Wednesday 21 February 2018

முகநூல் நண்பர் தங்கேஸ் மறைவு


நேற்றைய தினம் (20.02.2018) வேலை முடித்து வீடு வந்ததும், முகநூலைத் திறந்தபோது அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

தங்கேஸ் இராசையா காலமாகிவிட்டார் என்ற செய்தி. என்னுடைய வயதுதான் அவருக்கும் இருக்கும்.

2015 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முகநூலின் மெசஞ்சர் (messenger) மூலம் என்னுடன் தொடர்பு கொண்டார். கதிர்.பாலசுந்தரம் அவர்கள் எழுதிய ‘வன்னி’ நாவலினால் ஈர்க்கப்பட்டு, அதன் புத்தக வடிவத்தை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று கேட்டிருந்தார். அப்போது ‘வன்னி’ நாவல் எனது blog இல் தொடராக வந்துகொண்டிருந்தது.

அதிலிருந்து என்னுடன் மெசஞ்சர் மூலம் உரையாடத் தொடங்கினார். என்னுடைய ‘சுருதி’ blogஐ ‘நிலக்கிளி’ பாலமனோகரன் அவர்கள் தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும், என்னுடைய blog இல் உள்ள குறும் கதைகள் தன்னைக் கவர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

முல்லைத்தீவு கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1977 தொடக்கம் 1981 வரை வவனியாவில் கல்வி பயின்றவர். 1983 இல் விவசாய பீடத்திற்கு தெரிவாகியதாகவும், என்னுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பசில் தவராஜா, குலவீரசிங்கம், தேவலிங்கம் போன்றோர் தன்னுடைய நண்பர்கள் என்று சொன்னார்.

கனடாவிற்கு 1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து சென்றார்.

வன்னி மண்ணை விட்டுப் பிரிந்து வந்தது மிகவும் கவலை தருவதாகச் சொன்னார். அவரது உரையாடலில் இருந்து ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதை அறிந்து கொண்டேன்.

பிறிதொருநாள் என்னுடைய மின்னஞ்சலிற்கு ஒரு சிறுகதையை அனுப்பி வைத்துவிட்டு, முகநூல் மெசஞ்சர் மூலம் தொடர்பு கொண்டார். என்னுடைய சிறுகதையை வாசித்ததாகவும், தன்னுடைய எழுத்து முறையை என்னுடைய சிறுகதையில் கண்டதாகவும், அதுதான் அந்தச் சிறுகதையை மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகவும் சொன்னார்.

அந்தக் கதை ‘நிஜ தரிசனம்’ கனடா – டொராண்டோவில் வெளிவந்த ‘தேடல்’ (வகைதுறை வள நிலையம்) சஞ்சிகையில் வந்திருந்தது. விதுரன், ஈழமைந்தன் போன்ற புனைபெயர்களில் பல கவிதைகள், கட்டுரைகள் - தாயகம் , தேடல் போன்ற சஞ்சிகைகளில் எழுதியிருக்கின்றார்.

‘நிஜ தரிசனம்’ சிறுகதை பற்றி நண்பருக்கு எழுதிய எனது குறிப்பு:

சாதனா, சிவரஞ்சன் அவர்களுக்கிடையேயான தொடர்பாடலை நகர்த்திச் செல்லும் விதம், இயல்பான எழுத்து, உணர்வுகள்... அந்த இருவருக்குமானவற்றை எழுத்தாளர் என்ற ஒருவரே மாறி மாறிச் சிந்தித்து எழுதுதல் கடினம். பொதுவாக இப்படிப்பட்ட கதையை எழுதுதல் கடினமானது. அந்த முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள்.

இனிக் கதைக்கு வருகின்றேன்.

முதன் முதலாக அகதி நிலை கோரி வரும் பெண் இவ்வளவும் கதைக்கும் மன நிலையில் இருப்பாளா? அதை உணர்ந்து சிவரஞ்சன் கதைத்திருக்க வேண்டும். சிவரஞ்சன்தான் சும்மா இருந்த பெண்ணின் மீது ஒரு இச்சையைத் தூண்டியுள்ளான்.

அடுத்தது, பிரயாணம் முழுவதும் ஒரு கலாசாரம் கட்டுக்கோப்புடன் வளர்ந்த பெண்ணாக சாதனா தன்னைக் காட்டிவிட்டு, வீட்டிற்குப் போனதன் பின்னர் ஒருநாள் ரெலிபோனில் கதைக்கும்போது எப்படித் திடீர் என மனம் மாறினார்?

இதில் வரும் சாதனா- --இலங்கையில் பிறந்து வளர்ந்தவள்--- பொதுவாக பெண்கள் மெது மெதுவாகத்தான் தமது முடிவை எடுப்பார்கள். சிவரஞ்சன் அதை உணரும் நிலையில் இல்லை.

இருப்பினும் இறுதி முடிவு சரிதான். திருமணம் புரிந்துவிட்டு பீன்னர் பிரிவதைவிட முன்னரே பிரிந்து கொள்வதுதான் நல்லது.

சாதனாவும் கனடாவில் சிலகாலம் வாழ்ந்திருந்து, இந்தக்கதை நகர்த்தப்பட்டிருந்தால் கதை மேலும் சிறப்புப் பெற்றிருக்கும்.

கதையில் பெண்ணைப்பற்றிய தோற்றம் வர்ணனைகளைக் கூட்டியிருக்கலாம். களத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சாதனாவின் அண்ணா பற்றிப் பின்னர் தெரிவிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக எனக்கு இந்தச் சிறுகதை பிடித்துள்ளது. ஒரு புது அனுபவம்.

இன்று 21.02.2018 முகநூலைப் பார்க்கும்போதுதான் தெரிகின்றது. அவர் பலருடன் வன்னி மண் பற்றி – அங்குள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவரது கரிசனை பற்றி பலருடன் உரையாடியிருக்கின்றார். அவர் கனவு ஈடேற பிரார்த்திக்கின்றேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றபோது அவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. நேரில் சந்திக்க முடியவில்லை. குரலைக் கேட்கவில்லை. எல்லாம் இந்த முகநூலிற்குள்ளே புதைந்து போய் விடுகின்றது.

நிஜ தரிசனம் - சிறுகதை
 

 

 

சில கவிதைகள்





No comments:

Post a Comment