Sunday 12 May 2019

பிராண நிறக் கனவு – நூல் அறிமுகம்


அண்டனூர் சுரா எழுதிய `பிராண நிறக் கனவு’ சிறுகதைத்தொகுப்பு வாசித்தேன். பன்முகமேடை வெளியீடாக வந்திருக்கும் இச் சிறுகதைத்தொகுப்பிற்கு திரு லெ.முருகபூபதி அணிந்துரை வழங்கியுள்ளார். அனிதாவிற்கு சமர்ப்பணமாயிருக்கும் இத்தொகுதியின், ஒவ்வொரு கதைகளும் வாசகனுக்கு ஏதோ ஒரு செய்தியைச் சொல்லிச் செல்கின்றன.

மிடற்றுத்தாகம், பிராண நிறக் கனவு, தாழ்ச்சி மகள், ஆணிவேரும் சில சல்லிகளும் – இவை தொகுப்பில் அற்புதமான கதைகள்.

உண்மைச் சம்பவங்களின் -  பத்திரிகைகளில் நாம் வாசித்த உண்மைச் செய்திகளை சுவைபடச் சொல்லியிருக்கின்றார். மாமிசத்துண்டு, பிராண நிறக் கனவு, தீயடி அரவம், இரவும் இருட்டிற்று என்பவை அப்படித்தான் சொல்கின்றன.

இதில் தீயடி அரவம் – ஞானம் சிறுகதைப்போட்டியில் வென்று ஏற்கனவே வாசித்திருந்த கதை. ஒரு மர்மக்கதை போல, அடுத்தது என்ன என வாசகர் மனதில் – கதிரை நுனியில் அமர்த்தி வைத்த கதை.

ஒரு டி.எம்.சி கண்ணீர் ஏற்கனவே வாசித்திருந்தேன். இன்னொரு பெயரில். கர்நாடகா – தமிழ்நாடு சம்பவங்கள் விறுவிறுப்பாகப் போகின்றன.

பிராண நிறக் கனவு – இப்போது பிராண வாயு கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டதாக செய்தி ஒன்று படித்திருந்தேன். மெலிந்தவர் வாழ்க்கையில் எதுவும் நிட்சயமில்லை.

தாழ்ச்சிமகள் – பரதம் பற்றிய அறிவு எனக்குக் கம்மி. அதன் நுணுக்கங்கள் தெரிந்திருந்தால் மிகவும் ரசித்துப் படித்திருப்பேன். இதற்கான கருவை இவர் எங்கிருந்து பெற்றிருப்பார்? வியப்பில் ஆழ்த்துகின்றது. தாழ்த்தப்பட்ட சாதியின் மகள் என `தாழ்ச்சி மகளைப்’ பொருள் கொள்ளலாம்.

தொகுப்பில் சமகால நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் கதைகள் அதிகம். கதைகள் வெளிவந்த ஆண்டுகளைக் குறிப்பிட்டிருந்தால், பிறிதொரு காலத்தில் இத்தொகுப்பை வாசிக்கும்போது அவை நினைவுக்கு வரலாம். ஒரு ஆவணமாகத் திகழலாம்.

இரவும் இருட்டிற்று – சாதி அமைப்பைச் சொல்லிச் செல்லும் கதை. சிறைச்சாலைக்குள் மின்வயரைக் கடித்து இறந்து போனான் என்று புருடா விட்ட செய்தியை ஏற்கனவே வாசித்திருந்தேன். அதை நினைவுபடுத்தியது. இங்கே அவுஸ்திரேலியாவில் நாயை அடித்துக் கொன்றால் சிறைத்தண்டனை.

ஆணிவேரும் சில சல்லிகளும் – தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒட்டுமொத்த சுத்துமாத்துகளை சொல்கின்றது. சுற்றுப்புறச் சூழல் மாசடைவதற்கான காரணங்களை அலசுகின்றது.

இந்தியா – பாகிஸ்தான் முறுகல் நிலையை இதைவிடச் சொல்லிவிட முடியாது என்கின்றது ‘பாகிஸ்தானி பிரியாணிக்கடை’.

‘பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டம்’ – இதுவும் நல்லதொரு விடயத்தைச் சொல்கின்றது. இப்படித்தான் எதையும் இன்னதென்று தெரியாமலே சில விடயங்கள் நடந்தேறிவிடுகின்றன. பாவம் அந்தக் காது கேட்காத ஊமைப் பையன். அவர்களுக்கு வேண்டும் ஒரு மனிதன். அவ்வளவும் தான்.

கவிதை உறவு திங்களிதழ் நடத்திய சிறந்த நூலுக்கான தேர்வில் இத்தொகுப்பு பரிசு பெறுவதையிட்டு மகிழ்ச்சி.
w
அக்கினிக்குஞ்சு (மே 04, 2019)



No comments:

Post a Comment