இன்று நடைபெற்று முடிந்த சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில், பந்து வீச்சு துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் பிரகாசித்திருந்த பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களால் அபார வெற்றியினை சுவீகரித்துள்ளது.

ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க முதலில் விருந்தினர் அணிக்கு துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வழங்கினார்.

இந்த ஒரு நாள் தொடரிற்காக வழமையான ஆட்டத்திற்கு இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருந்த குசல் பெரேரா துரதிஷ்டவசமான காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு பதிலாக இலங்கை அணியில் சகல துறை ஆட்டக்காரரான மிலிந்த சிறிவர்தன சேர்க்கப்பட்டிருந்தார்.

அத்துடன், பங்களாதேஷ் அணி சார்பாக அண்மையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பித்திருந்த சுழல் பந்துவீச்சாளர் மெஹதி ஹஸனிற்கு முதல் தடவையாக ஒரு நாள் போட்டியொன்றில் விளையாடும் வாய்ப்பு கிட்டியிருந்தது.

நாணய சுழற்சி முடிவுகளிற்கு அமைவாக மைதானம் விரைந்த பங்களாதேஷ் அணி, ஆரம்ப வீரர்களான செளம்யா சர்க்கார் மற்றும் தமிம் இக்பால் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்தது.

ஒரு நல்ல ஆரம்பத்தினை பங்களாதேஷ் வெளிக்காட்டி இருப்பினும் அவ்வணியின் முதல் விக்கெட்டினை போட்டியின் ஆரம்ப கட்டத்திலேயே சுரங்க லக்மால் கைப்பற்றியிருந்தார்.

விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமாலிடம் பிடிகொடுத்திருந்த செளம்யா சர்க்கார் வெறும் 10 ஓட்டங்களுடன் இதனால் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

எனினும், தளர்வடையாத பங்களாதேஷ் அணி களத்தில் நின்ற ஏனைய வீரர் தமிம் இக்பால் மற்றும் புதிய துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மான் ஆகியோரால் நுட்பமான முறையில் வழிநடாத்தப்பட்டது.

இதனால், இரண்டாம் விக்கெட்டிற்காக 90 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது.

சந்தகன் பந்து வீச்சில் இருந்து மூன்றாம் நடுவரின் தீர்ப்பின் காரணமாக LBW ஆட்டமிழப்பில் இருந்து தப்பியிருந்த சபீர் ரஹ்மான் பங்களாதேஷ் அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை திரும்பினார்.

ரஹ்மான் தனது 4ஆவது ஒரு நாள் அரைச்சதத்தினை பூர்த்தி செய்திருந்ததோடு மொத்தமாக, 10 பவுண்டரிகள் உள்ளடங்களாக 56 பந்துகளிற்கு 54 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

இதனையடுத்து, களத்திற்கு வந்த முஸ்பிகுர் ரஹீம் ஒரு ஓட்டத்துடன் சந்தகனினால் வீழ்த்தப்பட சற்று பிறழ்வினை எதிர்நோக்கிய பங்களாதேஷ் அணி சற்று நிதானமாக துடுப்பாட தொடங்கியது.

இதனால் புதிதாக வந்திருந்த சகீப் அல்ஹஸன் களத்தில் திறமையாக துடுப்பாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்து, தனது அணியின் ஓட்ட எண்ணிக்கையினை மிகச்சிறந்த முறையில் கட்டியெழுப்பினார்.

நான்காம் விக்கெட்டிற்காக, அதி வலுவான 144 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட 250 ஓட்டங்களினை பங்களாதேஷ் இலகுவாக கடந்தது.

இந்த இணைப்பாட்டத்திற்குள் தமிம் இக்பால் தனது 8ஆவது ஒரு நாள் சதத்தினை பூர்த்தி செய்தார். பங்களாதேஷ் அணியின் நான்காம் விக்கெட்டாக பறிபோன சகீப் அல்ஹஸன் மொத்தமாக 71 பந்துகளில் 72 ஓட்டங்களினை பெற்றிருந்தார்.

இவரின் விக்கெட்டினைத் தொடர்ந்து, களத்தில் நின்றிருந்த இக்பாலும் சில பவுண்டரிகளை விளாசி ஆட்டமிழந்தார்.

இலங்கை அணிக்கெதிராக, தனது இரண்டாம் ஒரு நாள் சதத்தினை பூர்த்தி செய்திருந்த தமிம் இக்பால், மொத்தமாக 142 பந்துகளினை சந்தித்து 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 127 ஓட்டங்களினை பெற்று அசத்தியிருந்தார்.

பின்னர், பங்களாதேஷ் அணியின் மத்திய வரிசை வீரர்கள் விரைவான துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டி முடிவில், அவ்வணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் இறுதி 13 பந்துகளில் 35 ஓட்டங்களினை அதிரடியாக பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி, இப்போட்டியின் மூலம் பெற்றுக்கொண்ட மொத்த ஓட்டங்கள் இலங்கை அணிக்கெதிராக தம்புள்ளை மைதானத்தில் ஒரு நாள் போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்டங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி இன்றைய நாளில் களத்தடுப்பில் சற்று மோசமாக செயற்பட்டிருந்தது. இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் சுரங்க லக்மால் இரண்டு விக்கெட்டுகளையும் லஹிரு குமார, லக்‌ஷான் சந்தகன் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து, 325 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கினை 50 ஓவர்களில் பெறுவதற்கு இலங்கை அணி ஆடத் தொடங்கியது.

இதில் இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய தனுஷ்க குணத்திலக்க மற்றும் உபுல் தரங்க ஆகியோர் மோசமான ஆரம்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கினர்.

இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக தனுஷ்க குணத்திலக்க ஓட்டம் ஏதும் பெறாமல் வெளியேறியிருந்ததோடு, அணித்தலைவர் உபுல் தரங்க மோசமான ஆட்டத்தினை (19) வெளிக்காட்டியிருந்தனர்.

எனினும், மத்திய வரிசை வீரராக வந்திருந்த தினேஷ் சந்திமால் ஒரு அரைச்சதம் ஒன்றினை குவித்து, பாரிய இலக்கு ஒன்றினை எட்டும் இலங்கை அணியின் முயற்சிக்கு நம்பிக்கையூட்டி இருந்தார். ஆனால், இன்றைய நாளின் அறிமுக வீரர் மெஹதி ஹஸனின் பந்து வீச்சில் அவர் வீழ்ந்த காரணத்தினால் 70 பந்துகளில் 6 பவுண்டரிகள் உடன் 59 ஓட்டங்களினைப் பெற்று ஓய்வறை நோக்கி நடக்க வேண்டி ஏற்பட்டது.

இலங்கை அணியின் மத்திய வரிசை வீரர்களான அசேல குணரத்ன (24), சசித் பத்திரன(31), மற்றும் மிலிந்த சிறிவர்தன (22) ஆகியோர் நல்ல துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டி இருப்பினும் அதனை அவர்களால் நீடிக்க முடியவில்லை.

இதனையடுத்து, களத்திற்குள் நுழைந்த திசர பெரேரா சற்று அதிரடி காட்டி போட்டியினை இலங்கையின் பக்கம் சாய்க்க சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அபாரமாக ஆடிய பெரேரா, 35 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உள்ளடங்களாக 55 ஓட்டங்களினை விளாசி இருந்தார்.

முடிவில், 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 234 ஓட்டங்களினை மாத்திரமே பெற்று இப்போட்டியில் இலங்கை 90 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இது இலங்கை அணிக்கு ஒரு நாள் போட்டிகளில் ஆறாவது தொடர் தோல்வியாகும்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் இறுதி விக்கெட்டான திசர பெரேராவின் விக்கெட்டுடன் சேர்த்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் மூன்று விக்கெட்டுகளையும் அணித்தலைவர் மசரபி மொர்தஸா மற்றும் மெஹதி ஹஸன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இப்போட்டியோட்டியோடு சேர்த்து 39 ஒரு நாள் போட்டிகளில் இலங்கையுடன் விளையாடியிருக்கும் பங்களாதேஷ் அணி, தனது ஐந்தாவது வெற்றியினை இப்போட்டியின் மூலம் பெற்றுக்கொள்வதோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளும் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி செவ்வாய்க்கிழமை (28) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.