Guest Post by Irham Sehu Dawood – பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும் முன்னெடுப்பில் ஆண்களின் ஈடுபாடு

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகும் குரலெழுப்பிக்கொண்டிருக்கும் தருணம் இது. ஆம்! ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரையிலான 16 நாட்கள் முழு உலகுமே பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக ஒருமித்த பிரசாரம் ஒன்றை – பல்வேறுபட்ட பிரசார வடிவங்களில் – முன்னெடுத்து வருகின்றது. இந்த முன்னெடுப்புக்களின் முக்கிய நோக்கம், தாம் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றோம் என்பதைக்கூட அறிந்துகொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதாரண மக்களுக்கு மத்தியில் – குறிப்பாக பெண்களுக்கு மத்தியில் – சமூகத்தில் நிலையூன்றிப்போயுள்ள பால்நிலை குறித்த தவறான மனப்பதிவுகளைத் (Gender Stereotypes) தகர்த்தெறிவதன் மூலம் பாரிய விழிப்புணர்வொன்றை ஏற்படுத்துவதாகும். அத்தகைய விழிப்புணர்வானது சமூகத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தன்னைத்தானே சுய மதிப்பீடு செய்துகொள்வதற்கு மாத்திரமன்றி, சுய உணர்தலினூடாக சாதகமான மாற்றத்தை நோக்கி இயங்குவதற்குமான வழிவகைகளை அமைத்துக் கொடுக்கின்றது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நிவாரணத்தை நாடிச்செல்வதற்கான உளவலுவையும் அதற்கான வழிகாட்டுதல்களையும் இந்த பிரசார மார்க்கம் தோற்றுவிக்கின்றது.

பொதுவாக அடிமைத்தனத்தை நிலைபெறச் செய்வதற்கு இருவிதமான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒன்று, வன்முறை (Violence). அடுத்தது கருத்தியல்கள் (Ideologies). பெண்ணடிமைத்துவத்தை நிலைநிறுத்தல் அல்லது பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்குள் பெண்களை உட்படுத்தல் ஆகிய செயற்பாடுகளின்போது மேற்படி இரு வழிமுறைகளினதும் மூலகர்த்தாக்களாக பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். குறிப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை அரங்கேற்றுபவர்கள் என்ற ரீதியில் அத்தகைய வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான பிரசார முன்னெடுப்புக்களில் ஆண்களின் பங்களிப்பு உள்வாங்கப்படுதல் வினைத்திறனான விளைவுகளைத் தோற்றுவிக்கும். எனவே, அத்தகைய முன்னெடுப்புக்களில் ஆண்களின் ஈடுபாட்டை உள்வாங்கிக் கொள்வதற்கான தேவைப்பாடுகள் குறித்தும், அதற்கான மூலோபாயங்கள் குறித்துமே இந்தக் கட்டுரை ஆராய்கின்றது.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும் முன்னெடுப்பில் ஆண்களை ஈடுபடுத்துவதற்கான பிரதான காரணங்கள்

• பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிரான நிகழ்ச்சித்திட்டங்களில் ஆண்கள் தரப்பில் இருந்து தோன்றும் பின்னடைவைத் தடுப்பதற்கு அது துணை புரியும்.

• வீட்டிலும் சரி சமுதாயத்திலும் சரி பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களே மிகையான அதிகாரத்தைக் கொண்டிருக்கின்ற ஒரு சமூகக் கட்டமைப்பில் நாம் வாழ்கின்றோம். எனவே எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வினைத்திறன்மிக்க முகவர்களாக அவர்களால் திறம்பட தொழிற்பட முடியும்.

• தமது கணவன்மார்களால் / குடும்பத்தால் / சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்படுகின்ற வன்முறைக்குள்ளான பெண்களை, சமுதாயத்தில் மீள் ஒருங்கிணைப்புச் செய்வதற்குத் தேவையான ஆதரவை, ஆண்களின் பங்கேற்பு அதிகளவில் வழங்கக் கூடும். உதாரணமாக, பாலியல் வன்புணர்வு போன்ற மிக மோசமான பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு உள்ளான பெண்களை சமூகத்துடன் மீள ஒருங்கிணைப்புச் செய்வதில் ஆண்களின் வகிபாகம் இன்றியமையாதது.

• இம்முன்னெடுப்பில் ஓர் ஆணின் ஈடுபாடானது மற்றைய ஆண்களின் கவனத்தை இலகுவில் ஈர்த்தெடுக்கச் செய்வதுடன் அத்தகைய ஈடுபாட்டிற்கான சுய தூண்டல் ஒன்றையும் அவர்களுக்குள் ஏற்படுத்தக் கூடும்.

எனவே மேற்போந்த காரணங்களின் நிமித்தம் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான முன்னெடுப்பில் ஆண்களின் ஈடுபாட்டை உள்வாங்குதலானது, அம்முன்னெடுப்பின் வீச்செல்லையை மேம்படுத்துவதுடன் குடும்ப மற்றும் சமூக மட்டத்தில் புரையோடிப்போயுள்ள பால்நிலைசார் அதிகாரத் தொடர்புகளை (Gender Relations) சீரமைத்துக்கொள்ளவும் சமூக-கலாசார அடிப்படையில் நிலைபெற்றுள்ள பால்நிலைசார் சமூகக் கட்டுமானத்தை மீள்நிர்மாணம் செய்துகொள்ளவும் மாத்திரமின்றி, குடும்ப வன்முறைகளை கணிசமானளவு குறைக்கவும் வழிசமைக்கும். இங்ஙனம் ஆண்களின் ஈடுபாட்டை உள்வாங்கும் அணுகுமுறையானது, குறித்த வன்முறை, குடும்பத்தினரையும் சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கின்றது எனும் விழிப்புணர்வை ஆண்கள் மத்தியில் தோற்றுவிப்பதன் மூலம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். அதற்காக பின்வரும் உபாய மார்க்கங்களைப் பிரயோகிக்க முடியும்;

• சமூக மட்டத்திலுள்ள சகல ஆண்களையும் இம்முன்னெடுப்பில் உள்வாங்குதல். அதாவது பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய ஆண்களை மாத்திரமின்றி நேர்மறை அல்லது முற்போக்கு சிந்தனை கொண்ட முன்மாதிரியான ஆண்களையும் மாற்றத்திற்கான செயன்முறையினுள் உள்வாங்குதல்.

• ஆண்கள் மனம்விட்டுப் பேசக்கூடிய மனதுக்கு ரம்மியமான இடங்களில் இதன்பொருட்டு அவர்களை சந்தித்து குறித்த விடயம் தொடர்பான கருத்தாடலை மேற்கொள்ளல். பங்குபற்றும் சகலருக்கும் தமது அபிப்பிராயங்களை சுதந்திரமாகத் தெரிவிப்பதற்கான சம சந்தர்ப்பத்தை வழங்குதல்.

• கருத்தாடலை முன்னெடுப்பவர் விடயஞானம் உள்ளவராகவும், உன்னிப்பாக செவியேற்றல், சிறந்த தொடர்பாடல் மற்றும் வினைத்திறனான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளல் போன்ற திறன்களைக் கொண்டவராகவும் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

• வெவ்வேறு அடிப்படையிலான ஆண்கள் குழுக்களை அமைத்து, (உதாரணமாக- இளைஞர்கள், முதியவர்கள், சமயத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் போன்றோர்) அவர்களுடன் பிரத்தியேகமான கருத்தாடலில் ஈடுபடல். இது பால்நிலை அடிப்படையிலான வன்முறை குறித்து சமூகத்தின் பல்வேறு மட்டத்தினரதும் மனப்போக்கையும் பிரச்சினைகளையும் துல்லியமாக அறிந்துகொண்டு, அவற்றின் மீது சாதகமான மாற்றங்களையும் தீர்வுகளையும் முன்வைத்து அவற்றுக்காக ஆதரித்துவாதிட வழிவகுக்கும்.

• விழிப்புணர்வுக்கான இத்தகைய கருத்தாடலின்போது பொதுவாக ஆண்கள் தமது தனித்துவ அடையாளம் குறித்தும், தாம் இதில் ஈடுபடுவதால் குடும்பத்தினுள் தமது சுயாதீனம் அல்லது தமக்கு தொன்றுதொட்டு இருந்துவருகின்ற மரியாதை இல்லாமற்போகலாம் என்பது குறித்தும் கவலையும் அச்சமும் கொள்ளலாம். குடும்பத்தலைவன் என்ற ரீதியில் எழுகின்ற மேலாதிக்கத்தைத் (Dominance) தொடர்புபடுத்தி இந்த விடயத்தில் அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டும். அதாவது ஒருவன் மரியாதையை எதிர்பார்க்க வேண்டும் என்றால் அதே மரியாதையை தான் யாரிடமிருந்து எதிர்பார்க்கின்றானோ அவர்களுக்குச் செலுத்த வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தேற்பை வலியுறுத்தி, குடும்பத்தினுள் பெண்கள் மீதும் பிள்ளைகள் மீதும் அவனுக்குள்ள சட்டரீதியான கடப்பாடுகளைத் தெளிவுறுத்தி, ஒரு விடயம் தொடர்பில் குடும்பக் கட்டமைப்புக்குள் பரஸ்பரம் அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்டு (sharing powers) கூட்டுத் தீர்மானத்தை (collective decision) அடைதல் எனும் இலக்கை நோக்கி அவர்களை விழிப்புணர்வூட்டுதல்.

• எதிர்மறையான நடத்தைகள் குடும்பக் கட்டமைப்பை எவ்விதம் சீரழிக்கின்றன (உதாரணமாக: வன்முறையான தந்தையைக் கண்டு பிள்ளைகள் அஞ்சியொதுங்குதல்) என்பது குறித்தும் வன்முறைகளைக் குறைப்பதனால் கிடைக்கின்ற உடனடி மற்றும் நீண்டகால பலாபலன்கள் குறித்தும் விசேடமாகக் கருத்தாடுவதன் மூலம் சிறந்த கணவனாக, தந்தையாக, மகனாக இருக்க வேண்டும் என்ற உள உந்துதலை பங்குபற்றுனரிடையே தோற்றுவித்தல்.

மேற்படி உபாய மார்க்கங்களின் ஊடாக தனிநபரிடையே எழுகின்ற விழிப்புணர்வு காலப்போக்கில் பாரியதொரு சமூக அணிதிரட்டலுக்கு (social mobilization) வழிவகுக்கும் அதேவேளை, இந்த முன்னெடுப்பில் ஆண்களின் ஈடுபாடு அதிகரிக்கின்றமையினால் அதற்கு சமாந்தரமான அளவில் குடும்பத்திலும் சமூகத்திலும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளின் வீழ்ச்சியையும் அவதானித்தல் சாத்தியமாகும்.

Leave a comment