இதுவரை வைரமுத்து…

Share

சுழன்று கொண்டிருக்கின்ற பூமியில் இரவும் பகலும் எப்படி மாறி மாறிக் கடந்து செல்கின்றதோ அதே போல, தினமும் நாம் கடந்து செல்கின்ற மனிதர்கள்  ஏராளம். அந்த மனிதர்களில் சிலர் மட்டுமே எமது மனங்களில் ஆணியடித்தது போல் ஒட்டிக் கொள்கிறார்கள். அவர்களில் நம் உறவுகளையும் நண்பர்களையும் தவிர இன்னும் சிலர். அந்த  ஒரு சிலரில் ஒருவரே கவிப்பேரரசு வைரமுத்து. தமிழ் கவியுலகமும் இந்திய சினிமாவும் இலகுவில் மறக்க முடியாத ஒரு  பேராற்றல்.

இந்த மனிதன் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்க போகிறேன். உங்களுக்கும் கொஞ்சம் திசைகளை காட்டப்போகிறேன். அந்தப்பாதை ரோஜாப்படுக்கைகளை மட்டும் கொண்டதல்ல கூடவே முட்களும் நிறைந்தது.
வடுகபட்டிக்காரர் என்று பலராலும் அறியப்பட்ட வைரமுத்து உண்மையில் வடுகபட்டியில் பிறந்தவரல்ல. 1953 .07.13 ம் திகதி மேட்டூர் எனும் கிராமத்தில் மொட்டு விரித்த கமலம் இவர். இன்று, இந்த கிராமம் இந்திய வரைபடத்தில் நீரின் கீழே மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது. ஆமாம் , 1950 களில் வைகை அணைக்கட்டு கட்டுவதற்கு திட்டமிடப்பட்ட வேளையில் அதனை சுற்றியிருந்த பத்துப்பதினைந்து கிராமங்கள் காலி செய்யப்பட்டன. அதிலொரு கிராமம் தான் மேட்டூர் . அந்த கிராமத்தில் பிறந்த இந்தக்கவிஞன் அன்றைய தினம் தனது பத்தாவது வயதில் தாய் , அங்கம்மாளின் கையைப்பிடித்துக்கொண்டு முழங்கால் வரை மூழ்கடிக்கும் தண்ணீரில் நடந்து கரையேறி தாமரைக்குளத்தில் குடியேறியவர். பத்து வயதிலே தனது கண்ணீர் துளிகளை வைகை வெள்ளத்தில் தொலைத்து விட்டு வந்தார்;தனது கிராமத்தை தொலைத்தது போலவே.
பின்னர் தாமரைக்குளத்தின் குளத்தங்கரையில் இருந்த சிறிய பள்ளிக்கூடத்தில் தனது ஆரம்பக் கல்வியை பயின்றவர்,இதன் பிறகே வடுகபட்டிக்கு குடி பெயர்ந்தார். அங்கு மீண்டும் முதலாம் வகுப்பில் இணைந்து படிக்கத்தொடங்கினார். அது அன்றைய அரசினர் உயர் நிலைப் பள்ளி, வடுகப்பட்டி ஆகும். பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவனாக இணைந்து கொண்டார். முதலில் இவர்  மருத்துவக்கல்வி பயிலலாம் என்ற நோக்கோடு அறிவியல் பிரிவில் சேர்க்கப்பட்டார். தமிழின் மீது தீராத காதல் கொண்டிருந்த வைரமுத்துவிற்கு அறிவியலின் கனம் வேப்பங் காயாய் கசந்ததில் வியப்பில்லையே. இதனால் அறிவியல் பிரிவை விட்டு விட்டு தமிழ் துறைக்கே சென்று விட்டார். அத்துறையில் கற்று எம்.ஏ பட்டதாரியானார்.
சிறுவயது முதலே வாசிப்பில் பெரும் நாட்டம் கொண்டிருந்தார். நூலக வருகைப்பதிவேட்டில் நாளொன்றில் முதலாவதாகவும் , இறுதியாகவும் கையொப்பமிடுவது நான்  தான் என்று அவரே பெருமிதமாக சொல்லும் அளவிற்கு நூல்களின் மீதும் நூலகங்களின் மீதும் விருப்புடையவர். பிற்காலத்தில் தனது பேச்சுப் போட்டிகளுக்கும் கவிதையறிவிற்கும் நல்ல நூல்களையே காரணமாக கொண்டிருந்தவர்.

தனது ஐந்தாம் வகுப்பிலே பேச்சுப்போட்டிக்கு தயாரானார் . வினோபாபாவேயைப் பற்றியதே அந்த பேச்சு.  இந்த  அனுபவத்தில் திக்குமுக்காடிப் போனார். ஒரு வரிக்கும் அடுத்த வரிக்குமாக நிதானித்து ‘ வினோபாஜிக்கு பதினான்கு மொழிகள் தெரியும்’ என்பதையே பல முறை கூறியபடி வெட்கிக் குனிந்து வணக்கம்  என்ற வார்த்தையோடு கீழிறங்கிய வைரமுத்து அவர்கள், பிற்காலத்தில் பாடசாலை காலைக்கூட்டத்தில் தினசரி செய்தி வாசிப்பதும் , திருக்குறள் கூறுவதும், கருத்துக்கருவூலம் எனும் தலைப்பில் அறிஞர்களுடைய கருத்துக்களை மாணவர்களுக்கு கொண்டு செல்வது ஆகிய திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதே போல் கவிதைகளின் மீதும் தீராத வெறி கொண்டிருந்தார். இந்த கவிதை திறமையை பாடசாலை பரீட்சை வினாத்தாளில் எழுதிய போது நேர்ந்த சுவையான சம்பவங்களை கூட அவர் பதிவு செய்திருக்கிறார்.

சிறு  வயது முதலே திராவிட இயக்கத்தின் மீது இருந்த பற்றும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள் மீதிருந்த காதலும் , கண்ணதாசனின் பாடல் வரிகளின் மீதிருந்த மோகமும், வைரமுத்து  என்ற விதைக்கு வெப்பம் காற்று ஈரமாகி அவரை கவிஞனாக்கியது. நண்பர்களோடு பேசப்பட்ட வைரமுத்துவின் கவிதைகள் பத்திரிகையில் அச்சாகின. ஒளிப்பூக்கள் எனும் அவரது கவிதை தமிழரசு பத்திரிகையில் பிரசுரமானது. இதனால் வைரமுத்து  என்ற பெயர் பலரை அடைந்தது. பின்னாளில் கல்லூரியில் வைரமுத்துவின் கண்ணகி எனும் கவிதையும் , கண்ணதாசன் அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில் ‘வாய்’ என்று சந்தமாக அமைந்த அவரது கவிதையும் பலராலும் பேசப்பட்டது.  இந்த நிலையில் கல்லூரி நண்பன் ராசேந்திரனின் உதவியோடு தனது முதல் கவிதை நூல் பிரசவமான “வைகறை மேகங்கள்” எனும் படைப்பை தந்தார்.

இதன் பின்னர்  வானொலிகளிலும் இவரது கவிதைகள் அரங்கேறியது. இந்த காலகட்டத்திலே பொன்மணி எனும் பெண் வசம் மனதை பறி கொடுத்த வைரமுத்து பின்னாளில் அவரையே பதிவுத் திருமணம் செய்து வாழ்க்கை துணையாக பெற்றுக் கொண்டார். இதற்கிடையே டாக்டர் ஔவை நடராசன் போன்றோரின் ஏற்பாட்டில் பல கவியரங்கிலும் கலந்து கொண்டார். பெற்றோர்களின் மறுப்பில் நடந்தேறிய இவரது திருமணத்தின் பின்னரான காலப்பகுதியில் ஒரு சிறிய வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டு எதிர்கால கனவுகளை செதுக்கி கொண்டார். அந்த நேரத்தில் தமிழ் நாடு சட்டத்துறை ஆட்சி மொழி ஆணையத்தில் மொழி பெயர்ப்பாளராக கடமை புரிந்தார்.
இந்த காலகட்டத்திலே வைரமுத்து மிகவும் சிரமப்பட்டார். சராசரி வருமானமே அவரது வாழ்க்கையாகிப் போனது. இதன் போது சிலரது  உதவியால் பொன்மணி அவர்களுக்கு துணைப்பேராசிரியர் பதவி கிடைக்க  திருவல்லிக்கேணியிலிருந்து விடை பெற்றுக் கொண்டார்.  இதன் பின்னர் இன்னும் அதிகமாக கவியரங்கங்களிலும் கலை விழாக்களிலும் பங்கு கொள்கிறார். இவ்வேளையில் இவரது ‘ திருத்தி எழுதிய தீர்ப்புகள் ‘ எனும் புதுக் கவிதை நூல் பலரது  உள்ளங்களிலும் பதியம் போடப்பட்டது.
கவிதைகளை நேசிக்கின்ற  இந்த  உள்ளம், தமிழ் சினிமாவில் கால் பதிக்க  எண்ணியது. இதன் போது ஒரு நிகழ்வில் கங்கை அமரனை சந்திக்கும் வாய்ப்பை பெற்றவர் ,பின்னர் இயக்குநர் திரு. பாரதி ராஜா அவர்களை ஓவியர் திரு. உபால்டு மூலமாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். பாரதி ராஜா இவரோடு பேசி விட்டு ” மெட்டுக்கு எழுத வருமா” என்றாராம்.
இவர் “முடியும்” என பதிலளிக்க சந்தேகத்தோடு பார்த்தவர் ” ஆனாலும் நீங்கள் என் படத்தில்  எழுதுகிறீர்கள் ” என்று கூறி அனுப்பி வைத்தாராம்.
சில நாட்களிலே பொன்மணி தலைப்பிரசவத்திற்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.  அதே நாளில் திரு.பாரதி ராஜா படத்திற்கு பாட்டெழுத அட்லாண்டிக் ஹோட்டல் வருமாறு அழைப்பு வரவே பெருத்த கவலையோடு மனைவியை விட்டு விட்டு தன்னம்பிக்கையோடு கிளம்புகிறார். அங்கே திரு. இளையராஜா ஆர்மோனியத்தை இசைக்க திரு. பாரதி ராஜா பாடல் வருகின்ற படத்தின் காட்சியை விளக்க  அந்த  இடத்திலேயே வைரமுத்துவிற்கு பல்லவி பிறக்கிறது.

” பொன் மாலைப் பொழுது – இது ஒரு பொன் மாலைப் பொழுது
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள் ”

என எழுதுகிறார். மெட்டிற்கு பாடல் சரியாக அமைய தொடர்ந்து சரணங்களையும் எழுதுகிறார். இதன் போது நடந்த  ஒரு சுவாரசியமான சம்பவத்தையும் வைரமுத்து பதிவு செய்கிறார்.  பாடல் முடிய திரு. இளையராஜா அவர்கள் தன்  உதவியாளரிடம் ” வைரமுத்துவின் முகவரியை வாங்கி வைத்துக் கொள்ளப்பா” என்றாராம். எல்லோரும் சென்ற பின்னர் திரு. பாரதி ராஜா  “இவன்  இதுவரைக்கும்  எவன்  முகவரியையும்  வாங்கி வைத்துக் கொள்ள சொன்னதில்லை. இன்று முதல் உங்களுக்கு புதிய எதிர்காலம் என பாராட்டினாராம். கூடவே ஐம்பது ரூபாய் கட்டு ஒன்றை நீட்ட வைரமுத்து மறுத்து விட்டு கடைசியில் ஒரே  ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து கொண்டு வைத்தியசாலைக்கு செல்ல  அங்கே  அவருக்கு  ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறார். இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள்.
சினிமாவில் கால் பதித்த பின்னர் வைரமுத்துவின் ஆசனத்தை கைப்பற்ற எவருமில்லை  என்ற நிலை தோன்றி விட்டது. தொடர்ச்சியாக பாடல்கள், விருதுகள், மேடைகள் ,பேச்சுக்கள் என ஓய்வின்றி தமிழிற்காக உழைத்து கொள்கிறார். தமிழ் திரையுலகமே கண்ணதாசனின் பின் விதவையாக கிடந்த மெட்டுக்களுக்கு கவிதைப் பொட்டுக்கள் இட்டவர் வைரமுத்து  என இவருக்கு புகழாரம் சூட்டுகிறது. எத்தனை  இயக்குநர்கள் , எத்தனை  இசையமைப்பாளர்கள் , எத்தனை கலைஞர்கள்  இவரோடு பயணிக்க அவா கொள்கிறார்கள்.
இன்றுவரையில் 7500 பாடல்களுக்கு மேலே எழுதிவிட்டார். கிட்டத்தட்ட 40 நூல்களை எழுதியிருக்கிறார். பல கவிதைகளுக்கு சொந்தக்காரர். தமிழ் சினிமாவின் பாடலாசிரியர் என்பதனை தாண்டி இவர் எழுதிய நூல்களே இவரது திறமைக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டுகள். தண்ணீர் தேசம், சாகித்ய அகாடமி விருது பெற்ற கள்ளிக்காட்டு  இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் , போர்க்களத்தில் இரு பூக்கள் , வைரமுத்து சிறுகதைகள்,  ஆயிரம் சினிமா பாடல்கள், கொடிமரத்தின் வேர்கள், சிற்பியே உன்னை செதுக்குகிறேன், ரத்த தானம், கல்வெட்டுகள், திருத்தி எழுதிய தீர்ப்புகள்,  என் ஜன்னலுக்கு வெளியே, பெய்யெனப்பெய்யும் மழை, மீண்டும் என் தொட்டிலுக்கு, கவிராஜன் கதை , எனது பழைய பனையோலைகள், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, இதுவரை நான், நேற்று போட்ட கோலம்,  வைரமுத்து கவிதைகள் போன்ற  இவரது படைப்புகள் என்றும் எம் மனதில் நிலைத்து நிற்கின்ற படைப்புக்களாகும்.

விருதுகள்  இவர் வீட்டு விலாசம் கேட்டு வருகின்ற ரசிகர்கள் போலத்தான்,  பல விருதுகளுக்கு சொந்தக்காரர். தமிழ் திரைப்பட பாடல்களின் தரத்தை  இந்திய சினிமாவை உணர வைத்தவர். இவரது பல படைப்புகள் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை ஹிந்தி மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளனர்.
வைரமுத்து  அவர்களிற்கு 1990 ம் ஆண்டு கலைமாமணி விருது, 2003ல் பத்மசிறி விருது , 2014 ல் பத்மபூஷண் விருது ஆகியன வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏழு தடவைகள் சிறந்த பாடலாசிரியருக்கான  தேசிய விருதினை வென்றுள்ளார். 1986 ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் மரியாதை படத்திற்காக தேசிய விருதினை வென்றார். தொடர்ச்சியாக 1993 ல் ஏ. ஆர் .ரஹ்மானின் முதல் திரைப்படமான ரோஜா படத்தின்  ‘சின்ன சின்ன  ஆசை..’ பாடலிற்காகவும், 1995 ல் கருத்தம்மா , பவித்ரா ஆகிய திரைப்படங்களிற்காகவும் , 2000 ல் சங்கமம் திரைப்படத்தில் ‘ முதல் முறை கிள்ளிப்பார்த்தேன் ‘ என்ற பாடலிற்காகவும், 2003 ல் வெளிவந்து ஈழத்தமிழர்களின் உணர்வலைகளை வெளிப்படுத்திய , இன்று கேட்டாலும் விழிகள் பனிக்கின்ற ‘ விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும்  வீடே’ போன்ற பாடல்களை கொண்ட கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காகவும் , 2011 ல் தாய்மையை போற்றி தென்மேற்கு பருவ காற்று எனும் படத்தில் ‘ கள்ளிக்காட்டில் பொறந்த தாயே என்ன கல்லுடைச்சி வளர்த்த நீயே’ என்ற பாடலிற்காகவும் இறுதியாக மீண்டும் 2017 ல் தர்மதுரை படத்திற்காக ‘ எந்தப் பக்கம் காணும் போதும் வானமுண்டு ‘ என்று காதல் தோல்வியால் துவண்டு விழுகிற இளைஞர்களை தூக்கி நிறுத்தும் பாடலென மொத்தமாக ஏழு தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

இது தவிர தமிழக அரசு விருது , பில்ம் பெயர் விருது , விஜய் அவார்ட்ஸ் என இவர் குவித்த விருதுகளின் எண்ணிக்கை ஏராளம். காய்க்கின்ற மரத்திற்கு கல்லடி விழுவது போல இவருக்கு எதிராக சர்ச்சைகள் கிளம்புவதுமுண்டு. அண்மையில் கூட ஆண்டாள் தொடர்பில் இவரது பேச்சு சர்சையை ஏற்படுத்தியதும் அதற்காக வைரமுத்துவின் நாக்கினை அறுக்க வேண்டும் என அரசியல் வாதிகள் கோஷமிட்டதும் அவருக்கு ஆதரவாக சில இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் குரல் கொடுத்ததும் மறக்க கூடிய ஒன்றல்ல. எத்தனை சவால்கள் வந்த போதும் எத்தனை  எதிர்ப்புகள் வந்த போதும் இன்றும் அவர் வெற்றிகரமாக பயணித்து கொண்டே இருக்கிறார்.
இளைய தளபதி விஜய் கூட ஒரு முறை ‘எல்லோருக்கும் டாப் டென் மாறும் , ஆனால் வந்த நாளில் இருந்து  இன்றுவரை தொடர்ந்தும் பாடலாசிரியருக்கான வரிசையில் வைரமுத்து அவர்கள் முதலிடத்திலே இருக்கிறார்’ என்று கூறினார்.

தமிழ் தாயின் மகன் , பல இளம் கவிஞர்களின் ஆசான் கவிப்பேரரசு அவர்கள்  இவ் வருடம் தனது அறுபத்தைந்தாவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இக் கலைஞன் இறைவனின் சகல ஆசிகளையும் பெற்று  இன்னும் பல வருடங்களாக நல்ல தேகாரோக்கியத்துடன் தமிழ் பணி செய்ய வாழ்த்துகிறேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனும்,  அவரையே துரோணராக எண்ணி வாழும் ஏகலைவனாகிய நான்.
அன்புடன் வாழ்த்துக்கள்

Image Courtesy : https://d1u4oo4rb13yy8.cloudfront.net/article/78796-mfrblnibmq-1515592606.jpg

By: Pakkiyarasa Mithurshan

 
Tagged : / / /