சகல துறையிலும் பிரகாசித்த திலான் பிரஷான்; தென் மாகாண நீலங்களின் மாபெரும் சமர் சமநிலையில் நிறைவு

181
Thilan Prashan

தென் மாகாணத்தின் நீலங்களின் மாபெரும் சமர்  எனப்படும் மாத்தறை புனித சேர்வேஷஸ் கல்லூரி மற்றும் மாத்தறை புனித தோமியர் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 117ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டி இன்று சமநிலையில் நிறைவடைந்தது.

மூன்று நாள் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டி நேற்று முன்தினம் மாத்தறை உயன்வத்த மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய புனித சேர்வேஷஸ் கல்லூரி சார்பில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய திலான் பிரஷான் அரைச்சதம் கடந்த நிலையில் 61 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். சுபுன் கவிந்த சிறப்பாக துடுப்பெடுத்தாடிய போதிலும் 48 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 2 ஓட்டங்களினால் அரைச்சதத்தினை தவறிவிட்டார்.

இவ்விருவர் பெற்றுக் கொடுத்த ஓட்டங்களின் உதவியுடன் புனித சேர்வேஷஸ் கல்லூரி 76.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. புனித தோமியர் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் மலீஷ சதுஷ்க 3 விக்கெட்டுகளையும் மேலும் மூன்று வீரர்கள் 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தினர்.

அடுத்து தனது முதலாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த புனித தோமியர் கல்லூரி அதிக கவனத்துடன் மிகவும் மந்தமான கதியிலேயே துடுப்பெடுத்தாடியது. துடுப்பாட்டத்தில் பிரகாசித்த லஹிரு டில்ஷான் 72 ஓட்டங்களையும் ரமிந்த பவிநாத் 43 ஓட்டங்களையும் பெற, அவ்வணி 110.1 ஓவர்களில் 211 ஓட்டங்களை குவித்து முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்டது.

[rev_slider dfcc728]

பந்துவீச்சிலும் தனது திறமையை வெளிக்காட்டிய புனித சேர்வேஷஸ் கல்லூரியின் திலான் பிரஷான் 48 ஓட்டங்களை வழங்கி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

4 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித சேர்வேஷஸ் கல்லூரி சார்பில் மீண்டும் சுபுன் கவிந்த மற்றும் திலான் பிரஷான் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியிருந்தனர். அவ்விருவரும் முறையே 42 மற்றும் 38 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

புனித தோமியர் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் ஹஷின் டில்மான் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்ததுடன், புனித சேர்வேஷஸ் கல்லூரி 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

ஒரு சில ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் 179 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரி விக்கெட் இழப்பேதுமின்றி 20 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

புனித சேர்வேஷஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 207 (76.4) – திலான் பிரஷான் 61, சுபுன் கவிந்த 48, முதித அஷான் 36, சஷிக துல்ஷான் 21, மலீஷ சதுஷ்க 3/24, லஹிரு டில்ஷான் 2/28, பிரவீன் மதுஷான் 2/38, ஹஷின் டில்மான் 2/64

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 211 (110.1) – லஹிரு டில்ஷான் 72, ரமிந்த பவிநாத் 43, தருஷ கவிந்த 30, திலான் பிரஷான் 6/48

புனித சேர்வேஷஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 174/6d (68) – சுபுன் கவிந்த 42, திலான் பிரஷான் 38, கேஷர  நுவந்த 24, சந்தரு நெத்மின 25*, ஹஷின் டில்மான் 4/59

புனித தோமியர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 20/0 (3.4)

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.