறைவு பெற்றது. 

முழு நேரம்: கொழும்பு கா.க 3(0) – 0(0) SLTB வி.க

கோல் பெற்றவர்கள் 

  • கொழும்பு கா.க   மொமாஸ்  யாபோ 51’, மொஹமட் பசால் 62’, சர்வான் ஜோஹர் 70 பாஹிம் நிசாம்டீன் (OG) 70’  

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 

  • SLTB வி.க – T.துஷ்மிக 78’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<