ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் எனும் பொழுது இலங்கை அணியைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் பல சாதகமான பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்திருந்தது.

அத்துடன் எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் மிக்க அணியாகத் திகழ்ந்திருந்தது என்பதில் சந்தேகமில்லை. எனினும், தற்பொழுது நிலைமை சற்று மாறியுள்ளது. அண்மைய காலங்களில் இலங்கை அணியிலிருந்து மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கரா மற்றும் TM டில்ஷான் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஓய்வு பெற்றதிலிருந்து இம்முறை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடருக்கு இலங்கை அணி பாரிய சவால்களுக்கு மத்தியில் களமிறங்கவுள்ளது.

இதுவரை நடைபெற்ற அனைத்து சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களிலும் பங்குபற்றியுள்ள இலங்கை அணியானது, எட்டாவது முறையாகவும் இம்முறை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்குபற்றவுள்ளது.  

கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களில் மொத்தமாக 24 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி அரைவாசிக்கும் மேற்பட்ட போட்டிகளில் வென்றுள்ளது. 13 போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்தும் இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வியின்றியும் முடிவுற்ற நிலையில், 9 போட்டிகளில் மாத்திரமே தோல்வியுற்றுள்ளது.

அத்துடன், இலங்கை மண்ணில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரின் போது இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2002ஆம்  ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது மழை காரணமாக போட்டியில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. அதனால், ஒதுக்கப்பட்ட மற்றுமொரு நாளுக்கு போட்டி பிற்போடப்பட்டது. எனினும் அந்த நாளும், மீண்டும் மழையினால் போட்டிக்கு இடையூறு ஏற்பட்டதனால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய அணியுடன் இலங்கை அணியும் சேர்ந்து கூட்டு சம்பியனாக முடி சூடிக்கொண்டது.

கடந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியுள்ளது. எனினும் இம்முறை நடைபெறவுள்ள ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் பாரிய சவால் மற்றும் பலம் வாய்ந்த அணிகளுக்கு மத்தியில் தனது திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இலங்கை அணி காணப்படுகின்றது.

அந்த வகையில் எதிர்வரும் ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ள நிலையில் கடந்த காலங்களில் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை வீரர்களால் நிலை நாட்டியுள்ள சாதனைகள் மற்றும் புள்ளி விபரங்களை சற்று நோக்குவோம்.

  • அதிகளவான சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் பங்கெடுத்த வீரர்களாக மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில், 2000ஆம் ஆண்டு முதல் 2013ஆம் வரை நடைபெற்றுள்ள போட்டிகளில் மொத்தமாக 22 போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்.
  • 2017ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அணியில் எட்டு வீரர்கள் – லசித் மலிங்க, அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ், நுவன் குலசேகற, உபுல் தரங்க, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், திசர பெரேரா மற்றும் சாமர கபுகெதர ஆகிய வீரர்கள் இதற்கு முன்னதாக சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்.
  • அத்துடன், தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணி சார்பாக அதிகளவு சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியுள்ள லசித் மலிங்க, 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • துடுப்பாட்டத்தில், அதிகூடிய ஓட்டங்களாக முன்னாள் அணித் தலைவர்களான மஹேல மற்றும் சங்கக்கார ஆகியோர் முறையே 742, 683 ஓட்டங்களை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் குவித்துள்ளனர்.
  • Sangaஒரு போட்டியில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் பெற்ற 134 ஓட்டங்களை, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் பதிவு செய்தார்.
  • இலங்கை அணி சார்பாக அதிக சதங்கள் பெற்றவர்களில் உபுல் தரங்க இரண்டு சதங்களைப் பதிவு செய்துள்ள அதேநேரம், ஐந்து போட்டிகளில் விளையாடி சராசரியாக 53.53 என்ற ஓட்ட விகிதத்தைக் கொண்டுள்ளார். அத்துடன், இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க இரண்டு போட்டிகளில் மாத்திரம் பங்குபற்றி சிறந்த சாராசரியான 94 என்ற ஓட்ட விகிதத்தைக் கொண்டுள்ள அதேநேரம் 90 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவு செய்துள்ளார்.
  • பந்து வீச்சில், சூழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 17 போட்டிகளில் பங்குபற்றி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம் இறுதி ஓவர்களில், சிறப்பாக பந்துவீசும் லசித் மலிங்க 22 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணி சிறப்பாக விளையாடினால், லசித் மலிங்கவுக்கு முத்தையா முரளிதரனின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
  • 2006/07ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில், பர்வீஸ் மஹ்ரூப் 15.83 சாராசரியில் 5.27 ஓட்ட விகிதத்தில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு சம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளராகத் திகழ்கின்றார்

Mahaஅந்தப் போட்டியில், மஹ்ரூபின் சிறந்த பந்து வீச்சினால் (6/14) மேற்கிந்திய தீவுகள் அணியின் சகல விக்கெட்டுகளையும் 30.4 ஓவர்களில் 80 ஓட்டங்களுக்கு இலங்கை அணி கைப்பற்றியிருந்தது. அத்துடன், அப்போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

  • 2009ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில், தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ஓட்டங்களைப் பெற்றுள்ளதே இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது. குறித்த போட்டியில், TM டில்ஷான் 106 ஓட்டங்களைக் குவித்த அதேநேரம் ஜயவர்தன மற்றும் சங்கக்கார ஆகியோர் முறையே 77, 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

பல சாதனைகளை  நிலைநாட்டிய வீரர்கள் இல்லாத நிலையில், எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரை இலங்கை வீரர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை சற்று பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.