நிதானமான துடுப்பாட்டத்துடன் மஹிந்த மற்றும் தர்மராஜ கல்லூரிகள் முன்னிலையில்

116
112th Lovers Quarrel

காலி ரிச்மண்ட் கல்லூரி எதிர் காலி மஹிந்த கல்லூரி

தென்னிலங்கையின் மாபெரும் கிரிக்கெட் போட்டியான ‘காதலர்களின் சமர்’ எனப்படும் ரிச்மண்ட் மற்றும் மஹிந்த கல்லூரி அணிகளுக்கு இடையிலான 112 ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மஹிந்த கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரியின் பல வீரர்கள் சிறப்பான ஆரம்பங்களை பெற்றுக் கொண்ட போதிலும், பந்துவீச்சில் அசத்திய மஹிந்த கல்லூரி வீரர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

[rev_slider dfcc728]

கலிந்து எதிரிசிங்க, நிபுன் மாலிங்க மற்றும் கவிந்து எதிரிவீர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த ரிச்மண்ட் கல்லூரி 47.1 ஓவர்களில் 184 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பில் அவிந்து தீக்ஷண அதிகபட்சமாக 38 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு ஆடுகளம் பிரவேசித்த மஹிந்த கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்படி அவ்வணி முதல் நாள் நிறைவின் போது 46 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 3 விக்கெட்டுகளை இழந்து 96 ஓட்டங்களை குவித்திருந்தது.

மஹிந்த கல்லூரியின் வினுர ஹிரஞ்சித் ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், பந்துவீச்சில் ரிச்மண்ட் கல்லூரியின் சந்துன் மெண்டிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 184 (47.1) – அவிந்து தீக்ஷண 38, கவிஷ அபிஷேக் 37, கமிந்து மெண்டிஸ் 32, தனஞ்சய லக்‌ஷான் 30, ஆதித்ய சிரிவர்தன 26, கலிந்து எதிரிசிங்க 2/19, கவிந்து எதிரிவீர 2/24, நிபுன் மாலிங்க 2/50

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 96/3 (46) – வினுர ஹிரஞ்சித் 25*, நவோத் பரணவிதான 20, சந்துன் மெண்டிஸ் 2/27


தர்மராஜ கல்லூரி எதிர் கிங்ஸ்வூட் கல்லூரி

இன்று ஆரம்பமான மலையகத்தின் மற்றுமொரு மாபெரும் கிரிக்கெட் சமரில் தர்மராஜ கல்லூரி மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரி அணிகள் 111 ஆவது முறையாக மோதிக் கொண்டன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்வூட் கல்லூரி விமுக்தி விஜேசிறிவர்தனவின் அபார முயற்சியின் உதவியுடன் ஒருவாறாக 167 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. தனி ஒருவராக போராடி அணியை வழிநடத்திய விமுக்தி ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட தர்மராஜ கல்லூரியின் நிவந்த ஹேரத் 27 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் நவிந்த டில்ஷான் மற்றும் கிஹான் விதாரண ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தர்மராஜ கல்லூரி அதிக கவனத்துடன் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது. இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது அவ்வணி 30 ஓவர்களை எதிர்கொண்டு 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 41 ஓட்டங்களை பெற்றிருந்தது. இரண்டு விக்கெட்டுகளையும் கனிது கௌஷல்ய பதம்பார்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

கிங்ஸ்வூட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 167 (64.4) – விமுக்தி விஜேசிறிவர்தன 87*, நிவந்த ஹேரத் 4/27, நவிந்த டில்ஷான் 2/27, கிஹான் விதாரண 2/55

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 41/2 (30) – கனிது கௌஷல்ய 2/18

நாளை போட்டிகளின் இறுதி நாளாகும்.