எண்ணம். வசந்தம். மாற்றம்.

பத்தாவது வருடத்தில் நிறம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடங்களும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

எழுதுவது எனக்குப் பிடித்த ஒரு செயற்பாடு என்பதை நீங்கள் நிறத்தைத் தரிசிக்கும் போதெல்லாம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். நான் வாசிக்க விரும்புகின்ற விடயங்களை இங்கு எழுதுகின்றேன். எழுதிச் சேமிக்கின்றேன். அதன் நீட்சியாகவே நிறத்தின் வாசக வட்டம் தோற்றம் கண்டதெனலாம்.

ஒரு விடயத்தைத் தொடங்குவதில்தான் அதன் பரிமாணங்களைக் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிட்டுமென்பதை நிறத்தின் பல்வேறு பகுதிகளில் சொல்லியிருக்கிறேன்.

niram-10

பாடசாலையில் தரம் நான்கில் கல்வி கற்ற காலமது. வீரகேசரி பத்திரிகையின் சிறுவர் பகுதியிற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் கவிதையொன்றையும் வைத்து அனுப்பியிருந்தேன். “பாடசாலை” என்ற தலைப்பில் நான் கவிதை என எழுதிய அந்த வரிகளை பத்திரிகையில் அச்சாகக் காண வேண்டுமென்ற ஆவல் அப்போது எனக்கு அலாதியாயிருந்தது.

நாளாந்தம் தினசரிப் பத்திரிகைகளை அப்பா வாங்கிக் கொண்டுவருவது வழக்கம். கடிதத்தை தபாலில் அனுப்பிய நாளிலிருந்து, சிறுவர் பகுதி வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளின் பத்திரிகையை அப்பா கொண்டு வருகின்ற போதே ஆவலுடன் வாங்கிப் படித்து விடத் துடிப்பேன்.

நாட்கள் நகர்ந்தன. ஒரு வருடம் பறந்தது. எனது ஆக்கம் பத்திரிகையில் வரவில்லை. ஆனாலும், தொடர்ந்து அந்தப் பகுதியில் என் பார்வையை வைத்துக் காத்திருந்தேன். ஆனாலும், எனது ஆக்கம் வரவேயில்லை. மௌனம். கவலை.

ஒரு நாள், ஏதோவொரு பொருளை வாங்கச் சந்தைக்குச் செல்கின்ற வேளையில், என் பாடசாலையில் ஏழாம் தரத்தில் கற்கின்ற மாணவர் ஒருவர் என்னைக் கண்டு, “இன்டைய வீரகேசரியில உங்கட பெயர் வந்திருக்கு. பாக்கலியா?” என்றார். கேட்ட மாத்திரத்திலேயே சந்தையிலிருந்து வீடு நோக்கி விரைந்தேன். பத்திரிகையை எடுத்துப் பார்த்தேன்.

அட.. ஆச்சரியம்.. தபாலில் அனுப்பி இரண்டு வருடங்களின் பின் எனது ஆக்கம், வீரகேசரி பத்திரிகையின் சிறுவர் பகுதியில் பிரசுரமாயிருந்தது. அதனைக் கண்ட போது, என் மனத்தில் மகிழ்ச்சி, குதூகலம் என அனைத்து இன்பங்களும் பிரவாகமெடுத்தன. அப்போதிருந்த மனநிலையை விபரிக்க முடியாது, அனுபவிக்க வேண்டும்.

அன்று அப்படித் தொடங்கிய எனது எழுத்தின் பயணம், வெவ்வேறு பரிமாணங்களை வெவ்வேறு காலப்பகுதியில் எடுத்துக் கொண்டது. ஆங்கிலப் பத்திரிகையின் சிறுவர் பகுதியில் கவிதை எழுதும் மாணவராக, பாடசாலையின் மாணவர் சஞ்சிகையின் ஆசிரியராக, தேசிய தகவல் தொழில்நுட்ப சஞ்சிகையின் இணை ஆசிரியராக, தேசிய ஆங்கில நாளிதழின் பத்தி எழுத்தாளராக, தேசிய சிறுவர் சஞ்சிகையின் கட்டுரையாசிரியராக, “வெளிச்சம் வேண்டாம்” நூலின் ஆசிரியராக என நான் கொண்ட எழுத்தின் நிலை சார்ந்த பாத்திரங்கள் ஏராளம்.

அத்தோடே எனது இணைய நிலையிலான எழுத்துக்களும் தொடர்ந்து கொண்டு வந்தன. நிறத்தில் நான் எண்ணங்களை எழுதிச் சேமிக்கிறேன். அணுவிலிருந்து அகிலம் வரை அனைத்தும் பற்றிய புரிதல்களை புதுநுட்பமாய் தமிழ் கூறும் நல்லுலகுக்குச் சொல்லிப் பூரிப்படைகிறேன்.

நான் எழுத்துக்களின் காதலன். ஒவ்வொரு நாளும் நான் கைகளால், பல மொழிகளின் எழுத்துக்களையும் எழுதி அழகு பார்க்கிறேன். புதிய வகையில் எழுத்துக்களுக்கு வடிவம் சேர்க்கலாமா என ஆய்ந்து பார்க்கிறேன். எழுத்துக்கள், எப்படி தமது வடிவங்களைப் பெற்றுக் கொள்கின்றன என தேடிப் பார்க்கிறேன். எழுத்துக்களை வரைகிறேன். அவற்றின் கட்டமைப்புக்களை கவனமாக அவதானிக்கிறேன். எழுத்துக்கள் கொண்ட எழுத்துருக்களை நிரலாக்கம் செய்து உருவாக்கிறேன். எழுத்துக்களை நான் வாசிக்கிறேன். நீங்கள் நான் எழுத்துக்களைச் சுவாசிப்பதாக எடுத்துக்கொண்டாலும், எனக்கு இஷ்டமே. எனது எழுத்துக்களுடனான பயணத்தில் ஒரு பகுதியை இங்கு காணலாம். ஒவ்வொரு நாளும் நான் அங்கு பயணிப்பேன்.

நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியது போல், எழுதுவதை ஒரு தியானமாகவே நான் காண்கின்றேன். தியானிப்பதால், நமது மனவானில் தெளிவு பிறக்கும் என்பது உலகறிந்த, யாருமே மறுக்காத உண்மை. ஆக, அடிக்கடி தியானித்திருந்தல் அலாதியான இன்பம் தருமென்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

ஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக, நிறத்தில் எண்ணங்களும் அந்த எண்ணங்களால் வசந்தமாக உருவெடுக்கின்ற மாற்றங்கள் பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறேன். எனது எழுத்துக்களை நேசிக்கின்ற உங்களிடமிருந்து நான் பெறுகின்ற மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள், கீச்சுக்கள், தகவல்கள், செய்திகள் என்பவற்றை மனதோடு நேசிக்கிறேன். முடிந்தளவில் எல்லா மின்னஞ்சல்களுக்கும் நான் பதில் அனுப்பியுள்ளேன் என்று நம்புகிறேன்.

பத்தாவது வருடத்தில் நிறம் காலடியெடுத்து வைக்கின்ற நிலையில், எனது ஒன்பது வருட கால நிறத்தில் சொல்லிய எழுத்துக்களால் நான் கண்டு கொண்ட சில விடயங்களை உங்களோடு பகிரலாமென எண்ணுகிறேன்.

வலைப்பதிவு, வலைப்பூ, ப்ளாக் என பல பெயர்கள் ஒரு காலத்தில் யாவரும் பிரபலமாகப் பேசிய ஒரு விடயமாயிருந்தது. யாவரும் பேசுகின்ற விடயத்தை எல்லோரும் செய்வதற்கு முற்படுவதென்பது தொன்று தொட்டு வருகின்ற ஒரு பழக்கமாகும். ஆனால், நான் நிறத்தை அந்தப் பிரிவிற்கு அடக்க விரும்பவில்லை. நான் வாசிக்க விரும்புவதை எழுதுவதால், நிறம் எப்போது, தனக்கு நிறமொன்றைப் பூசிக் கொள்கிறது.

“இப்போது, வலைப்பூ இல்லை, சோசியல் மீடியாதான் எல்லாம்” என்று நீங்கள் பலரும் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், அந்தக் கூற்றில் எந்த உண்மையும் கிடையாது. எல்லாமே தோற்ற மயக்கங்கள். வலைப்பூக்கள் சார்ந்த எழுத்துக்களுக்கு எப்போதுமே வாசகர்கள் இருக்கிறார்கள். இந்த அடிப்படையான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், உங்கள் எழுத்துக்களுக்கு உயிர் பிறக்கும்.

நிறத்தை வாசிக்கின்ற வாசகர்களின் வியாபிப்பும் அவர்கள் கொண்டுள்ள வாழ்வின் மீதான பார்வைகளையும் அவர்களின் மின்னஞ்சல் வழியாக அவர்கள் எழுதியனுப்புகின்ற போது, நான் மகிழ்ச்சி கொள்வேன். தங்கள் நேரத்தைத் தந்து நிறத்தை வாசித்து, பின்னர் இன்னும் நேரமெடுத்து அது பற்றி எழுத எத்தனிக்கின்ற ஏற்பாட்டை நான் வியப்போடே பார்க்கிறேன்.

நிறத்தில் நான் விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்ற போது, நான் என் தோழனோடு பேசுவது போன்ற தொனியிலேயே எழுதுகிறேன். அதுவே எழுத்திற்கும் எனது எழுத்தின் குரலுக்கும் அசலான வடிவத்தைக் கொடுக்குமென நான் திடமாக நம்புகிறேன்.

நாம் நாமாக இருத்தலே இங்குள்ள மிகக் கடினமான செயல். எழுத்துக்கள் கொண்டு, எமது அசலான குரலுக்கு வானம் கொடுப்பது மிக முக்கிய பண்பாகவே நான் காண்கிறேன்.

தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் செய்வதினால் தோன்றுகின்ற நன்மைகள் பற்றி நான் நிறத்தில் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு மாதமும் எழுதுகின்ற பழக்கத்தை கொண்டு வருகின்ற நிலையில், எமது எண்ணங்களை லாவகமாகவும் இயல்பாகவும் சொல்லக்கூடிய மொழிநடையொன்று எம்மைத் தொற்றிக் கொள்ளும். அதனைப் பற்றிக் கொண்டு, எமது எண்ணங்களை, உலகோடு அசலான குரலில் எடுத்தியம்பலாம்.

வலைப்பதிவு இடுகின்ற நிலையை கருத்துச் சொல்கின்ற ஏற்பாடாக நான் கருதவில்லை. டெமோகிரடிஸ் சொன்னது போலே, “இங்கு எல்லாமே அணுக்களும் வெற்றிடங்களும்தான். ஏனையவை யாவுமே கருத்துக்கள்”. ஆனால், நான் வலைப்பதிவு இடுகின்ற நிலையை, என்னைச் சூழவுள்ள உலகின் நிலைகளை நான் காண்கின்ற வகையில் உள்வாங்கி, எனது கோணத்தில் எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்ற ஏற்பாடாகவே காண்கின்றேன். நான் நிறத்தில் எழுதிப் பகிர்கின்ற விடயங்கள், நான் வாழ்கின்ற என்னை சூழக்காணப்படுகின்ற உலகின் பாலான என பார்வை. இது எனது கருத்தல்ல என்பதைக் கவனிக்க.

நான் காண்கின்ற உலகை என்னால் மட்டுமே காணமுடியும் என்பது போல் நீங்கள் காண்கின்ற உலகை உங்களால் மட்டுமே காணமுடியும் என்பது உண்மையாகும். ஆனால், நான் காண்கின்ற உலகம் பற்றிய என புரிதல்களை உலகோடு பகிர்கின்ற நிலையில், எனது பார்வையும் உலகின் பார்வையும் ஒன்றோடொன்று கலந்து புதிய பார்வையாகக்கூடத் தோற்றம் காணலாம்.

நிறம் என்பது எப்போதும் தேடிக் கொண்டிருக்கும் ஆர்வத்தின் நீட்சி. இந்தத் தேடல், தொலைந்ததை தேடுகின்ற தேடலா? அல்லது தொலைந்து போகாமல் இருக்கத் தேடுகின்ற தேடலா? என்பதை காலம் சொல்லும்.

தொடர்ந்தும் நிறத்தோடு இணைந்திருங்கள். நன்றி.

  • உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்