மே.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜோ ரூட் விளையாடுவதில் சந்தேகம்!

142

கொவிட்-19 வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் மீண்டும் திரும்பவுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. 

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலையில்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூலை மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ளது. அதேநேரம், ஜூலை மாத ஆரம்பத்தில் ஜோ ரூட்டின் மனைவி, தன்னுடைய இரண்டாவது குழந்தையை பிரசவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முதல் போட்டியில் ஜோ ரூட் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

ஜோ ரூட் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாவிட்டால், தற்போது இங்கிலாந்து அணியின் உப தலைவரான பென் ஸ்டோக்ஸ், முதன்முறையாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக செயற்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தனது வாழ்நாளில் மூன்று தடவைகள் மாத்திரமே அணித் தலைவராக செயற்பட்டுள்ளார். டுர்ஹாம் 17 வயதுக்குட்பட்டோர் அணிக்காக ஒரு தடவையும், டுர்ஹாம் அக்கடமி அணிக்காக 2 போட்டிகளிலும் தலைவராக செயற்பட்டுள்ளார். இதில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி சமனிலையாகியுள்ளது. 

இதன்பின்னர், பென் ஸ்டோக்ஸ் தேசிய அணிக்காக விளையாடிய போதும், தலைவராக செயற்படவில்லை. உப தலைவராக கடந்தமுறை நடைபெற்ற ஆஷஷ் தொடரில் செயற்பட்டிருந்தார். 

இவர் தலைவராக செயற்படாவிட்டாலும், இந்த பருவகாலத்தில் அவர் விளையாடிய விதம் அனைவராலும் பாராட்டப்பட்டிருந்தது. அதிலும், உலகக் கிண்ண இறுதிப் போட்டி மற்றும் ஆஷஷ் தொடரின் ஒரு போட்டியென இங்கிலாந்து அணிக்கு மறக்கமுடியாத வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றார். இவ்வாறான நிலையில், பென் ஸ்டோக்ஸின் தலைமைத்துவம் தொடர்பில் ஜோ ரூட் கருத்து வெளியிட்டுள்ளார். 

“அணித் தலைவராக பென் ஸ்டோக்ஸ் செயற்படுவாராயின் அதுவொரு மிகச்சிறந்த விடயமாகும். அணித் தலைவர் என்ற ரீதியில், பென் ஸ்டோக்ஸ் உப தலைவராக வழங்கும் பங்களிப்பு அனைவருக்கும் முன்னுதாரணமாகும். பயிற்சிக்கு அவர் வருவதில் இருந்து, முக்கியமான சந்தர்ப்பங்களில் பந்துவீச்சிலும், கடினமான சந்தர்ப்பங்களில் துடுப்பாட்டத்திலும் உதவக்கூடியவர்.

அவருக்கு அருகில் இருப்பவர்களை தன்னுடன் ஈர்த்துக்கொள்வதுடன், வீரர்களிடமிருந்து அவர்களுடைய முழுமையான திறமையையும் பெற்றுக்கொள்வார். அணித் தலைவர் பொறுப்புக்கு இந்தவொரு திறமை போதுமானது என்பதுடன், அணித் தலைவர் வாய்ப்பு கிடைத்தால் அவரால் சிறப்பாக செயற்பட முடியும். அத்துடன், மிகச்சிறப்பாக அவரது பணியை செய்வார் எனவும் எதிர்பார்க்கிறேன்.

பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதை பார்வையிட அவர் அணித் தலைவராக அல்லது வீரராக இருந்தாலும் ரசிகர்கள் வருவார்கள். கடந்த காலங்களில் மிகப்பெரிய வெற்றிகளை பெற்று வரும் அவருக்கு அணித் தலைமை கிடைத்தாலும், அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வர். வாய்ப்பு கிடைக்காத வரையில் ஒரு வீரருடைய திறமை தெரியவராது. எனவே, பென் ஸ்டோக்ஸிற்கு வாய்ப்பு கிடைத்தால், அணி மிகப்பெரிய வெற்றியினை சந்திக்கவும் வாய்ப்பு காணப்படுகிறது” என்றார். 

இதேவேளை, பென் ஸ்டோக்ஸிற்கு டெஸ்ட் அணித் தலைவர் பொறுப்பினை வழங்குவது தொடர்பில், இங்கிலாந்து கிரிக்கெட் சபை முகாமைத்துவம் மற்றும் அஸ்லி கில்ஸ் ஆகியோர் ஆராய்ந்து வருகின்றனர். பென் ஸ்டோக்ஸ் சவால்களை விரும்புபவர் என்றாலும், அணித் தலைமை பொறுப்பு, அவரது பிரகாசிப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், அவரை இன்னும் உயர்த்துமா? என்ற எண்ணத்தையும் உருவாக்கியுள்ளது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<