பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான மன்றத்தின் (GBV Forum) கொள்கைக் கருத்தாடல் 2014

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான 16 நாட்கள் செயற்பாடு (16 Days of Activism) தொடர்பிலான பிரசாரமானது, வெறுமனே பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை முடிவுறுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து உலகளாவிய ரீதியிலான விழிப்புணர்வைக் கட்டியெழுப்புவதற்கும், பொதுமக்களின் ஆதரவைப் பலப்படுத்துவதற்குமான ஒரு காலப்பகுதி மாத்திரம் அல்ல. மாறாக, அது பெண்களுக்கு எதிரான சகல வடிவிலுமான வன்முறைகளை இல்லாதொழிக்கும் பொருட்டு ஏற்றங்கீகரிக்கப்பட்ட செயன்முறைகளையும் நடைமுறைகளையும் கொள்கை வகுப்பாளர்கள் மீள வலியுறுத்துவதற்கான ஒரு காலப்பகுதியும் ஆகும்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடும் பொருட்டு, பெண்கள் உரிமைகள் தொடர்பில் பணியாற்றும் அரசாங்கப் பிரதிநிதிகளையும் சிவில் சமூகக் குழுக்களையும் ஓரிடத்தில் ஒன்றுகூடச் செய்கின்ற இக்கொள்கைக் கருத்தாடலானது (Policy Dialogue), 16 நாட்கள் செயற்பாட்டின்போது (நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை) இடம்பெறும் வருடாந்த நிகழ்வொன்றாகும். பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வாண்டுக்கான கொள்கைக் கருத்தாடல் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைக்கான பிரதிநிதியும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான மன்றத்தின் தலைவருமான எலைன் சிப்னெலர் (Alain Sibenaler) அவர்களின் வரவேற்புரையுடன் இவ் ஒன்றுகூடல் நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் எரிக் இலயப்பாராச்சி ஆரம்ப உரையை நிகழ்த்த, CARE Sri Lanka நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் அஷிகா குணசேன நிகழ்ச்சிக்கான அறிமுகத்தை வழங்கியிருந்தார்.

தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம் 2011 – 2016இன் (NHRAP) பெண்கள் உரிமைகள் எனும் தலைப்பின் கீழ் வருகின்ற முன்னுரிமையளிக்கத்தகு ஐந்து விடயப்பரப்புக்களைக் கருத்தில் கொண்டு, அவற்றிலிருந்து பெறப்பட்டதாக இக்கொள்கைக் கருத்தாடலின் மையப்பொருள் அமைந்திருந்தது. பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பான பொலிஸ் பிரிவை வலுப்படுத்தல், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்தல், வேலைத்தளங்களில் நிகழும் பாலியல் தொந்தரவுகளைத் தடுத்தல், தெருச் சுற்றுவோர் கட்டளைச் சட்டத்தை (Vagrants Ordinance) மீளாய்வு செய்தல் மற்றும் ஆயுத மோதலால் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றை இது உள்ளடக்குகின்றது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கொள்கைக் கருத்தாடல் இந்த ஐந்து விடயப்பரப்புக்கள் மீதும் கவனக் குவிப்பைச் செலுத்தி இருந்த அதேவேளை, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற கொள்கைக் கருத்தாடலானது, முறையே பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவு, குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் மற்றும் ஆயுத மோதலால் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னுரிமையளிக்கத்தகு மூன்று விடயப் பரப்புக்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்திருந்தது.

முழுமையாக இனங்கண்டு நிவர்த்திக்கப்படுவதற்கு ஒவ்வொரு விடயப்பரப்பிலும் அநேக விடயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன என்பதை மனதிற் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னுரிமையளிக்கத்தகு விடயப்பரப்புக்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றத்தை 2014இல் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான மன்றம் அங்கீகரித்தது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) பால்நிலை மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான நிகழ்ச்சித் திட்டத்தின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பிமாலி அமரசேகரவினால் (Bimali Amarasekara) பால்நிலை அடிப்படையிலான வன்முறையில் இருந்து தப்பிப் பிழைத்தோருக்கும் பாதிக்கப்பட்டோருக்குமான பரிந்துரை முறைமை (Referral System) ஒன்று தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான இந்த முறைமையானது சிறந்த அறிக்கையிடல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பொறிமுறைகளுக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒரு வழிமுறையாகும்.

மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவுகள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஓர் உறுதியான பரிந்துரை முறைமையை ஏலவே ஆரம்பித்துள்ளன. புகலிடத்துக்கான (Shelter) உதவியை நாடுபவர்களாகவே பாதிக்கப்பட்டவர்களுள் அதிகமானோர் உள்ளனர் என மாத்தறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த விபரித்தார். “தமிழ் மொழியில் நன்கு பரிச்சயமான உத்தியோகத்தர்கள் உள்ளமையினால் நாம் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றுகின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார். காலி மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த காஞ்சனா மாபிடிகமவும், 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமது பிரிவு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அடையப் பெற்ற முன்னேற்றங்கள் குறித்து உரையாற்றினார். பால்நிலை அடிப்படையிலான வன்முறைகுறித்த வைத்தியசாலை மேசையான (GBV Hospital Desk) ‘மித்துரு பியச’வுக்கு 700இற்கு மேற்பட்ட சம்பவங்கள் இவ்வாண்டு கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் 90 சம்பவங்களில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையைப் புரிந்தோர் உதவி தேடுபவர்களாகக் காணப்பட்டனர். உளவளத்துணை, மருத்துவ சேவைகள் மற்றும் சமூக ஆதரவு ஆகியன, பரிந்துரை மாதிரிக்குள் (Referral Model) தாம் வழங்கி வருகின்ற சேவைகளுள் சிலவாகும் என ‘மித்துரு பியச’வின் பிரதிநிதியான டாக்டர் சமன்மலீ குறிப்பிட்டார்.

இறுதியாக 2013இல் நடைபெற்ற கொள்கைக் கருத்தாடலில் இருந்து, இற்றைவரை அடையப்பெற்றுள்ள முன்னேற்றங்கள் குறித்து சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அஷோகா அலவத்த உரையாற்றுகையில்; நாடுபூராவும் நிறுவப்பட்டுள்ள 331 பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவுகளில் பல்துறைசார் பொறிமுறை (Multi-sector Mechanism) ஒன்று இடம்பெறச் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்; “இவற்றுக்கூடாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பால்நிலை அடிப்படையிலான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், இயலுமை விருத்திப் பயிற்சிப்பட்டறைகளையும் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை குறித்த இதர செயற்பாடுகளையும் 700 மில்லியன் ரூபா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாம் நடத்தியுள்ளோம்” என்றார்.

பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவு சார்பில் பங்கேற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஜயசூரிய பின்வருமாறு குறிப்பிட்டார்; “அனைத்து முறைப்பாட்டு சம்பவங்களும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கையாளப்படுவதை நாம் உறுதிப்படுத்துகின்றோம். அங்கு மொழிப் பிரச்சினை உண்டுதான். எது எவ்வாறிருப்பினும், ஒட்டுமொத்த பொலிஸ் திணைக்களமும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விசாரணைகளை நடத்தும் பொருட்டு திறந்துள்ளதுடன், அது தயார் நிலையிலும் உள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவது எமது கடமையாகும். ஆனாலும் எம்மால் அதனைத் தனியாக மேற்கொள்ள முடியாது. பல்வேறுபட்ட பங்காளர்களின் (Stakeholders) ஆதரவு எமக்குத் தேவையாக உள்ளது.” பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான பொலிஸ் பணியகத்தின் பணிப்பாளரான மேற்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசூரிய, 2005ஆம் ஆண்டு குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் அமுலுக்கு வந்ததில் இருந்து, இற்றைவரை அதுதொடர்பில் அறிக்கையிடப்பட்டுள்ள முறைப்பாட்டுச் சம்பவங்கள் குறித்த சாராம்சம் ஒன்றையும் பார்வையாளர்களுக்கு வழங்கியிருந்தார்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான மன்றத்தின் கூட்டு முயற்சிக்குப் புறம்பாக, பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் வன்முறைக்குள்ளாகி தப்பிப் பிழைத்தோருக்குரிய பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கான சேவைகளை வரைபடமிடும் செயற்பாடு (Mapping) ஒன்று தற்சமயம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. சூலநந்தியின் கருத்துக்கு அமைய, பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆதரவளிப்பதற்காக, தொகுக்கப்பட்டதும் இற்றைப்படுத்தப்பட்டதுமான தகவல்களுக்கு மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் நிலவும் பற்றாக்குறைக்கு பதிலிறுக்கும் (Response) பொருட்டு இந்த வரைபடமிடும் செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது. சேவைகளை வரைபடமிடுவதன் (Mapping of Services) மூலம், உத்தியோகத்தர்களுக்கு மத்தியிலான விழிப்புணர்வு மட்டத்தை முன்னேற்றுதல், பாதிக்கப்பட்டோருக்கான சேவைகள் குறித்த விரிவான தரவுத்தளம் (Database) ஒன்றை உருவாக்குதல் மற்றும் பாதிக்கப்பட்டோர் தமக்கான சேவைகளை தரமாகவும் உரிய நேரத்திலும் பெற்றுக்கொள்வதற்காக அணுகுவதை வலுப்படுத்தல் ஆகிய குறிக்கோள்களை மன்றம் கொண்டுள்ளது. அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு நிவர்த்திப்பதற்கு அப்பிரதேசங்களிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பொலிஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றவாறான மொழிசார் வரைபட முன்னெடுப்பு (Language Mapping Initiative) ஒன்றை உருவாக்குதல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான பிரச்சினைகளை பொறுப்பேற்றுக் கையாள்வதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றமை இதன்போது அடையாளம் காணப்பட்டிருந்தது. மொழிசார் தடையொன்று (Language Barrier) ஏலவே இருந்துவருகின்றமையானது, நீதிமன்ற செயற்பாடுகளில் மாத்திரம் பிரச்சினைகளை உருவாக்கவில்லை. மாறாக, பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடொன்றைச் செய்கின்றபோது பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கவேண்டி உள்ளமையால் அது அவர்களுக்கு மத்தியில் உள்ள நம்பிக்கையையும் இழக்கச் செய்கின்றது. இக்கொள்கைக் கருத்தாடலில் மொழிசார் வரைபடமிடுதல் குறித்துப் பேசப்படுகையில் FOKUS WOMEN அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரனிதா ஞானராஜா பின்வருமாறு குறிப்பிட்டார்: “போர் முடிவுற்ற பிரதேசங்களில் சிநேகபூர்வமானதும் சாதகமானதுமான சூழல் ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட பெண்களும் சிறார்களும் தமக்கான பாதுகாப்பை உணர்வர். அவர்கள் நீதியை நாடிச்செல்ல முடியுமாயுள்ள ஒரே இடம் பொலிஸ் பிரிவுகளாக மாத்திரம் உள்ளபடியால், சகல பொலிஸ் பிரிவுகளும் போதுமானளவு வசதிகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.”

Oxfam நிறுவனத்தின் சிரேஷ்ட ஆதரித்துவாதிடல் ஆலோசகரான (Senior Advocacy Advisor) சைறினி சிறிவர்த்தனவினால் ஆற்றுவிக்கப்பட்ட ஊடாடத்தகு கலந்துரையாடல் (Interactive Discussion) ஒன்றுடன் கொள்கைக் கருத்தாடல் முடிவுக்கு வந்தது. நாட்டினுள் காணப்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான மூலக்கூறுகள் குறித்தும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்குரிய இலகுவான செயன்முறை ஒன்றை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றவகையில் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்கள் மேம்படுத்தப்பட முடியும் என்பது குறித்தும், குழுவின் (Panel) ஒவ்வோர் உறுப்பினரும் தொட்டுச் சென்றனர். பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு நாட்டில் கிடைக்கக்கூடியதாக உள்ள புகலிடங்கள் (Shelters) குறித்து நன்கு அறிந்திருக்கவில்லை என்பதும், இத்தகைய புகலிடங்களுக்கு பாதிக்கப்பட்டவர்களை அனுப்புவதற்கு சமூகத்தில் அச்ச உணர்வொன்று நிலவுகின்றது என்பதும் இக்கலந்துரையாடலில் அவதானிக்கப்பட்டன. குழுவில், தேவைநாடும் மகளிர் அமைப்பைப் (Women in Need) பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த சாவித்திரி குணசேகர; “புகலிடம் ஒன்றை நடத்திச் செல்வதில் ரகசியத் தன்மை பேணப்படுவதே இன்றியமையாத விடயமாகும். அனைத்துப் புகலிடங்களும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் விதிமுறைகள் மற்றும் கண்காணிப்பு போன்ற விடயங்களில் சில ஒருசீர்த்தன்மை காணப்படும்” என்றார்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில், பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான மன்றத்தின் ஊடாக, கணிசமான முன்னேற்றம் அடையப்பெற்றிருக்கின்ற போதிலும், இன்னும் அதிகளவான கொள்கை வகுப்பாளர்களின் ஈடுபாட்டுக்கான இடைவெளி ஒன்று உள்ளது. “அனைத்து வகையிலும் தேவைப்படுகின்ற நீதி மற்றும் கல்வி போன்ற மேலும் பல துறைகளை இக்கலந்துரையாடலுக்குக் கொண்டுவர வேண்டிய தேவையொன்று உள்ளது” என சைறினி சிறிவர்த்தன குறிப்பிட்டார்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான மன்றத்தின் 2014ஆம் ஆண்டுக்கான கொள்கைக் கருத்தாடலில் இருந்து அதன் செயற்பாட்டுக் குறிப்புக்கள் (Action Points) வரையப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னுரிமையளிக்கத்தகு விடயப்பரப்புக்களின் மேலதிக மேம்பாட்டிற்காக அவை முன்னெடுக்கப்பட உள்ளன.

Leave a comment