Tuesday 11 June 2019

சுவருக்கும் காதிருக்கும்!

பாபு குடும்பத்தினர் இந்த வருடம் ஈஸ்டர் விடுமுறையின் போது, மெல்பேர்ணில் உள்ள 'லேக் என்றன்ஸ்' (Lake Entrance) போய் வர விரும்பினார்கள். அப்படித் தொலைதூரம் போய் வரும் சந்தர்ப்பங்களில், தங்களது வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி மார்க்கிடம் சொல்லிவிட்டுப் போவார்கள்.

மார்க், பாபுவின் வீட்டிற்கு இடப்புறமாக இருக்கும் ஒரு வெள்ளை இனத்தவர். வீட்டைச் சுற்றி இருக்கும் மனிதர்களில், அவருடன் மாத்திரமே பழகக் கூடியதாக இருக்கிறது. வலப்புறம் இருப்பவர்கள் இவர்களைக் காணும் தோறும் முகத்தை சிடுமூஞ்சித்தனமாக வைத்திருப்பார்கள். அவர்களை இன்னமும் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. பின்வீட்டில் இருப்பவர்களைப் குறுக்கு மதிலை உயர்த்திவிட்டு குடியிருக்கின்றார்கள். வீதிக்கு எதிர்புறமாக ஒரு சீனக்குடும்பம் உள்ளது. அவர்கள் காணும்போது சிரிப்பார்கள். ஏறக்குறைய பாபுவின் குடும்பம் இந்த வீட்டிற்கு வந்து ஐந்து வருடங்களாகின்றன.

பாபுவிற்கு பள்ளிக்கூடம் போகும் வயதில் ஒரு மகளும் மகனும் இருக்கின்றார்கள். வீட்டைவிட்டு வெளியில் போகும் போது 'செக்கியூரிட்டி எலாமை'ப் போட்டுவிட்டுப் போவார்கள். திரும்பி வீட்டிற்கு வரும்போது அந்த 'எலாமை' தான்தான் நிற்பாட்டுவேன் என அவரது மகன் அடம் பிடிப்பான். காரினில் இருந்து இறங்கும்போதே 'சிக்ஸ் சிக்ஸ் நைன் ரூ' (six six nine two) என்று கத்திக் கொண்டே இறங்குவான். அவன் கத்துவதைப் பார்க்க பாபுவின் மனைவிக்குக் கோபம் வரும்.
"உப்பிடி பிலத்து நம்பரைக் கத்தினால், கள்ளனுக்கு வசதியாப் போய் விடும்" என்று எத்தனையோ தடவைகள் அவனுக்குச் சொல்லி விட்டாள். அவன் கேட்பதாக இல்லை. விளையாட்டுப் புத்தி. இதனால் அடிக்கடி செக்கியூரிட்டி எலாமின் இரகசிய இலக்கத்தை மாற்றவேண்டி வந்தது. அந்த இலக்கத்தை மாற்றுவதற்கு பாபுவிற்கு அரைமணி நேரம் பிடிக்கும்.

"உனக்கு எலாமின்ர நம்பரைச் சொல்ல வேணும் போல இருந்தா, இனிமேல் தமிழிலை சொல்லு" என்று மகனுக்குக் சொல்லிக் கொடுத்தார் பாபு.

"நாலு நாலு எட்டு மூண்டு" என்ற புதிய இலக்கங்களை வீட்டை விட்டு வெளிக்கிடும் போது கத்துவான் மகன், திரும்ப வீட்டிற்கு வரும்போதும் கத்துவான். அவன் கத்துவதற்கு முன்பாக 'தமிழ் தமிழ்' என்று அவனது அக்கா சத்தமிடுவாள்.

அவர்களது வலதுபுற வீட்டில் இருக்கும் சிடுமூஞ்சிக்காரர்களுக்கும் புல்லுக்கும் யாரோ 'செய்வினை சூனியம்' செய்திருக்க வேண்டும். எப்ப பார்த்தாலும் நிலத்திலே விழுந்து கிடந்து புல்லுடன் போராடிக் கொண்டிருப்பார் அந்த வீட்டு மனிதர். இதனால் பாபு குடும்பத்தினர் எந்த நேரம் வெளியே போகிறார்கள் வருகின்றார்கள் போன்ற தகவல்கள் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இதைவிட பாபுவின் வீட்டிற்கு நாலைந்து வீடுகள் தள்ளி இருக்கும் ஒரு 'கொண்டோடிப் பெண்' செய்யும் கொடுமை சொல்லில் எழுத முடியாது. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இவர்கள் நித்திரை விட்டு எழும்புவதற்கு முன்பாக தனது நாயை இவர்களின் வீட்டிற்கு முன்பாகக் கொண்டு வந்து 'கக்கா' இருத்திவிட்டுச் செல்வாள் அவள். அவளுக்கு அதில் ஒரு இன்பம். நாயிற்கும் இன்பம்.

'லேக் என்றன்ஸ்' போய் மூன்றாம் நாள் மார்க்கிடம் இருந்து தொலைபேசி வந்தது. வீடு களவு போய்விட்டது. தான் பொலிசிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இவர்கள் வீடு வரும்வரைக்கும் தான் வீட்டைப் பார்த்துக் கொள்வதாகவும் சொன்னார் மார்க்.


இனி என்ன உல்லாசம் வேண்டிக் கிடக்கின்றது. வீட்டிற்குத் திரும்பினார்கள். பிள்ளைகள் வாயைத் திறக்காது, மூச்சை இறுக்கிப் பிடித்தபடி வந்தார்கள். கள்வர்கள் வீட்டை வழிச்சுத் துடைத்து எடுத்துக் கொண்டுபோய் விட்டார்கள். தூக்க முடியாத கட்டில், செற்றி போன்றவற்றை கத்தியால் கீறிவிட்டுச் சென்றிருந்தார்கள்.

“உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உண்டா?” என்று பொலிசார் கேட்டார்கள். சந்தேகம் எல்லோர் மீதும் இருக்கும்போது எப்படிச் சொல்வது?

“இல்லை” என்று சொல்லிவிட்டுக் கவலையில் ஆழ்ந்தார்கள் பாபு குடும்பத்தினர். ’நாங்கள் வீட்டிற்கும் பொருட்களுக்கும் இன்சுரன்ஸ் செய்திருக்கின்றோம்’ என்று எல்லோருக்கும் வெளியே சொன்னாலும் உண்மையில் அவர்கள் இன்சூரன்ஸ் செய்திருக்கவில்லை.

வீட்டின் கதவைத் திறந்து, 'செக்கியூரிட்டி எலாமை' சரியாக நிற்பாட்டிவிட்டுத்தான் கள்வர்கள் உள்ளே சென்றிருக்கின்றார்கள்.

பொலிசார் அருகே உள்ள வீடுகளுக்குச் சென்றார்கள். விசாரணை செய்தார்கள். அவர்களுக்கு வலது புற வீட்டுக்கார மனிதரிடம் சந்தேகம் எழுந்தது. அதற்குக் காரணம் பொலிஸ் அவனின் வீட்டைக் கடந்து சென்றபோது, அவன் புல்லிற்குள் விழுந்துகிடந்து பாபுவின் வீட்டை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டிருந்ததுதான். அவன் மீது சந்தேகம் வலுக்க விசாரணையை முடுக்கிவிட்டார்கள். அவனது வீட்டிற்குள் சென்று வீடு முழுவதையும் சல்லடை போட்டனர். அவன் வேலைக்கு எடுத்துச் செல்லும் `பாக்’கினுள் இருந்து, `naalu naalu eddu moondu’ என்று ஆங்கிலத்தில் எழுதிய தடித்த அட்டை ஒன்று கீழே விழுந்தது. ஒருவன் அவனிற்குக் காவல் நிற்க, மற்றவன் அந்த அட்டையுடன் பாபுவின் வீட்டிற்குச் சென்றான். அட்டையை பாபுவிடம் நீட்டி, “இதில் என்ன எழுதி இருக்கின்றது எனப் பார்த்துச் சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் பொலிஸ்காரனைச் சூழ்ந்து நின்றனர்.

“நாலு நாலு எட்டு மூண்டு.... four four eight three…. இது எங்கள் வீட்டு எலாமின் நம்பர்” திகைத்தபடியே பாபு சொன்னான்.

பொலிஸ்காரனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவன் தானும் தன் பங்கிற்கு, `naalu naalu eddu moondu’ என்று சொல்லிக் கொண்டான். “இதுதான் எல்லாத்துக்கும் காரணம்” என்றான். அப்போது பாபுவின் மனைவி பொலிஸ்காரனுக்குத் தெரியாமல், மகனின் காலை ஒரு உழக்கு உழக்கினாள். அவன் ஒருவித சத்தமும் போடவில்லை. பொலிஸ் ஜீப்பை நோக்கி, கைவிலங்கை எடுத்து வருவதற்காகச் சென்றான்.


No comments:

Post a Comment