மிகவும் விறுவிறுப்பும் தீர்மானமும் மிக்க கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் புளு ஸ்டார் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் சுப்பர் 8 சுற்றுப் போட்டியின் நிறைவில் புளு ஸ்டார் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியனை வீழ்த்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதி நிறைவுற்றதும் பெய்த கடும் மழையினால், அதன் இரண்டாவது பாதி பிற்போடப்பட்டது. எனவே, இன்று 45 நிமிடங்களைக் கொண்ட இரண்டாவது பாதி விளையாடப்பட்டது.  

ப்ளூ ஸ்டார் – கொழும்பு கால்பந்து கழகங்களுக்கு இடையிலான போட்டிக்கு மழையினால் இடையூறு

போட்டி ஆரம்பமாகி சில நிமிடங்களிலேயே புளு ஸ்டார் அணிக்கு ஒரு கோணர் வாய்ப்பு கிடைத்தது. அதன்போது ஷன்ன உதைந்த பந்தை கொழும்பு அணியின் கோல் காப்பாளர் இம்ரான் தடுக்க, மீண்டும் கோணர் வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் அடுத்த முறை ஷன்ன உதைந்த பந்து வெளியே சென்றது.

அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ஹபீஸ் ஒலையிமிக்கு கிடைத்த பந்தை அவர் மிக வேகமாக கோல்களுக்கு உதைய பந்து கம்பங்களின் மேலே பட்டு வெளியே சென்றது. இது கொழும்பு அணிக்கான சிறந்த கோல் வாய்ப்பாக இருந்தது.

அதனைத் தொடர்ந்தும் கொழும்பு தரப்பு தொடர்ச்சியாக பல முயற்சிகளை செய்து வந்த நிலையில் பந்து சர்வானுக்கு செல்ல, அவர் அதனை எடுத்து முன்னேறும்பொழுது, எதிரணி வீரரினால் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டார்.

எனவே, கொழும்பு அணிக்கு பெனால்டி எல்லைக்கு மிக அண்மையில் வைத்து ப்ரீ கிக் உதைக்கான வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும், அதன்போது மொமாஸ் யாப்போ உதைந்த பந்து புளு ஸ்டார் பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்தும் ஆட்டத்தில் கொழும்பு அணியே முழு ஆதிக்கத்தையும் செலுத்தி வந்தது. எனினும், புளு ஸ்டார் அணியின் பின்களம் சற்று பலமாக இருந்தமையினால் கோல்களுக்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டன.

குறிப்பாக புளு ஸ்டார் அணியின் தலைவரும் கோல் காப்பாளருமான மஞ்சுல பெர்னாண்டோ சிறந்த முறையில் தனது பங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.

எனினும், அவ்வணியின் முன்களத்தின் முக்கிய வீரர்களான மொஹமட் பர்சீன் மற்றும் அபொன்ஜா ஜிபோலா ஆகியோர் இன்றைய போட்டியில் உபாதைக்குள்ளாகினர். அவ்வணியின் முன்களம் மிக மோசமாக இருந்தமைக்கு அது காரணியாக இருந்தது.

போட்டியின் இறுதி வரை தமது முதல் கோலுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி வந்த கொழும்பு அணியினரின் முயற்சிகள் அனைத்தும் இறுதி வரையில் தோல்வியிலேயே முடிந்தன.

குறிப்பாக நாகுர் மீராவினால் உள் செலுத்தப்பட்ட பல பந்துகள் கொழும்பு அணியின் முன்கள வீரர்களுக்கு கோலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தின. எனினும் அவற்றில் சிறந்த நிறைவுகள் இடம்பெறவில்லை.

மறு முனையில் புளு ஸ்டார் அணிக்கு கிடைக்கப் பெற்ற ஓரிரு வாய்ப்புகளை கொழும்பு அணியின் பின்கள வீரர்கள் இலகுவாகத் தடுத்து வந்தனர்.

எனவே போட்டி நிறைவில் ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை பர்சீன் மூலம் பெறப்பட்ட கோலுடன் புளு ஸ்டார் அணி வெற்றி பெற்றது.

முழு நேரம் : கொழும்பு கால்பந்து கழகம் 00 – 01 புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம்

Thepapare.com இன் ஆட்ட நாயகன்B.G. சிவன்க (புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம்)

போட்டியின் பின்னர் ThePapare.com இடம் பிரத்யேகமாகக் கருத்து தெரிவித்த புளு ஸ்டார் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திரதாச கருனாரத்ன,

”இன்றைய போட்டியில் எமது வீரர்களின் விளையாட்டு குறித்து எனக்கு திருப்தி இல்லை. பல வீரர்களின் உபாதை காரணமாக எமக்கு வழமையான விளையாட்டை காண்பிக்க முடியாமல் போனது. இன்றைய வெற்றி கடவுள் எமக்குத் தந்த பரிசு என்றே நினைக்கின்றேன்.

எமது இறுதி ஆட்டத்திற்கு இன்னும் இரண்டு வார காலம் இருக்கின்றது. அதன்போது வீரர்கள் மீண்டு வருவார்கள். எனவே நாம் அதற்கு சிறந்த முறையில் தயாராகி, வெற்றி பெறுவோம்” என்றார்.

கோல் பெற்றவர்கள்

புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் – மொஹமட் பர்ஸீன் 13’

மஞ்சள் அட்டைகள்

கொழும்பு கால்பந்து கழகம் – மொஹமட் ரமீஸ்

புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் – இடோவோ ஹமீட்