சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், இலங்கை A அணி போட்டியின் மூன்றாம் நாளான இன்று 163 ஓட்டங்களால் முன்னிலை அடைந்து வலுப்பெற்றுள்ளது.

முச்சத இணைப்பாட்டத்துடன் இரண்டாம் நாளில் மீண்டெழுந்த இலங்கை A அணி

நடைபெற்று வரும், இலங்கை A அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின்…

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், போட்டியின் நேற்றைய இரண்டாம் நாளில், 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 333 ஓட்டங்களை குவித்திருந்த இலங்கை A அணி, களத்தில் சதங்களுடன் நின்ற திமுத் கருணாரத்ன மற்றும் சதீர சமரவிக்ரம உடன் மூன்றாம் நாள் ஆட்டத்தினை இன்று தொடர்ந்தது.

வலுவான இணைப்பாட்டம் ஒன்றினை நான்காவது விக்கெட்டுக்காக நேற்று குவித்துக்கொண்ட இலங்கை A அணி, அவ் இணைப்பாட்டத்தினை இன்றைய நாளில், போட்டியின் ஆரம்பத்திலேயே சதீர சமரவிக்கரம ஆட்டமிழந்த காரணத்தினால் முடித்துக்கொண்டது. நான்காவது விக்கெட்டுக்காக மொத்தமாக 315 ஓட்டங்கள் இணைப்பாட்டமாகப் பெறப்பட்டதுடன், அவ் இணைப்பாட்டத்திற்கு முதுகெலும்பாக இருந்து ஆட்டமிழந்த சதீர சமரவிக்ரம மொத்தமாக 185 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு தனது சிறந்த முதல்தர ஆட்டத்தினை வெளிக்காட்டினார்.

இதனையடுத்து, புதிதாக மைதானத்திற்குள் நுழைந்த இலங்கை A குழாமின் தலைவர் தனஞ்சய டி சில்வா, களத்தில் இருந்த திமுத் கருணாரத்ன உடன் சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்காக ஒரு வலுவான இணைப்பாட்டத்தினை (131) உருவாக்கி ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்கும் போது, தனஞ்சய டி சில்வா 13 பவுண்டரிகளை விளாசி 73 ஓட்டங்களினைப் பெற்று இத்தொடரில் முதல் போட்டியில் தான் காட்டிய மோசமான ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனையடுத்து, ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், திமுத் கருணாரத்ன பெற்றுக்கொண்ட அபார இரட்டை சதத்துடன் இலங்கை A அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து அசுர இலக்கான 548 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.

இதில் திமுத் கருணாரத்ன மொத்தமாக, 319 பந்துகளில் 23 பவுண்டரிகள் உள்ளடங்களாக 212 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டார். இது அவரது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு இன்னிங்ஸில் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்து வீச்சில், இலங்கை A அணியின் முக்கிய விக்கெட்டுகளை (கருணாரத்தன, தனஞ்சய டி சில்வா) சரித்த வலதுகை சுழல்பந்து வீச்சாளரான ஒல்லி ரெய்னர் மொத்தமாக 4 விக்கெட்டுகளை சாய்த்ததுடன், மறுமுனையில் டொபி ரொலன்ட் – ஜோன்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், 195 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த இங்கிலாந்து லயன்ஸ் அணி, இன்றைய நாளின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

களத்தில், இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தலைவர் கீட்டன் ஜென்னிங்ஸ் 11 ஓட்டங்களுடனும், டொம் வெஸ்லி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து லயனஸ் அணி (முதல் இன்னிங்ஸ்) – 353 (97.5) – லியாம் லிவிங்ஸ்டன் 105, டொம் வெஸ்லி 68, கீட்டன் ஜென்னிங்ஸ் 44, பென் போக்ஸ் 30, ஜெக் லீச் 22*, மலிந்த புஷ்பகுமார 127/8, தனன்ஞய டி சில்வா 44/1

இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்) – 548 (135.2) – திமுத் கருணாரத்ன 212, சதீர சமரவிக்ரம 185, தனஞ்சய டி சில்வா 74, ஒல்லி ரெய்னர் 164/4, டொபி ரொலன்ட்-ஜோன்ஸ் 67/3

இங்கிலாந்து லயன்ஸ் அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 32/2 (11) – ஹஸீப் ஹமித் 14, கீட்டன் ஜென்னிங்ஸ் 11*, தனஞ்சய டி சில்வா 4/1

போட்டியின் நான்காவது மற்றும் இறுதி நாள் நாளை தொடரும்.