விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இரண்டு போட்டிகளுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருந்தது. எனினும் அதில் ஒரு போட்டியில் பலம் பொருந்திய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்தது.

துடுப்பாட்டத்தில் பிரகாசித்த தோனி; மும்பைக்கு மற்றுமொரு அதிரடி வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் இரண்டு போட்டிகள்..

நேற்று மாலை ராஜ்கோட்டியில் இடம்பெற்ற முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சுரேஸ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வோரா, அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த தொடரில் அசத்தி வரும் வோரா இரண்டு ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஷோன் மார்ஷ் களம் இறங்கினார். இவர் அம்லாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 24 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்த ஷோன் மார்ஷ், டையின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைச் சதம் கடந்த அம்லா 40 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 65 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மெக்ஸ்வெல் 18 பந்தில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 31 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஜடேஜாவின் பந்தில் வெளியேறினார். மெக்ஸ்வெல் ஆட்டமிழக்கும் போது பஞ்சாப் அணி 14.2 ஓவரில் 132 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பின்னர், அக்சார் பட்டேலின் (16 பந்தில் 34 ஓட்டங்கள்) அதிரடியால் பஞ்சாப் அணி கடைசி 34 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது பஞ்சாப் அணி.

இதனைத் தொடர்ந்து 189 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய குஜராத் லயன்ஸ் அணியின் மெக்கலம், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

குஜராத் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மெக்கலம் 6 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரெய்னா களம் இறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் பிஞ்ச் 13 ஓட்டங்களில் வெளியேற, ரெய்னா 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

70 ஓட்டங்களுக்குள் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்த குஜராத் அணியால், சரிவில் இருந்து மீள முடியாமல் போனது. தினேஷ் கார்த்திக் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதனால் பஞ்சாப் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் சந்தீப் ஷர்மா, கரியப்பா, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

குஜராத் லயன்சின் இரண்டாவது வெற்றிக்கு கைகொடுத்த சுரேஷ் ரெய்னா

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்று முடிந்த போட்டியொன்றில்..

நேற்றைய போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியின் விக்கெட் காப்பாளராக செயல்பட்ட தமிழக வீரர் டினேஷ் கார்த்திக், ஐ.பி.எல் வரலாற்றில் 100 ஆட்டமிழப்புகளை நிகழ்த்திய முதல் விக்கெட் காப்பாளராக சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் டோனி 94 ஆட்டமிழப்புக்கள் நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 188/7( 20)அம்லா 65(40), அக்சேர் பட்டேல் 34(17), மெக்ஸ்வெல் 31(18)

குஜராத் லயன்ஸ் 162/7 (20)டினேஸ் கார்த்திக் 58(44), ரெய்னா 32(24)

போட்டியின் ஆட்ட நாயகன்ஹசீம் அம்லா


வேதனையான சாதனையுடன் கொல்கத்தாவிடம் வீழ்ந்த பெங்களூர் அணி

நேற்றைய இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன் பெங்களூர் அணியின் பந்து வீச்சுகளை விளாசித் தள்ளினார். இருப்பினும் அணித் தலைவர் கௌதம் கம்பீர் 14(11) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 17 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா அணி 5.4 ஓவர்களில் 65 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பின்னர் 100 ஓட்டங்களை எட்டுவதற்குள் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. உத்தப்பா(11), மனிஷ் பாண்டே(15), யூசப் பதான்(8), கொலின்(0) என பலரும் சொற்ப ஓட்டங்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் 19.3 ஓவர்களில் கொல்கத்தா அணி 131 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணியில் சிறப்பாக பந்து வீசிய சாகல் 4 ஓவர்களில் 16 ஓட்டங்கள் மாத்திரமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனைத் தொடர்ந்து 132 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பெங்களூர் அணியின் கெயில் மற்றும் அணித் தலைவர் விராட் கோலி களம் இறங்கினர்.

ஜெஹானின் போராட்டம் வீண்; தோல்வியுடன் நாடு திரும்பும் இலங்கை கனிஷ்ட அணி

இன்று நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் கனிஷ்ட..

அணித் தலைவர் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்திற்குள் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தன.

கெயில்(7), மந்தீப் சிங்(1), டி வில்லியர்ஸ்(8), ஜாதவ்(9), பின்னி(8) என்ற அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. இறுதியாக பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் கொல்கத்தா அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அபாரமாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய கவுண்ட்டர் நைல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். வோக்ஸ் மற்றும் கிராந்தோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை எனும் சாதனை இதுவரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வசமிருந்தது. 2009 இல் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் பெற்ற 58 ஓட்டங்களே குறித்த ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

அந்த ஐ.பி.எல் வரலாற்று சாதனையை நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தம்வசப்படுத்திக்கொண்டது. அத்தோடு ஐ.பி.எல் போட்டிகளில் மொத்தம் 20 விக்கெட்டுக்களும் சரிக்கப்பட்ட 2வது தடவையாக இந்தப் போட்டி அமைந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 131 (19.3)சுனில் நரைன் 34(17), சாகல் 16/3(4),

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 49 (9.4)வோக்ஸ் 6/3(2), கிராந்தோம் 4/3(1.4)