குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை

365

பாணதுறை பிரதேசத்தில் கார் விபத்து ஒன்றினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  

கார் விபத்து குற்றச்சாட்டில் குசல் மெண்டிஸ் கைது

அந்தவகையில் குசல் மெண்டிஸ், இன்று (6) விபத்து குறித்த விசாரணைகளுக்காக பாணதுறை நீதாவன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரு தனிநபர்களின் சொந்தப் பிணையிலேயே விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். 

குசல் மெண்டிஸ் பாணதுறை பிரதேசத்தில் வைத்து தனது SUV ரக வாகனத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை பயணம் செய்யும் போதே விபத்துச் சம்பவம் ஏற்பட்டிருந்ததோடு, குறித்த விபத்துச் சம்பவத்தில் மெண்டிஸின் வாகனம் தாக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்த 64 வயது நபர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

குறித்த விபத்துச் சம்பவத்தின் பின்னர் மெண்டிஸ் கைது செய்யப்பட்டதோடு, அவர் பயணித்த வாகனமும் பொலிசாரினால் எடுத்துச் செல்லப்பட்டது.

தொடர்ந்து இந்த விபத்து தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் மெண்டிஸ் குடிபோதையில் வாகனம் செலுத்தினாரா? இல்லையா? என்ற கோணத்தில் இடம்பெற்றிருந்ததோடு, மெண்டிஸ் குடிபோதையில் வாகனம் செலுத்தவில்லை என்பதும் தற்போது உறுதியாகியிருக்கின்றது. 

அதேநேரம், ஆரம்பகட்ட விசாரணைகளில் வாகனத்தினை செலுத்தும் போது குசல் மெண்டிஸ் துாக்கக் கலக்கத்தில் இருந்தார் எனத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

இதேநேரம் மெண்டிஸ் விபத்து ஏற்படுத்திய சந்தர்ப்பத்தில் அவருடன் இலங்கை கிரிக்கெட் அணியின் சகவீரரான அவிஷ்க பெர்னாந்துவும் பயணம் செய்திருந்ததோடு, இரண்டு வீரர்களும் இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழியர்களில் ஒருவராக இருக்கும் நபர் ஒருவரின் திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்று வரும் போதே விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

செய்தி மூலம் – Newswire.lk

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க