Friday 15 December 2017

கார் காலம் - நாவல்

அதிகாரம் 18 - பெரிய விருந்து
தொழிற்சாலையை மூடுவதென்று தீர்மானம் செய்த பின்னர் முன்னைவிட அதன்  உற்பத்தியில், தரத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பில் பலமடங்கு கவனம் எடுத்தார்கள். பாதுகாப்பு (safety), செலவு (cost reduction), தரம் (quality) என்பவற்றிற்காக பல இலட்சம் பணம் ஒதுக்கினார்கள். தொழிற்சாலையின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக, வேலை நடந்த காலத்தில் இருந்த அக்கறையைக் காட்டிலும் பலமடங்கு அக்கறை காட்டினார்கள். எல்லாவற்றிலும் ‘தடிஓட்டிக்கொண்டு திரிந்தார்கள்.

இந்தத் தொழிற்சாலை அவுஸ்திரேலியாவில் மட்டும்தான் மூடப்படுகின்றது. உலகம் பூராவும் இதே போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. இப்பொழுதும் கார் உற்பத்தியில் முதலாவது இடம்---நம்பர் வண்---என்று பெயர் எடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்தும் தமது ‘பெயரைக்காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஒழுங்குமுறை இருந்தது. அதையே எல்லாரும் பின்பற்ற வேண்டும். ஒருவர் ஒன்றையும் மற்றவர் இன்னொன்றையும் செய்யக்கூடாது. காலத்துக்குக் காலம் தொழிலாளர்கள் செய்யும் வேலையை அளவீடு செய்தார்கள். தவிர வருடத்தில் இரண்டு தடவைகள் தலைமைத் தொழிற்சாலையில் இருந்து இருவர் வந்து இந்த அளவீடு செய்வதைப் பார்த்துக் கொண்டு நிற்பார்கள்.

தொழிற்சாலையிலிருந்து எப்பொழுது தொழிலாளர்களை நீக்குவது என்று முடிவு செய்தார்களோ, அதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக ஒரு நெடிய வெள்ளை மனிதர் தொழிற்சாலை எங்கும் குடுகுடுவென்று ஓடித் திரிந்தார். வயது எழுபத்தைந்திற்கு மேல் எதிர்பார்க்கலாம். நியாயமாகப் பார்த்தால் முதலில் வீட்டிற்குப் போக வேண்டியவர் அவர்தான். ஹெவினையும் பெளசரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்ததில் அவருக்குப் பெரும் பங்குண்டு என்று சொல்லுவார்கள்.

ஒரு தடவை பொம் போய் எப்படி வேலை செய்கின்றான் என்று அவனது திறமையை மதிப்பிடுவதற்காக அவனின் பின்னாலே நின்றார். அவனின் இரண்டு பெரிய பிருஷ்டங்கள்தான் அவருக்குத் தெரிந்தன. அவன் போகும் இடமெல்லாம் அவரும் பின்னாலே சென்றார். இருவரும் காரைச் சுற்றிச் சுற்றி வட்டமடித்தார்கள். ஒரு கட்டத்தில் அவர் தன்னை வேவு பார்க்கின்றார் என பொம் போய் உணர்ந்து கொண்டான். அதன் பின்பு பொம் போய் தனக்குக் கடிவாளம் போட்டுக் கொண்டான். ஆனால் கடிவாளம் போட முடியாத ஒன்றை அவன் பதுக்கி வைத்திருக்கின்றான் அல்லவா?


பெரியவர் இங்கு உளவு பார்ப்பதை எல்லாரும் அறிவார்கள். ஒரு கட்டத்தில்  பெரியவர் தனது மூக்கை இறுக்கிப் பொத்தியபடி தலை தெறிக்க ஓட்டமெடுத்தார். தூரத்தில் போய் நின்று ஆசுவாசமாகச் சுவாசித்துவிட்டு, மீண்டும் மூக்கைப் பொத்தியபடி குனிந்து பொம் போயைப் பார்த்தார். இப்போதெல்லாம் பொம் போயிற்கு வாணம் விடுவதும் தெரியாது, அது மணப்பதும் தெரியாது. புலன் உணர்வுகள் செத்துவிட்டன அவனுக்கு. திடீரென்று திரும்பியவன் வேவு பார்த்தவரைக் காணாது திகைத்தான். நாலாபக்கமும் கண்களை அலைய விட்டான். முன்பு என்ன கோலத்தில் நின்றாரோ, அதே கோலத்தில் சற்றுத் தூர நின்று தன்னைப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டு கொண்டான் பொம் போய்.

“இதென்ன இந்த மனிசனுக்கு நடந்தது? என் பிருஷ்டங்களைப் பிடித்து விழுங்குவது போல நின்ற மனிஷன் இப்படித் தூரத்தில் போய் நிற்கின்றாரே!என ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. பிடித்த மூக்கின் பிடியைத் தளரவிடாமல் அங்கிருந்தபடியே இவனைப் பார்த்து யோசித்தார்.

“இப்பிடியொரு பீப் பண்டியனா இருக்கின்றானே! விடுகிறதுக்கு ஒரு அளவு கணக்கில்லையா?

ஒருநாள் ஹிப்போபொரமஸ் தான் பார்ட்டி ஒன்று வைப்பதாகவும் எல்லோரையும் வரும்படியும் அழைப்பு விடுத்திருந்தாள். எல்லோருக்கும் அவள் வேண்டப்பட்டவளாக இருந்ததால் அவளது அழைப்பை மறுக்க முடியவில்லை.
ஹிப்போ, பொதி (voluntary package) எடுத்துவிட்டாள் போல அதுதான் பார்ட்டி வைக்கின்றாள் என்று கதைத்துக் கொண்டார்கள்.

ஆனால் விருந்துக்குப் போனவர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. அவள்
“நான் எனது கணவனை விவாகரத்துச் செய்து விட்டேன். I am freedom from DANGER” என்று கேக் வெட்டும்போது பெலத்துச் சத்தமிட்டுச் சொன்னாள். பெரியதொரு ஹோலில் வெகு விமரிசையாக சிறப்பாக அந்தத் திருநாளைக் கொண்டாடினாள் அவள்.

அன்று தொழிற்சாலையில் வேலை செய்யும் பலர் தமது கணவன் அல்லது மனைவியுடன் வந்திருந்தார்கள். கேக் வெட்டியபின் நடனமாடினார்கள்.


ஒகாரா பைலாப் போட்டபடியே அடிக்கடி தொப்பியைத் தூக்கி தனது மொட்டந்தலையைக் காட்டினான். மைக்கல் ஜக்சன் போல சுழன்று சுழன்று ஆடினான். அறுபது வயதைக் கடந்தும் அவன் ஆடும் ஆட்டம் சிரிப்பை வரவழைத்தது. நந்தனின் காதிற்குள் குனிந்து,

“எனது எக்ஸ் வைவ் இப்போது உண்டாகியிருக்கின்றாள்என்று புக்காரா மாதிரி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

“இவன் என்ன ஹிப்போவை விட மோசமாக இருக்கின்றானே!என நந்தன் வியந்தான்.
●●

அவுஸ்திரேலியாவில் வேலை இல்லாத் திண்டாட்டம் வந்ததன் பின்னர் களவும் கூடிவிட்டது.

ஒருநாள் தொழிற்சாலையின் முதலாவது கேற் வாசலில் மயங்கியபடி விழுந்து கிடந்தான் பொம் போய். பகல் வேலைக்காக காலை ஏழு மணியளவில் வந்தவர்கள்தான் அவனைத் தூக்கி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். இரவு வேலை முடிந்து வீடு திரும்பும்போது, யாரோ அவனைத் தாக்கியிருக்கின்றார்கள். அவனின் நான்கு பொக்கற்றுகளையும்  கத்தியால் கிழித்து உள்ளேயிருந்த காசை உருவிக் கொண்டு போய்விட்டார்கள். இது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். அவனுக்கு ஏதும் காயங்கள் இல்லை. அவனின் கார் பத்திரமாக கார்ப் பார்க்கினில் நின்றது. அவனை மாத்திரம் தூக்கிக் கொண்டுபோய் வாசலில் போட்டுவிட்டுப் போய் விட்டார்கள்.

●●●

இன்னும் வரும் ...

No comments:

Post a Comment