அவள் -7

Share

ஆமாம்.சரிந்திட்டாள். இவ்வேலையில் இணைந்து சில நாட்களிலே பல ஆண் நண்பர்கள். இன்னொருவரும் இணைகிறார்; எந்தவொரு விதத்திலும் விஷேசமாக தெரிந்திடாத அவர்.
கண்டதும் காதல் ஒரு வகை எனின், பழகிப்பேசி புரிவது இன்னொரு ரகம் ;இரண்டும் இல்லாமல் தூரம் நின்று கொஞ்சம் கொஞ்சமாக அச்சரிதத்தை நேசிப்பது இன்னொரு ரகம் ; இல்லையெனில் , கௌரவக்காதல் ; அது என்ன? இவள் / இவன் கவர்ந்திழுக்கும் பாணியினளாய் இருந்திட்டு அவரை நம் வலையிலிட்டால் ,நாமும் பேசப்படுவோம் என்று வரும் காதல்.

ரொம்ப இழுக்கின்றேனோ??

இவளின் காதல், எவ்வகையினாய் இருக்கும்? இவள் இயல்பு தெரிந்திட்டால், இவள் காதலையும் யூகிக்க முடிந்துடும்!

ரெண்டு தெரு தள்ளி வீடிருக்கும் இருவர் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வது ஆச்சரியம் அல்லவா?
முகநூலில் நட்பு கோரிக்கையை ஏற்கும் அவள்,குறுஞ்செய்திகளுக்கும் பதில் அளிக்கிறாள்.
(முதலிலே சொல்லியிருந்தேன் அல்லவா? தொலைபேசியும் இணையமும் நமக்கு நல்லதல்லா வழியை காட்டும் என. இங்கு ஆரம்பிக்கின்றது அனைத்தினதும் ஆரம்பம்! பழக்கமில்லா ஒருவர் அனுப்பும் செய்திகளுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும்?)
இணையம் மட்டுமல்ல ,சரியான வழிகாட்டல் இல்லாமையும் பகிர்ந்திட சொல்லிடம் இல்லாமையும் இத்தவறுகள் அனைத்திற்கும் காரணமாக அமைகிறது.

நம் சந்ததியினரிடையே சென்ற சந்ததியினரை விட அதிகமான மனக்குழப்பங்கள் உள்ளமை நாமே கண்களில் காண்கிறோம் . நம் பெற்றோர் இவ்வயதில் கூட புலம்பா விடயங்களுக்கு நாம் இப்போவே புலம்பித்திரிகிறோம் .
“என்னை பொறுத்தவரை ” இதற்கு முக்கிய காரணம் நம்மனது ஏற்றிடும் சிறந்த நண்பனோ நண்பியோ நம்மில் பெரும்பாலானோருக்கு இல்லாததே. வெளித்தோற்றத்திற்கு ஒருவர் கண்டிப்பாக இருப்பர்.

என்னடா ,கதையினுள் தத்துவங்கள்? என பயந்திடாதீர்கள் .இதை மட்டும் சொல்ல நினைத்தேன்.
நம்பக்கூடிய , உன்னை மதிப்பெண் இட்டு பார்க்காத ஒருவரிடம் கலந்துரையாடி எதையும் செய்;அப்படி கலந்தாலோசிக்க முடியாத எதையும் நீ செய்யக்கூடாது என உறுதி கொள் !மனமே!

கதைக்கு வருவோம் .

சொல்ல இடமில்லாத பெண் , தன்னை நோக்கி வந்த அம்பையும் நிறுத்தி கதைத்திடும் நிலையில் தான் இருந்தாள் .செல்வதும் வருவதும் ஒரே பேருந்தில், கதைத்திட்ட விடயங்களோ ஆயிரம்;
சிறு நிறுத்தம்; இவ்வொரு இடத்திலேயே அவளுக்கு கதைக்க கிடைத்தது.

ஒரு சில மாதங்களிலேயே நான் எல்லாம் பகிர்ந்துகொள்ள கூடிய ஒருவர் கிடைத்து விட்டார் என நம்புகிறாள்.

அவள் நண்பியாய் கேட்கிறேன், ஒரு சில மாதங்களில் அப்படி உனை பற்றி எவ்வளவை நீ இன்னொருவருக்கு புரிய வைக்க முடியும்? எப்படி நீ புரிய வைத்தாய் என நீ நம்பினாய்? நீ என்பது இது அல்ல, நீ எவ்வளவோ கனவுகள் கொண்டவள்…மறந்து விட்டாயா? பாடசாலைக்காலத்தில்…

புரிந்துகொண்டிருப்பாளா அவள்?..

Image Courtesy : https://bit.ly/2OMf3Qz

 
Tagged : /