பிறகொருபோதும் இல்லாத மகிழ்ச்சி

(உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது)

கொழும்பு 1973
ஞாயிறு காலை.
இலங்கை வானொலியானது அவளுக்குப் பிடித்தமான “சில நாளில் எனது இளவரசன் வருவான்” என்பதனை ஒலிபரப்புகின்றது. அது 1937ஆம் ஆண்டு டிஸ்னி கிளசிக் (Disney classic) இன் வெண்பனியில் இருந்து எடுக்கப்பட்டது. அவளுடைய ஜன்னலுக்கு அருகில் அமர்வதற்கென எழும்புகின்றாள். அத்துடன் தனக்காக அவன் எப்போது வருவான் என்று, அந்த நாள் குறித்துக் கனவு காண்கின்றாள்.

SONY DSC

1976
இன்றுதான் அந்த நாள். அவளுடைய வசீகரமான இளவரசன் அவளைத் தன்வசப்படுத்துவதற்கு வந்துவிட்டான். காலை வெளிச்சத்தில் அவள் பிரகாசமாகக் காணப்படுகின்றாள்.

SONY DSC

1978
அவனுடைய வசீகரப் புன்னகை மறைவது போன்று திருமண ஆசையானது மறைகின்றது. திருமணம் நிகழ்ந்து ஐந்து வாரங்கள்தான் ஆகின்றன. அவளுடைய பார்வையில் இருந்து அந்தக் கனவு மறைகின்றது.

SONY DSC

1979
அவன் அவளை அடிக்கின்றான்.
மிகக் கடுமையாக.
அவனுக்குப் பிடிக்கும் வண்ணம் கோழிக்கறி சுவையாக இருக்கவில்லை.
மறுநாள் காலை அலுவலகத்தில் அடிகாயங்கள் தெரியுமோ என்று அவள் யோசிக்கின்றாள். அவர்களும் அவதானித்தார்கள். அவளை விட்டும் விலகினர்.

SONY DSC

1980
அவளுடைய கனவு கலைகின்றது. சிவந்த காயங்கள் கருமையாகின்றன.
உனக்குமுன் ஆயிரமாயிரம் பெண்கள் இதனை அனுபவித்திருக்கின்றனர் – அவளது அம்மா சொல்கின்றாள்.
ஆதலால், இப்போது அவள் பலவீனமானவளா…?
ஆனால் பின்னர், ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது.
குறுகிய காலப்பகுதியினுள்ளே, அவன் மீண்டும் அவளது இளவரசனாகின்றான்.

SONY DSC

1984
அவளுடைய அம்மாவின் அழுகுரல் கேட்டு அந்தக் குழந்தை எழுகின்றது.
அவள் எந்தளவுக்கு சத்தம் போடுகின்றாளோ, அந்தளவுக்கு அவன் தாக்குகின்றான்.
ஆனால் அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.
அது அவளை மிகவும் காயப்படுத்துகின்றது. அவன் தன்னை விட்டுப் போய்விடுவான் என அவள் சதா அச்சமடைகின்றாள்.
அந்தச் சின்னஞ்சிறிய பெண்குழந்தை தனது கட்டிலுக்குக் கீழ் ஒளிந்துகொள்கிறது. அந்தப் பழக்கம் அவள் பெரியவளான பின்பும் தொடரும்.

SONY DSC

1989
அங்கே கனவு இல்லை. கனவு இருந்ததும் இல்லை.
அவள் தப்பித்துக்கொள்வதற்காக யோசிக்கின்றாள். தொட்டிலில் குழந்தை, அவர்களால் எங்குதான் செல்ல முடியும்?
அந்தக் காலம் வருவதற்குமுன், அவ்வாறு செய்வதற்கான காலமாக இருந்திருக்கலாம்.
சில நேரங்களில், ஏற்றுக்கொள்தல் என்பது ஒரு கூடாத வார்த்தையாக ஆகிவிடுகின்றது.

SONY DSC

1990
இன்னுமொரு கொடுமையில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக, அவள் தனது சிந்தனைகளைச் சரி செய்கின்றாள். அத்துடன் வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டுமோ, அவ்வாறு வாழ்வதற்குத் தயாராகின்றாள்.
ஒரு சில தசாப்தங்களின் பின், – ஆனாலும் இறுதியில் அன்பு என்றால் என்னவென்று தெரியவந்ததே… என அவள் நினைக்கின்றாள்.

SONY DSC

….. ஒரு சிறையை நீங்கள் விட்டுப்போக முடியாது. அதுவும் விட்டுப்போக விடாது.

SONY DSC

2015
அவளை அடிக்க முடியாத வண்ணம் அவன் மிகவும் முதுமை அடைந்துவிட்டான்.
தழும்புகள் குணமாவதற்குக் காலம் தேவைப்பட்டது.
ஆனால், அவளுடைய குழந்தை அவளை வந்து பார்வையிடுகின்றாள், தழும்புகளுடன் இருப்பதைப் பார்த்துப் பார்த்து அவளுக்குப் பழக்கமாகிவிட்டது.
அவள் அவற்றைப் பார்க்கின்றாள்.
ஆனால் அவளோ வேறெங்கோ பார்க்கின்றாள்.

SONY DSC


புகைப்படப் பிடிப்பாளரின் கூற்று

வீட்டு வன்முறை (Domestic Violence) அல்லது நெருங்கிய துணையால் ஏற்படுத்தப்படும் வன்முறை (Intimate Partner Violence) என்பது பரவலாகக் காணப்படுகின்ற ஒரு பொதுவான பிரச்சினையாகும்.

உலகெங்கினும் பெண்கள் தமது வீடுகளில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர், அடிமைப்படுத்தப்படுகின்றனர், அடி வாங்குகின்றனர், மிகக்குறைந்தளவு சீதனம் கொடுத்தமைக்காக வதைபடுகின்றனர் – மற்றும், சில நாட்களில் அவர்களது துணைவர்மார் குடித்துவிட்டிருப்பதாலோ அல்லது கூடாத நாளொன்றை எதிர்கொண்டமையாலோ இவர்களை அடிக்கின்றனர். சில நாடுகளில் இவ்வாறான சூழ்நிலைகளைக் கையாள்வதற்குப் போதியளவிலான பல திட்டங்கள் காணப்படுகின்றன, பின்னொரு நாளில் நீதியின் முன் நிறுத்தப்படுகின்ற வன்முறை இழைப்பவர்களிடமிருந்து, பெண்களையும் சிறுவர்களையும் தூரமாக்கி வைக்கும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாப்பு இல்லங்கள் வழங்கப்படுகின்றன.

வீட்டுக்கு அருகில், சூழ்நிலை மாறுபடலாம்.

2005ஆம் ஆண்டிலிருந்து வீட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம் அமுலில் இருந்து வருகின்ற போதிலும், உலகின் தேவைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அது வெறுமனே ஒரு சடங்குக்காக அமுலில் இருப்பதாகவே தோன்றுகின்றது. வன்முறைச் சம்பவங்கள் முறைப்பாடு செய்யப்படுகின்ற போது, எவ்வகையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்று அச்சட்டம் தெளிவாகக் குறிப்பிடவில்லை. உரிய அதிகாரிகளிடம் இவ்வாறான பிரச்சனைகளை முறைப்பாடு செய்வதற்கு மருத்துவ அலுவலர்களை அது கட்டாயப்படுத்தவில்லை. அத்துடன் குறித்த பெண்களும் சிறுவர்களும் பாதுகாப்புமிகு பராமரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்பதை உறுதிப்படுத்துவதற்கு, உரிய அதிகாரிகளைப் பிணிக்கும் எந்தவொரு நடபடிமுறையும் இச்சட்டத்தில் இல்லை. மாறாக “நீங்கள் வீட்டுக்குச் சென்று உங்களுடைய பணிகளை மேற்கொள்ளுங்கள்” என அவர்களை ஊக்குவிக்கும் ஏற்பாடுகளே காணப்படுகின்றன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட அவர்கள் மீண்டும் வன்முறை நிகழும் வீட்டுக்கே செல்கின்றனர். அத்துடன் அதே நிலையில்தான் அவர்கள் தொடர்ந்திருக்கின்றனர். அதனையொத்த ஒரு கதையைத்தான் இந்தப் புகைப்படங்களின் மூலம் நான் உங்களுக்குச் சொல்வதற்கு எத்தனித்துள்ளேன். இந்தப் பிரச்சினை ஒரு வட்டம் போன்றது. ஏனெனில் துஷ்பிரயோகம் நடக்கின்ற வீடுகளில் வளர்கின்ற குழந்தைகளுக்கு இவ்வாறான நடத்தைகள் ஊடுகடத்தப்படுகின்றன. அத்தகைய வீடுகளில் உள்ள ஆண்பிள்ளைகள் பெண்களை இவ்விதம் கொடுமைப்படுத்துகின்ற உரிமை தங்களுக்கு இருப்பதாகவும், அங்குள்ள பெண்பிள்ளைகள் இத்தகைய கொடுமைகளைத் நாம் தாங்கித்தான் ஆகவேண்டுமென்று வலிந்து ஏற்றுக்கொள்வதற்கும் இயைபாக்கம் அடைகின்றனர். மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி முறைப்பாடு செய்யப்படாமையால், இது இலங்கையில் எந்தளவுக்கு உள்ளதென்பதை எம்மால் கூறமுடியாதுள்ளது.

எங்களுடைய கலாசாரம் வன்முறை இழைத்தவரைப் போற்றி, பாதிக்கப்பட்டவர் மீது குற்றம் சுமத்தும் கலாசாரமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணை அடிமையானவள் என சமூகம் சாடும் போது, தான் எப்படித் துன்புறுத்தப்பட்டேன் என அவள் எவ்வாறு கூறுவாள்? அவளது குடும்பத்துக்கு அவமானம் வந்துவிடுமெனக் கூறி அவளுடைய குடும்பம் அவளைக் கட்டாயப்படுத்துகின்றது. அத்துடன் நம்மில் சிலர் அதனைப் பிறிதொரு கோணத்திலும் பார்க்கின்றோம். சில சமயங்களில் ஒரு பெண் முறைப்பாடு செய்வதற்கென துணிந்து முன்வரும் போது, அவள் அடுத்து என்ன செய்ய வேண்டுமென அவளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்குக்கூட ஒருவரும் இல்லை. அவள் எங்கே போவாள்? வீடில்லாத ஒரு பெண்ணுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும்?

நம்மில் ஒவ்வொருவரும் துஷ்பிரயோகப் பின்னணியில் இருந்து வந்திருக்கலாம் அல்லது அயலவர்கள் இதனைப் பற்றி வாக்குவாதம் செய்யும்போது கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது வன்முறை நிகழும் வீட்டில் வதியும் ஒரு நண்பரைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்கலாம். பெரும்பாலும் எப்படியாவது இது ஒவ்வொரு தடவையும் இடம்பெறுகின்றது. அதனை நாம் புறத்தொதுக்கி இருக்கலாம் அல்லது நெருங்கிய துணையால் ஏற்படுத்தப்படும் வன்முறை (IPV) என்பது ஒரு சாதாரணமான நடத்தைதான் என நாம் நினைத்திருக்கலாம்.

இந்த வன்முறையை நிறுத்துவதற்கு எங்களில் எத்தனை பேர் ஏதாவது செய்திருக்கின்றோம்?
எங்களில் எத்தனை பேர் இதனைப் புறத்தொதுக்கி இருக்கின்றோம்? இது நடக்கவில்லை என்பதைப் போன்று நடித்திருக்கின்றோம்?

ஏன் நாம் நமது பெண்பிள்ளைகளைக் கனவுகளை நம்பி வளர்வதற்கு விடுகின்றோம்?
நாங்கள் பெண்களைவிட மேலானவர்கள் என்ற உணர்வுடன் நமது ஆண்பிள்ளைகளை ஏன் வளர விடுகின்றோம்?

குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்வதற்கு நமது அரசுக்கு நாம் ஏன் அழுத்தம் கொடுப்பதில்லை?
இது எங்களுடைய பொறுப்பில்லை என நாம் இதனைத் தட்டிக்கழித்து நடக்கலாமா?

………………………………………………………………
நடாலி சொய்சா
கொழும்பு, நவம்பர் 2015
Featuring: கிறிஸ்டினா பிரிட்டோ

Leave a comment