இவ்வருடத்திற்கான பிரிவு II (டிவிசன் – II) பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் குருநாகல் மலியதேவ கல்லூரிக்கு எதிரான போட்டியில் முஸாக்கிர் பெற்ற தொடரான நான்கு கோல்கள் மூலம் புத்தளம் ஸாஹிரா கல்லூரி 4 0 என்ற விகிதத்தில் இலகு வெற்றியினைப் பதிவு செய்தது.

புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியானது முழுமையாக 70 நிமிடங்களைக் கொண்டதாக அமைந்தது. முதல் 8 நிமிடத்திற்குள் பந்தினை முழுமையாக ஸாஹிரா கல்லூரி அணியினர் வைத்துக் கொள்ள மலியதேவ அணி அதிகமாக போராட வேண்டி ஏற்பட்டது.

10 வீரர்களுடன் ஹமீத் அல் ஹுசைனியை வீழ்த்தியது ஸாஹிரா கல்லூரி

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியை 1-0 என்ற கோல்…

ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் ஸாஹிரா கல்லூரியின் நஹ்லன் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை முஸாக்கிர் கம்பம் நோக்கி அடிக்க பந்து தடுப்பு வீரர்களில் கால்களில் பட்டு வெளியேறியது.

மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து மைதானத்தின் அரைப் பகுதியிலிருந்து புத்திக கம்பம் நோக்கி வேகமாக பந்தை உதைந்தார். எனினும், ஹுசைர் உயரே எழுந்து இலகுவாக பிடித்துக்கொள்ள மலியதேவ அணியின் முயற்சி வீணானது.

மீண்டும் 20வது நிமிடத்தில் முஸாக்கிர் கொடுத்த உயரமான பந்துப் பரிமாற்றத்தை சிப்கான் பாய்ந்து தலையால் முட்டி கோலாக்க முயல பந்து கம்பத்திற்கு அருகால் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.

போட்டியின் 24வது நிமிடத்தில் ஜஹீர் நீண்ட தூரத்திலிருந்து பெணால்டி எல்லைப் பகுதிக்குள் பந்தினை கொண்டுவந்து கம்பம் நோக்கி அடிக்க அது தடுப்பு வீரர் தஸாநாயக்கவின் கையில் பட, நடுவர் அவருக்கு மஞ்சள் அட்டை காட்டி எச்சரித்து ஸாஹிரா கல்லூரி அணிக்கு பெனால்டி உதையினை வழங்கினார்.

பெனால்டி உதையை முஸாக்கிர் இடக்காலால் வேகமாக அடிக்க பந்து இலகுவாய் கம்பத்தினுள் சரணடைந்தது. இதனால் ஸாஹிரா கல்லூரி அணி முதல் கோலை பதிந்து முன்னிலை பெற்றது.

தொடர்ந்தும் பந்தை ஸாஹிரா அணி முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள தடுமாறிப் போனது மலியதேவ அணி.

முதல் பாதியின் இறுதி முயற்சியாக நஹ்லான் வேகமாகச் செயற்பட்டு பந்தை கம்பத்திற்குள் அனுப்பி வைக்க நடுவர் ஓப்சைட் என அறிவிக்க கோல் முயற்சி தோல்வியில் முடிந்தது.

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 1 – 0 மலியதேவ கல்லூரி

மைதானம் ஸாஹிராவின் பழைய மாணவர்களால் முழுமையாக சூழப்பட கரகோசத்தில் அதிர்ந்து காணப்பட்டது.

ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் ஸாஹிராவின் ஜஹீர் கொடுத்த அற்புதமான பந்துப் பரிமாற்றத்தை ஸமீர் பெற்று வெடகொதரவின் கைகளுக்கே தாரைவார்க்க வாய்ப்பு வீணானது.

Highlights – Zahira College v Royal College (U18 Division I)

Uploaded by ThePapare.com on 2017-09-14.

தொடர்ந்த ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் ஹயாம் கொடுத்த பந்தினை பெற்ற ஜஹீர் பெனால்டி பகுதிக்குள் நுழைய, முறையற்ற விதத்தில் மலியதேவ அணியின் தடுப்பு வீரர் பந்தினைப் பறிக்க முயல ஜஹீர் கீழே விழுந்தார். நடுவர் ஸாஹிரா கல்லூரி அணிக்கு மற்றுமொரு பெனால்டி வாய்ப்பினை வழங்கினார்.

இரண்டாவது பெனால்டி உதையையும் முஸாக்கிர் அடிக்க, அதனை வெடகெதர பிடிக்க முயற்சிக்க முன் பந்து கோலுக்குள் நுழைந்ததால் கோல் கணக்கு இரட்டிப்பானது.

ஏற்கனவே, முன்னிலை பெற்றிருக்க ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் ஜஹீர் கொடுத்த இலகுவாக கோலாக்கும் பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற முஸாக்கிர் எந்தவித குழப்பமும் இன்றி இலகுவாக பந்தை கோலுக்குள் செலுத்தி தன் ஹட்ரிக் கோலினைப் பதிவு செய்தார்.

பின்னர், மலியதேவ அணியின் பகுதியினை ஸாஹிராவின் அனைத்து வீரர்களும் ஆக்கிரமிக்க காலில் பந்தினை பட வைக்கவே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது மலியதேவ அணி.

ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் ஜஹீர் கொடுத்த இலகுவான பந்துப் பரிமாற்றத்தினை முஸாக்கிர் தவர விட அமைதியில் உரைந்தது மைதானம்.

இரண்டாம் பாதியில் மலியதேவ அணியினரால் ஒரு முறை கூட ஸாஹிராவின் பகுதிக்குள் நுழைய முடியாமல் போனமையால் கோல்காப்பாளர் ஹுசைரும் மைதானத்தின் அரைப் பகுதியிலே காணப்பட்டார்.

இரண்டாம் பாதியின் இறுதி நிமிடத்திலும் மலியதேவ அணிக்கு மீண்டும் கோல் அதிர்ச்சி காத்திருந்தது. ரியாஸத் பந்தினை ஜஹீருக்குக் கொடுக்க ஜஹீர் இரண்டு தடுப்பு வீரர்களைக் கடந்து முஸாக்கிரிடம் ஒப்படைத்தார். கோல்காப்பாளர் இல்லாத பகுதியினூடாக பந்தினை கம்பத்திற்குள் அனுப்பி வைக்க முஸாக்கிர் தன் பங்கிற்கு நான்காவது கோலையும் பெற்றவுடன் மைதானமே ஒரு கனம் ஆதரவுக் கோஷங்களுடன் முழங்கின.

பேல்ஸ் – த்ரீ ஸ்டார் இடையிலான போட்டி சமநிலையில் நிறைவு

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் ஏற்பாடு செய்து…

போட்டி நிறைவு பெற்றதாய் நடுவர் அறிவிக்க முஸாக்கிர் பெற்ற நான்கு கோல்களினால் மலியதேவ அணியினை 4 – 0 என்ற அடிப்படையில் இலகுவாய் வீழ்த்தியது புத்தளம் ஸாஹிரா கல்லூரி அணி.

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 4 – 0 மலியதேவ கல்லூரி

இப்போட்டிக்கு சிறப்பு அதிதியாக அகில இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாலரும் இலங்கை 18 வயதிற்குட்பட்ட தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளருமாகிய டாக்டர் ஆஸாத் அவர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

கோல் போட்டவர்கள்

புத்தளம் ஸாஹிரா கல்லூரி – முஸாக்கிர் 24’,51’, 56’, 67’

மஞ்சள் அட்டை:

மலியதேவ கல்லூரி – திஸாநாயக்க 24’, ஜெயக்கொடி58’