ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையில் கோலி, சர்மா முன்னிலை

23

இடம்பெற்று முடிந்த இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் சர்வதேச ஒருநாள் தொடராக மாறியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) புதிய ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைகளை வெளியிட்டுள்ளது. 

தலைவராக டோனியின் சாதனையை முறியடித்த இயன் மோர்கன்

வெளியிடப்பட்டிருக்கும் புதிய தரவரிசைகளில் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார். 

விராட் கோலி 871 தரநிலைப் புள்ளிகளைப் பெற்றிருக்க, 855 தரநிலைப் புள்ளிகளை எடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் ஏனைய நட்சத்திர துடுப்பாட்டவீரரான ரோஹித் சர்மா ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தினைப் பெற்றிருக்கின்றார்.  

பாகிஸ்தான் அணியின் தலைவரான பாபர் அசாம், ஒருநாள் அணிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தினைப் பெற்றிருக்க, ரொஸ் டெய்லர் மற்றும் பாப் டூ ப்ளேசிஸ் ஆகிய வீரர்கள் நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் முறையே காணப்படுகின்றனர்.  

அதேநேரம், நடைபெற்று முடிந்த இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் சதமொன்று விளாசி சிறப்பாக செயற்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் மோர்கன் 22ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்க, இதே ஒருநாள் தொடரில் சிறப்பாக செயற்பட்ட இங்கிலாந்து அணியின் மற்றைய துடுப்பாட்ட வீரர் ஜொன்னி பெயர்ஸ்டோவ் 14ஆவது இடத்தில் இருந்து 13ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கின்றார். 

அயர்லாந்து அணியின் சார்பில் குறித்த ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் சதம் பெற்ற வீரர்களான அன்டி பல்பைர்னி மற்றும் போல் ஸ்டேர்லிங் ஆகிய வீரர்களும் ஒருநாள் அணிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்துள்ளனர். இதில் நான்கு இடங்கள் முன்னேறியிருக்கும் அன்டி பல்பைர்னி 42ஆவது இடத்தில் காணப்பட, போல் ஸ்டேர்லிங் ஒரு இடம் முன்னேறி 26ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.

Video – இனியாவது தொடர்ந்து நடக்குமா LPL?? | Cricket Galatta Epi 31

அயர்லாந்து அணிக்காக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் மூலம் சர்வதேச அறிமுகம் பெற்று, தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அரைச்சதம் விளாசிய கேர்டிஸ் கேம்பர் உம் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் முதல்முறையாக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான ட்ரென்ட் போல்ட் முதலிடத்தில் காணப்பட, இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா இரண்டாம் இடத்தினை தொடர்ந்தும் தக்கவைத்திருக்கின்றார்.

அதேவேளை, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மொத்தமாக 6 விக்கெட்டுக்களைச் சாய்த்த கிரைக் யங் 40 இடங்கள் முன்னேறி 89ஆவது இடத்தினைப் பெற்று, தனது வாழ்நாளில் தான் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பெற்ற சிறந்த இடத்தினைப் பதிவு செய்திருக்கின்றார். 

லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாட இர்பான் பதான் மறுப்பு

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் மணிக்கட்டு சுழல்வீரரான ஆதில் ரஷீட் அயர்லாந்து அணி வீரர்களுக்கு எதிராக கைப்பற்றிய 5 விக்கெட்டுக்களின் காரணமாக நான்கு இடங்கள் முன்னேறி 25ஆவது இடத்தினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஆதில் ரஷீட்டின் சகாவான டேவிட் வில்லி 6 இடங்கள் முன்னேறி 51ஆவது இடத்தினை எடுத்திருக்கின்றார். 

மறுமுனையில் ஒருநாள் சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹமட் நபி, தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.  

ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசை 

espncricinfo

ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை 

espncricinfo

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<