மஹாநாம மற்றும் டி எஸ் சேனநாயக்க கல்லூரிகளுக்கு இடையிலான 11ஆவது பெரும் சமரில் முதாவது நாளான இன்று மஹாநாம கல்லூரி 271 ஓட்டங்களுடன் வலுவான நிலையிலுள்ள, அதே சமயம் டி எஸ் சேனநாயக்க 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது.

பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய தினம் இரண்டு நாட்களை கொண்ட கொழும்பு மஹாநாம கல்லூரி மற்றும் டி எஸ் சேனநாயக்க கல்லூரிகளுக்கு இடையிலான 11ஆவது பெரும் சமர் கிரிக்கெட் போட்டி P சரா ஓவல் மைதானத்தில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் ஆரம்பமானது.

ஆரம்ப நாளான இன்று, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டி எஸ் சேனநாயக்க கல்லூரி, முதலில் மஹாநாம கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது. அந்த வகையில் முதலில் களமிறங்கிய அவ்வணி பிஷான் மென்டிஸ் மற்றும் மலிந்து மதுரங்க ஆகியோரின் அரைக் சதங்களின் உதவியுடன் 60 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 271 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

[rev_slider dfcc728]

.

மஹாநாம கல்லூரி சார்பாக சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த பிஷான் மென்டிஸ் 74 ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டங்களாக பதிவு செய்தார். அதேநேரம் அணித் தலைவர் மலிந்து மதுரங்க நிதானத்துடன் துடுப்பாடி 70 ஓட்டங்களை பங்களிப்பு செய்தார். அத்துடன் பின்வரிசை சகலதுறை ஆட்டக்காரர் விஹான் முதலிகே ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறிய டி எஸ் சேனநாயக்க கல்லூரி சார்பாக நேர்த்தியாக பந்து வீசிய விஹான் குணசேகர 100 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் முதித்த லக்க்ஷான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும் ஏனையோரால் எவ்விதமான விக்கெட்டுகளையும் கைப்பற்ற முடியவில்லை.

அதனையடுத்து, தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய டி எஸ் சேனநாயக்க கல்லூரி ஆரம்பம் முதல் மஹாநாம கல்லூரியின் அதிரடி பந்து வீச்சில் தடுமாறியதை காணக் கூடியதாக இருந்தது. முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது வெறும் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது.

2007 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இரண்டு நாட்களை கொண்ட இப்போட்டிகளில் இதுவரை டி எஸ் சேனநாயக்க கல்லூரி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள அதேநேரம் ஏனைய போட்டிகள் சமநிலை முடிவுற்ற நிலையில் இப்போட்டி, மஹாநாம கல்லூரிக்கு முதலாவது வெற்றியை பதிவு செய்துகொள்ள இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 271/ 9d (60) – பிஷான் மென்டிஸ் 74, மலிந்து மதுரங்க 70, நிதுக்க வலிக்கல 41, விஷான் முதலிகே 37*, கவிந்து முனசிங்க 22, விஹான் குணசேகர 6/100, முதித்த லக்க்ஷான் 2/83

டி எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 62/4 (22)