Friday 22 December 2017

கார் காலம் - நாவல்


அதிகாரம் 19-  கலாச்சாரம்

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கி விட்டன.

சுப்பர்மாக்கற்றிற்குச் சென்ற புங், நீண்ட நாட்களின் பின்னர் ஆலினையும் அவளது பெற்றோரையும் சந்த்தித்தாள். ஆலின் ஒருதடவை தொழிற்சாலையில் உள்ள எல்லாரையும் பார்க்க விரும்புவதாகவும், தனது வீட்டிற்கு வரும்படியும் சொல்லியிருந்தாள்.

ஆலினை தாயாருடன் காசு எடுப்பதற்காக வங்கிக்கு அனுப்பிவிட்டு, அவளின் தகப்பனார் புங்கிடம் இரகசியம் பேசினார்.

“ஆலினின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் மூன்று மாதங்கள்தான் அவள் உயிருடன் இருப்பாள்என்றார் அவர்.

“ஏன் என்ன நடந்தது?

“அவளுக்கு ஏகப்பட்ட வருத்தங்கள்.

ஆலினை வைத்துப் பராமரிப்பதற்காக அவளின் பெற்றோர் பிலிப்பைன்ஸ் தேசத்திலிருந்து வந்திருந்தார்கள். அவர்களுக்கு அவுஸ்திரேலியா ஒன்றும் புதியதல்ல. ஏற்கனவே ஆலினின் தங்கையுடன் சிலகாலம் முன்பு இருந்தவர்கள் அவர்கள்.

கோடை காலம். வெப்பம் அதிகமாக இருந்தது. அன்று ஆலினின் வீட்டிற்கு செல்வதற்கு நந்தன், புங், குலம், அல்பேற்றோ, ஆச்சிமா போன்ற தொழிற்சாலையில் வேலை செய்யும் சிலர் திட்டமிட்டிருந்தார்கள். இன்னும் எல்லாரும் வந்து சேராததால் வீட்டிற்கு முன்பாக சடைத்து வளர்ந்த Moreton Bay Fig மரநிழலில் ஒதுங்கினார்கள். மரத்திற்கு எதிர்ப்புறத்தில் நிற்பாட்டியிருந்த வெள்ளைக்கார் ஒன்றிற்குள் ஒரு ஊதிப்புடைத்த இளைஞன் உட்கார்ந்தபடி ஏதோ படித்துக் கொண்டிருந்தான்.

ஆலின் கடந்த இரண்டு வருடங்களாக வேலை இல்லாமல் இருந்திருக்கின்றாள். தொழிற்சாலை நிர்வாகம் அவளுக்கு நல்லதொரு நற்சான்றிதழைக் கொடுக்காததும் அதற்கொரு காரணமாக இருந்திருக்கலாம். ஒருவர் வேலையை விட்டு நீங்கும்போது – அவர் செய்த வேலை சார்ந்த நன்னடத்தைப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆலினுக்கு ஏது நன்னடத்தை? அவள் வேலையை தானாக விடவில்லையே! நீக்கப்பட்டாள்!

வேலை இல்லாத நேரத்தில் ஆலின் ஒரு பாலியல் தொழிலாளியாக சென்ற் கில்டாவில் வேலை செய்திருக்கின்றாள். கணவனையும் மகளையும் வாழ வைக்க அவள் தேர்ந்தெடுத்த தொழில், தன்னை விற்பது. அதைத்தவிர அவளால் வேறு எதையுமே செய்துவிட முடியாது. அவளுக்கு வேறு ஒன்றுமே தெரியாது.

“எனக்கு இருந்த ஒரே ஒரு தெரிவு இதுதான். நான் படிக்கவில்லைஎன்பாள் ஆலின்.

இப்பொழுது அவளின் வயது 39. எல்லாரும் வந்து சேர்ந்த பின்னர் வீட்டின் கதவைத் தட்டினார்கள். ஆலின் தன் மகளுடன் கதவைத் திறந்தாள். ஆலினுக்கு இவ்வளவு பெரிய மகளா? வியந்து போனார்கள். ஆலினின் முகவெட்டுடன் நீட்டுத்தலைமயிர் ஊஞ்சலாட சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடித் திரிந்தாள் மாயா. மகளுக்கு வாங்கிச் சென்ற உடுப்பையும் சொக்கிளேற்றையும் கொடுத்தார்கள். ஆலினின் பின்னால் அவளது தாயார் ஒப்பனையற்ற, முகச்சுருக்கங்களுடன் ஒட்டி உலர்ந்த தோற்றத்தில் நின்றார். இருப்பினும் அவளின் முகம், பரம்பரை பரம்பரையாக பேர்த்தி வரைக்கும் கட்த்தப்பட்டு வந்திருப்பதைக் காணலாம்.

சாதாரணமான ஆடையில் ஆலின் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக அவர்களை வரவேற்றாள். உருக்குலைந்து எலும்பும் தடியுமாய் ஒல்லியாய் கண்குழிக்குள் ஆழத்தில் தெரிந்த கண்கள்---ஆளே மாறிப் போன அவள் தன்னுடைய எதிர்காலத்தை தயார் செய்து கொண்டிருக்க வேண்டும்.

வீட்டிற்குள் தளபாடங்கள் அலங்காரப் பொருட்கள் என்று எதுவுமே இல்லை. எல்லோரும் வரவேற்பறையில் கால்களில் தவம் செய்தபடி அவளை மெளனமாக அவதானித்தார்கள். கதவில் சாய்ந்தபடி ஆலின்தான் கதையைத் தொடங்கினாள்.

ஆலினின் கணவன் இறந்து ஆறுமாதங்கள் கடந்துவிட்டன என்ற செய்தியை அங்கு போனபின்னர்தான் அறிந்து கொண்டார்கள்.

ஆலினின் தாயார் வளவளவென்று கதைத்தபடி சீமெந்து நிலத்தில் சுவரோடு ஒட்டியபடி குந்தி இருந்தாள். தகப்பனார் ஒரு மூலையில் நின்ற நிலையில் பேப்பர் படித்தபடி இருந்தார். இவர்கள் அங்கு இருக்கும்போது மாயா கடைக்குப் போய் வருவதாகச் சொல்லிச் சென்றாள். அவள் இப்பொழுது பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிப்பதாக பெருமையாகச் சொன்னாள் ஆலின். பல்கலைக்கழகத்திற்கு அண்மையாக றூம் ஒன்று எடுத்து அங்கிருந்து படித்து வருகின்றாள். பகுதி நேரம் வேலையும் செய்கின்றாள்.

மாயாவிடம் தாராளமாய் பணம் புளங்குவது ஆலினின் வயிற்றில் புளிகரைத்து வார்த்தது. அவள் ஆடி வந்த அந்த வாழ்க்கை புனர்ஜன்மம் எடுத்து மனத்திரையில் கொந்தளித்து வெந்துவெடித்துப் புரண்டு கொண்டிருந்தது.

கடைக்குப் போன மாயாவை நீண்ட நேரமாகக் காணாததால், வீட்டு வாசலில் நின்று தெருவைப் பார்ப்பதும் பின்னர் உள்ளே வந்து இவர்களுடன் கதைப்பதுமாக இருந்தாள் ஆலின்.

வீட்டு வாசலில் மாயாவின் கார் வந்து நின்றபோது, அதுவரையும் கலகலப்பாகப் கதைத்துக் கொண்டிருந்த ஆலினின் முகம் இருளடைந்தது. பேயைக் கண்டுவிட்டவள் போல அஞ்சி நடுங்கினாள்.

மாயா சாப்பாட்டுப் பார்சலை எடுத்துக் கொண்டு பின்புறமாகக் குசினிக்குள் சென்றாள். மாயாவைத் துரத்திக் கொண்டு ஆலின் பின்னாலே ஓடினாள்.

காருக்குள் இருக்கும் மனிதன் யார்?ஆலினின் குரலில் ஆவேசம் தெறித்தது.

“என்னுடன் மருத்துவம் படிப்பவன்.

“பொய்.

மாயாவின் கன்னத்தில் பளாரென அறைந்தாள்.

ஹோலிற்குள் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து முழுசிக் கொண்டார்கள். ஆலினின் தந்தையார் பேப்பரை சரித்துப் பிடித்துக் கொண்டு தாயாருக்குக் கண் காட்டினார். அவர் எழுந்து உள்ளே போனார். குசினிக்குள், கையில் பெல்ற்றை இரண்டாக மடித்துப் பிடித்தபடி பத்திரகாளியாக நின்றாள் ஆலின்.

“நான் பட்ட கஷ்டம் நீ படக்கூடாது என்றுதானே உன்னைப் பொத்திப் பொத்தி வளர்த்தேன். என்னுடைய மூச்சுக் காற்றுக்கூட உன்மேனியில் விழக்கூடாது  என்றுதானே என் தங்கை உன்னை என்னுடன் சேர விடாது தடுத்தாள்மாயாவும் தன்னைப் போல சாக்கடையில் விழுந்து விட்டாளோ எனப் பயந்தாள் ஆலின்.

அடி அகோரம் தாங்காமல் எங்கு ஓடுவது என்று தெரியாமல் ஹோலிற்குள் வந்தாள் மாயா.

என்னைப் போல நீயும் சீரழிஞ்சு சித்திரவதைபடப் போறியா?

எல்லா அடிகளையும் தாங்கிக் கொண்டு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் நின்றாள் மாயா. இவ்வளவு பேருக்கும் முன்னால் தான் அவமானப்பட்டுவிட்டதாக மாயா கவலை கொண்டாள்.  

ஒருவரும் எதிர்பார்க்காத வேளையில் மாயாவின் தலைமயிரைப் பிடித்து ஒட்ட வெட்டி நறுக்கினாள் ஆலின். கெட்ட வார்த்தைகளினால் கத்தினாள்.

இவளுக்கென்ன பேய் பிடித்துவிட்டதா அல்லது வருத்தத்தின் உபாதையினால் தன்னை மறந்து படுபாதகம் புரிந்து கத்துகின்றாளா? நந்தனும் குலமும் தங்களுக்குள் கதைத்துக் கொண்டார்கள். நிலைமை எல்லை மிறிப் போவதாக உணர்ந்தார்கள்.

“ஆண் வர்க்கத்தை நம்பாதே!தொடர்ந்தும் பெல்ற்றால் விளாசினாள் ஆலின்.

இனியும் தாமதித்தால் விபரீதமாகிவிடும் என நினைத்து ஆலினுக்கும் மாயாவிற்கும் குறுக்கே குலமும் நந்தனும் பாய்ந்தார்கள். குலத்திற்கும் ஒரு அடி பலமாக விழுந்தது.

அடுத்த தடவை பெல்ற்றை ஓங்கும்போதுதான் தான் சொன்னது தவறு என்று புரிந்து கொண்டாள் ஆலின். குலமும் நந்தனும் தன்னுடன் வேலை செய்யும்போது ஒருபோதும் கெட்ட எண்ணத்துடன் பழகவில்லையே! அவர்கள் கலாசாரம் அப்படி அவர்களைச் செய்ய விடவில்லையே! ஆலின் தனது தவறுகளை உணர்ந்து கொண்டாள். கதறி அழுதபடி செற்றிக்குள் விழுந்தாள்.

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இல்லைத்தானே! கலாச்சாரம் பிரதான காரணந்தான். ஆனால் அது மட்டும் தனித்துக் காரணமல்ல. சிலர் இயல்பாகவே கெட்டுப் போகிறார்கள். சிலர் கெட்டவர்களுடன் சகவாசம் வைத்தாலும் கெடுகிறார்கள் இல்லை. வாழ்க்கையில் விளங்கமுடியாத புதிர். அதை எல்லாம் ஆராயும் மன்நிலையில் ஆலின் இல்லை.

மாயாவிற்கு அம்மா என்றால் உயிர். எல்லாம் தனக்காகத்தானே அம்மா செய்கின்றாள். அப்பாவை என்றுமே அவள் நினைத்துப் பார்த்தது கிடையாது. அப்பாவின் இறப்பின்போதும், ஆலினின் தங்கை குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டு செத்தவீட்டிற்குப் போகாமல் நின்றுகொண்டாள். சமீப காலமாகத்தான் அம்மாவுடன் சேர்ந்து கொண்டாள்.

மாயாவிற்கு புத்தி சொல்லுவது இலகுவாகவிருந்தது. உலகின் எந்த மூலை முடுக்கென்றாலும் மருத்துவதிற்கு எடுபட்டுப் படிப்பது மிகவும் கடினமானது.  அவள் மருத்துவம் படிப்பவள்.

ஆலினைச் சமாதானம் செய்வதுதான் கடினமாக இருந்தது. அவளால் மாயாவின் செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாள் முழுவதும் அழுதபடியே இருந்தாள்.

இருவரையும் சமாதானம் செய்துவிட்டுப் புறப்படும்போது இருட்டிவிட்டது. அப்பொழுது அந்தக் காரிற்குள் இருந்த இளைஞன் இவர்களின் வீட்டைப் பார்த்தபடி இருந்தான்.
●●

கிறிஸ்மஸ் தினத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் ஆலின் இறந்து போனாள். அவள் இறந்ததற்கான காரணத்தை ஒருவரும் சொல்லவில்லை. சிலர் கான்சர் என்றார்கள். சிலர் எயிட்ஸ் என்றார்கள். அதுவாக இருப்பினும் முப்பத்தொன்பது வயதிற்குள் அவள் இறந்துவிட்டாள். அவளுடன் கூட வேலை செய்தவர்களும், மாயாவுடன் படிப்பவர்களும் உறவினர்களும் என பெரும் திரளானவர்கள் மயானத்தில் நின்றார்கள்.


ஆலினின் உடலைப் புதைத்தார்கள். சுற்றிச்சூழ எல்லாரும் மெளனமாகி நின்றார்கள். நந்தனிற்கு மிகவும் நெருக்கமாக நின்றாள் புங். கை கோர்த்துக் கொள்ளாத குறை. நந்தனிற்கு அது பிடிக்கவில்லை. குறூப் லீடரின் பெறுமதியை இனிக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்தான். அந்த இடத்திலிருந்து நழுவிப் போய் ஒகாராவின் பக்கத்தில் நின்றுகொண்டான் அவன்.

செத்தவீட்டை மாயாவும் அவளின் நண்பனும் வழிநடத்திக் கொண்டிருந்தாள். அம்மாவின் செத்தவீட்டைத் தானே செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள். ஆலினின் பெற்றோருக்கும் தங்கைக்கும் கூட அங்கு இடமில்லை. அவளுடன் கூடப் படிப்பவர்கள் ஒத்தாசையாக இருந்தார்கள்.
 
மதிய உணவாக போக் ரோல்’, தண்ணீர்ப் போத்தல்கள் குடுத்தார்கள். மயானத்தில் முதன்முறையாக அப்பிடியொரு அனுபவம் சிலருக்குக் கிட்டியது. சாப்பிட முடியவில்லை. பொம் போய் மாத்திரம் மூன்று போக் ரோல் சாப்பிட்டான். தண்ணீர்ப் போத்தலும் வாங்கி வைத்துக் கொண்டான்.

அன்று மாலை வேலையிடத்தில் கிறிஸ்மஸ் பார்ட்டி நடந்தது. ஒருநாளின் இருவேறு பொழுதுகளில் இரண்டு வேறுபட்ட மன நிலையில் எல்லாரும் இருந்தார்கள்.

காலையில் செத்தவீடு. மாலையில் கிறிஸ்மஸ் பண்டிகை. இதுதான் வாழ்க்கை. ஆலினின் வாழ்க்கையை எல்லோரும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் தொழிற்சாலை மனேஜர்.

ஆலினின் வாழ்க்கையை ஜோசித்துப் பார்த்தான் நந்தன். எல்லாமே ஒரு கனவு போல தோன்றியது. வாழ்க்கை கனவுகளாலும் நிஜங்களிலுமான கலவை போலத் தோன்றியது.












**** முற்றும் ****

No comments:

Post a Comment