இந்திய கிரிக்கெட் அணியை சீண்டும் சஹீட் அப்ரிடி

159
Getty Images

அரசியல் பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட் உலகில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் எப்போதும் பிரபல்யம் கொண்டவையாக இருப்பதுடன், விறுவிறுப்பானதாகவும் அமைந்திருக்கும்.  

பாகிஸ்தான் அகதிகளுக்கு உதவிய இந்திய வீரர் சிக்கர் தவான்

அதேநேரம், இந்திய – பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகளின் போது இரு நாட்டு வீரர்களிடையே சீண்டல்களும் அடிக்கடி நடைபெறும். கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நேரங்களில் இரு நாட்டு வீரர்களும் விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டும் தங்களை ஒருவரை ஒருவர் சீண்டிக்கொள்வர். அப்படியான விசித்திர கருத்து ஒன்றினை பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர சகலதுறை வீரருமான சஹிட் அப்ரிடி வெளியிட்டுள்ளார். 

கடந்த காலங்களில் இந்திய அணியுடனான போட்டிகளில் விளையாடியதைப் பற்றி குறிப்படும் அப்ரிடி, இந்திய அணியுடனான போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெறும் போது இந்தியா மன்னிப்பு கேட்காத ஒரு நிலைதான் எனக் கூறி, இந்திய அணியினை தாம் அதிக தடவைகள் சரணடைய வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.  

”நான் எப்போதும் இந்தியாவுடன் விளையாடுவதை இரசித்திருக்கின்றேன். நாங்கள் அவர்களை அதிகமுறை வீழ்த்தியிருக்கின்றோம் என்று நம்புகின்றேன். போட்டிகளின் பின்னர் அவர்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்காத (குறை) ஒன்று தான்” என அப்ரிடி யூடியூப் இணையதளத்தில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். 

அப்ரிடி வெளியிட்ட கருத்தானது புள்ளிவிபர அடிப்படையில் உண்மையாகக் காணப்படுகின்றது. இரு அணிகளுக்குமிடையிலான மோதல்களை நோக்கும் போது ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் 73 போட்டிகளில் வெற்றி பெற, இந்திய கிரிக்கெட் அணி 55 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றிருக்கின்றது. அதேநேரம், டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி 13 போட்டிகளிலும், இந்தியா 9 போட்டிகளிலும் வெற்றிகளை பதிவு செய்திருக்கின்றன.  

குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை

ஆனால், T20 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி 8 முறை வெற்றி பெற்றிருக்க பாகிஸ்தான் 6 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இன்னும் கருத்து வெளியிட்ட அப்ரிடி, ”இந்தியா, அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கு எதிராக விளையாடுவதையும் இரசித்துள்ளேன். அந்த அணிகளுக்கு எதிராக விளையாடும் போது உங்களுக்கு அதிக அழுத்தம் இருக்கும். ஏனெனில், அவை நல்ல அணிகள், சிறந்த அணிகள். அவர்களது இடங்களில் சென்று விளையாடுவது கடினமாக இருக்கும்.” என்றார்.

அதேவேளை, இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் தன்மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி தெரிவித்த அப்ரிடி, தனது சிறந்த துடுப்பாட்ட இன்னிங்ஸ் இந்திய அணிக்கு எதிரானது என நினைவுகூர்ந்திருந்தார்.

”எனக்கு மறக்க முடியாத இன்னிங்ஸாக இருப்பது இந்திய அணிக்கு எதிராக நான் பெற்ற 141 ஓட்டங்கள் ஆகும். அதுவும் இந்தியாவில் வைத்து தான். நான் அந்த சுற்றுப்பயணத்திற்கு முதலில் செல்வதாக இருக்கவில்லை. என்னை அழைத்தும் செல்லவில்லை. அந்தப் பயணத்தில் எனக்கு வசீம் அக்ரம் மற்றும் (பாகிஸ்தான்) அணியின் தலைமை தேர்வாளர்களாக இருந்தவர்கள் ஆதரவு தந்தனர். அது மிகவும் கடினமான ஒரு சுற்றுத் தொடர். அந்த இன்னிங்ஸ் எனக்கு மிகவும் முக்கியமானது.” என அப்ரிடி குறிப்பிட்டிருந்தார்.

அப்ரிடி தனது இந்த சிறந்த துடுப்பாட்ட இன்னிங்ஸினை 1999ஆம் ஆண்டு சென்னையில் வைத்து நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<