இரு கேள்விகள்; இரு பதில்கள்

image

‘கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்தின் நண்பர்கள்’ என்ற பக்கத்தில் ஒரு பதிவைப் பார்த்தேன்: ஒரு கேள்வி; இரு பதில் என்ற தலைப்பில் ஆங்கில ஊடகங்களில் கேட்கப்பட்ட ஒரே கேள்விக்கு கஜேந்திரக்குமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் அளித்த முரணான பதில்கள் தொடர்பில் தான் இப் பதிவு (பார்க்க:https://www.facebook.com/guruparank/posts/10155712637880251…)
இப்பதிவின் அடிப்படை நோக்கம், “ஆங்கில ஊடகங்களில் எவ்வாறு இவர்கள் தொழிற்படுகிறர்கள்” என்பதனைக் கொண்டு கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியவாதி; சுமந்திரன் தமிழ்த் தேசத் துரோகி என்ற படத்தைக் கொடுப்பதே

ஆனால் இப்பதிவில் தெரிந்தே (அல்லது, தமிழ்/ஆங்கிலம் வாசிக்கத் தெரியாதிருக்க வேண்டும்) பல திரிபுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

எனது பதில் வாதம்:

(1) இருவரிடமும் 'ஒரே’ கேள்வி கேட்கப்பட்டதாகச் சொல்கின்றனர். ஆனால் கேட்கப்பட்ட கேள்விகளில்(கேள்வியின் இரண்டாம் பகுதியில்) மாறுபாடுகள் இருக்கின்றது. சுமந்திரனிடம் 'விடுதலைப் புலிகளின் கொள்கைகளுடன் உடன்படுகின்றீர்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. அதற்கான உங்களது பதில் என்ன?’ என்றும் கஜனிடம் 'நீங்கள் தமிழ்த்(எனது சேர்க்கை: தேசிய) தீவிரவாதி எனவும் உங்கள் அரசியலில் விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய மறுக்கின்றீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது, இதற்கான உங்கள் பதில் என்ன?’ என்றும் வினவப்பட்டது. இது பாரியதோர் வித்தியாசம். இது எப்படி நண்பர்களிற்கு விளங்காமற்போனது என்று விளங்கவில்லை.

(2) சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வியில் முக்கியமான பகுதியினை நண்பர்கள் நீக்கிவிட்டனர். அக் கேள்வியின் பின்புலம் பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை.

சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு பாராளுமன்றில் ததேகூட்டமைப்பு கோரியிருந்த நிலையிலேயே சுமந்திரன் குறித்த செவ்வியினை வழங்கியிருந்தார். அவரிடம் கேட்கப்பட்ட முழுக் கேள்வி இதுதான்:

'கூட்டமைப்பு புலிகளை ஆதரிக்கின்றனர் என்றும், புலிகளின் கொள்கைகளை ஆதரிக்கின்றனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் இருப்பதனால் கூட்டமைப்பிடம் எதிர்க்கட்சித் தலைமைப்பதவி செல்வது குறித்து சில பயங்கள் இருக்கின்றது; இதற்கான உங்கள் பதில்?’

இதற்கான சுமந்திரனின் பதிலை, அதன் சாரத்தை, சரியாக மொழி பெயர்த்தால்:

'விடுதலைப் புலிகளுக்கோ, விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கோ நாம் விசுவாசமுள்ளவர்கள் அல்ல. மாறாக, நாம் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிவருகின்றோம். (தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்றோம் என்பதற்காக) பயங்கரவாதத்தினை ஆதரிப்பவர்களோ, ஊக்குவிப்பவர்களோ அல்ல; இதை யாவரும் அறிவர்’

கஜேந்திரக்குமாரின் நண்பர்கள் தமது பதிவில் சுமந்திரனிடம் கேட்கப்பட்ட வினாவின் பின்புலம் பற்றி (ததேகூவிடம் எதிர்க்கட்சித் தலைமை செல்வது) எதுவும் பதிவிடவில்லை. கேள்வியின் முன்பகுதியை அப்படியே புறக்கணித்துவிட்டனர். அத்துடன் சுமந்திரன் கூறிய பதிலின் சாரத்தை மொழி பெயர்ப்பதை விடுத்து முற்றுப் புள்ளிகளை அங்கும் இங்கும் வசதிக்கேற்றபடி சொருகி அர்த்தத்தை மாற்றிவிட்டனர்.

(3) விடுதலைப் புலிகள் ஆதரவு தொடர்பில் இருவரிடமும் ஒரே சாரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்து உண்மை. ஆனால், சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வியின் பின்புலம் முற்றிலும் மாறுபட்டது என்பதை மேலே சுட்டிக்காட்டியிருந்தேன். அதையும் தாண்டி, நண்பர்கள் இன்னொரு உண்மையையும் நாசுக்காக மறைத்துவிட்டனர். அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி நிதியாக கட்சியின் சார்பில் சுமந்திரன் புலிகள் ஆதரவு தொடர்பில் நேரடியாகப் பதில் கொடுத்திருந்தார், கஜனோ அக் கேள்விக்குப் பதிலே கொடுக்கவில்லை, நழுவிவிட்டார். அவரது பதிலில் அவர் முற்றாக கேள்வியின் இரண்டாம் பகுதிக்கு (அவரது அரசியல் விட்டுக்கொடுப்பின்மை தொடர்பில்) மாத்திரமே பதிலளித்திருந்தார். நழுவல் இராஜ தந்திரமாக இருக்கலாம் என்பது எனது ஊகம்.

(4) விடுதலைப் புலிகளின் கொள்கைகளோடு கஜன் கூட உடன்படவில்லை. 'தாம் தனி நாட்டைக் கோரவில்லை, தமிழரை தேசமாக அங்கீகரிக்கத்தான் கோருகின்றோம்’ என்று கஜன் கூறுவது விடுதலைப் புலிகளின் தனி நாட்டுக் கோரிக்கைக்கு முற்றிலும் முரண்படுகின்றார். ஆகவே, அவரும் 'விடுதலைப் புலிகளின் பிரச்சினை வேறு, தமிழரின் பிரச்சினை வேறு’ என்று சொல்லாமல் சொல்கிறார். சுமந்திரன் அதை நேரடியாகச் சொல்கிறார். சுமந்திரன் அரசியல் தீர்வு தொடர்ப்பாக ததேகூவின் நிலைப்பாடு தனது பதிலில் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்க, அது தொடர்பான அவரது நிலைப்பாடு அரசியல் ஈடுபாடு கொண்டவர் யாவரும் அறிந்திருப்பர்.

(5) அதே செவ்வியில் சுமந்திரன் தமிழரின் காணி விவகாரம், வடக்கில் இராணுவ மயமாக்கல் முதலிய முக்கியப் பிரச்சினைகளைப் பேசியிருந்தார். அது நண்பர்களிற்குத் தெரியவில்லை போலும்.

'நண்பனைக் காட்டு; உன்னைக் காட்டுவேன்’ என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகின்றது.

சுமந்திரன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியடப் போவதாக செய்தி கசியத் தொடங்கிய நாளில் இருந்தே தாங்கள் மாத்திரமே தமிழ்த் தேசியத்திற்காகப் போராடி வருவதாகக் காட்டிக்கொள்ள முனையும் ஒரு அரசியற் கட்சியும், அதற்கு ஆதரவானவர்களும் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தமக்கு வந்தபடி சுமந்திரனைப்பற்றி வாய்க்கு வந்தபடி வசைப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக: 'எட்டப்ப புத்திரர்கள்!’, 'எச்சில் எலும்புக்காய் - குரைக்கும்
விசுவாச வீரர்கள்!’ (திரு. சம்பந்தனையும் சேர்த்து)

https://www.facebook.com/VoteForTNPF/photos/a.690429954390047.1073741828.690425551057154/691265157639860/?type=1&theater

நாம் இன்றும் இந்தத் 'துரோகி'ப் பட்டம் சூட்டும் அரசியலில் இருந்து வெளிவரவில்லை. யார் எல்லாம் யதார்த்தமாக தமக்கு சரியெனப்பட்டதைக் கூறி, நேராக அரசியல் செய்ய விளைகின்றனரோ, இன்னுமொரு மொழியில் சொன்னால் யாரெல்லாம் தமிழ் அரசியலில் அதிகம் 'சவுண்டு’ வைக்கிறவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு முரணாகப் பேசுகின்றனரோ அவர்கள் எல்லோருக்கும் சட்டென துரோகிப் பட்டம் குத்தி ஏதாவது ஒரு கம்பியில் தூக்கில் இட்டுவிடுவது இவர்களுக்கு நன்றே பழகிய விடயம். அதைத்தான் மீண்டும் செய்கின்றனர்.

தமிழ் வாக்காளர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.

  1. storiesofthewind posted this
blog comments powered by Disqus