19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ண மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் கிரிக்கெட் அரைஇறுதிப் போட்டியில், நவீன் குணவர்தன மற்றும் சந்தரு டயஸின் அதிரடி பந்து வீச்சின் மூலம் நாலந்த கல்லூரியை 57 ஓட்டங்களால் வெற்றியீட்டி கொழும்பு, தர்ஸ்டன் கல்லூரி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

மக்கோன, சர்ரே மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற கொழும்பு  தர்ஸ்டன் கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரிக்கும் இடையிலான சிங்கர் கிண்ண அரைஇறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நாலந்த கல்லூரி முதலில் தர்ஸ்டன் கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது.

அந்த வகையில், முதலில் துடுப்பாடிய அவ்வணி 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிறப்பான துடுப்பாட்டதை வெளிப்படுத்திய கசுன் அபேரத்ன மற்றும் இமேஷ் விரங்க அதிக பட்ச ஓட்டங்களாக முறையே 62, 51 ஓட்டங்களை பதிவு செய்தனர். அதேவேளை நாலந்த கல்லூரி சார்பாக ஓட்டங்களை மட்டுப்படுத்திய உமேஷ்க  தில்ஷான் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அதனையடுத்து, 208 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நாலந்த கல்லூரி நவீன் குணவர்தன மற்றும் சந்தரு டயஸின் அதிரடி பந்து வீச்சில் சீக்குண்டு 40.2 ஒவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 151  ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இறுதிப் போட்டிக்கு தெரிவாவதற்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய நாலந்த கல்லூரி துடுப்பாட்ட வீரர்கள் அதிகமான அழுத்தத்தினால் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர். எனினும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷித்த ரசாஞ்சன மற்றும் தசுன் செனவிரத்ன அதிகபட்ச ஓட்டங்களாக முறையே 44, 31 ஓட்டங்களை பதிவு செய்தனர்.

அதேநேரம் அதிரடியாக பந்து வீசி தர்ஸ்டன் கல்லூரியின் வெற்றியை உறுதி செய்த நவீன் குணவர்தன மற்றும் சந்தரு டயஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். அந்த வகையில் ஏற்கனவே 2014ஆம் ஆண்டு சம்பியன் பட்டதை சுவீகரித்த கொழும்பு தர்ஸ்டன் கல்லூரிக்கு மீண்டும் சம்பியன் பட்டம் வெல்லுவதற்கு வாய்ப்பொன்று கிடைத்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு : 208 (47.4) – கசுன் அபேரத்ன 62, இமேஷ் விரங்க 51, சரண நாணயக்கார 25, உமேஷ்க  தில்ஷான் 3/35

நாலந்த கல்லூரி, கொழும்பு : 151 (40.2) – லக்ஷித்த ரசாஞ்சன 44, தசுன் செனவிரத்ன 31, கழன கதிரியாராச்சி 23, நவீன் குணவர்தன 3/16, சந்தரு டயஸ் 3/20