சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் இன்று நடைபெற்று முடிந்திருக்கும் மூன்றாவது T-20 போட்டியில், தமது துல்லியமான பந்து வீச்சினால் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியது. எனினும், முன்னர் நடைபெற்ற போட்டிகளின் வெற்றி காரணமாக இலங்கை அணி தொடரை 2-1 என வெற்றி கொண்டு கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

அடிலைட் நகரில் ரம்மியமான மாலைப் பொழுதொன்றில் ஆரம்பாகிய இப்போட்டியில், கடந்த இரண்டு போட்டிகளினையும் போன்று இப்போட்டியின் நாணய சுழற்சியினையும் தனதாக்கிய இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க, இப்போட்டியிலும் முன்னைய போட்டிகள் போன்று அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பாடப் பணித்தார்.

அசேல குணரத்னவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை

இலங்கை அணி இத்தொடரினை த்ரில் வெற்றிகளுடன் ஏற்கனவே 2-0 என கைப்பற்றியிருப்பதால், ஆறுதல் வெற்றிக் கனவுடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில், கடந்த போட்டியில் விளையாடிய அறிமுக வீரர்களில் ஒருவரான அன்ட்ரூ டையிற்கு பதிலாக இளம் சுழல் வீரர் அடம் ஷம்பா இணைக்கப்பட்டிருந்தார்.

.சி.சி. விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், இந்த போட்டியில் விளையாட முடியாமல் இருந்த நிரோஷன் திக்வெல்லவிற்கு பதிலாக இலங்கை அணியில், இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டிருந்த தசுன் ஷானக்க உள்வாங்கப்பட்டிருந்தார். திக்வெல்லவின் விக்கெட் காப்பாளர் பொறுப்பு குசல் மெண்டிசுக்கு வழங்கப்பட்டிருந்தது.

நாணய சுழற்சி முடிவிற்கு அமைவாக, அரோன் பின்ச் மற்றும் மைக்கல் கிளிங்கர் ஆகியோருடன் நுழைந்த அவுஸ்திரேலியா, முதல் விக்கெட்டுகாக, பின்ச்சின் அதிரடி அரைச் சதத்துடன் 79 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பெற்றது. முதல் விக்கெட்டாக பறிபோன பின்ச், 32 பந்துகளிற்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளை விளாசி 53 ஓட்டங்களினைப் பெற்று  இத்தொடரில் தனது சிறப்பாட்டத்தினை பதிவு செய்து கொண்டார்.

முதல் விக்கெட்டினை தொடர்ந்து, களத்தில் நின்ற மைக்கல் கிளிங்கருடன் ஜோடி சேர்ந்த பென் டங், சில வானவேடிக்கைகளைக் காட்டி பெறுமதியான 28 ஓட்டங்களினைப் பெற்றதோடு, அணியின் ஓட்ட எண்ணிக்கையை நூறினை தாண்ட வைத்தார்.

டங்கின் இரண்டாவது விக்கெட்டினைத் தொடர்ந்து, ட்ராவிஸ் ஹெட் இலங்கைப் பந்து வீச்சாளர்களுக்கு அதிரடி காட்டி இறுதி நேரத்தில் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்தார். 16 பந்துகளுக்கு அதிரடி காட்டி 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்களினை விளாசி ஆட்டமிழந்தார்.

போட்டியின் இறுதிக் கட்டத்தில்,பெரியதொரு இலக்கினை எட்ட நினைத்த அவுஸ்திரேலிய அணி, இறுதி இரண்டு ஓவர்களிலும் 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதுடன், 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்திருந்தது.  நெருக்கடியான இலங்கை பந்து வீச்சில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய காரணத்தினால், இன்னிங்ஸ் முடிவில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களுக்கு 187 ஓட்டங்களைப்  பெற்றுக்கொண்டது.

இப்போட்டியின் மூலம் தனது கன்னி T-20 அரைச் சதத்தினைப் பெற்றுக்கொண்ட பிக் பாஷ் ஹீரோ மைக்கல் கிளிங்கர் 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.  

இலங்கை சார்பாக, தசுன் சானக்க 2 விக்கெட்டுகளை கைப்பற்றிக்கொண்டார். அதே போன்று, லசித் மாலிங்க தான் வீசிய இறுதி ஓவரில் விக்கெட்டுக்களைப் பெற்று, மொத்தமாக 2 விக்கெட்டுகளைப் கைப்பற்றியிருந்தார்.

பின்னர், 188  என்ற வெற்றி இலக்குடன் ஆடுகளம் விரைந்த இலங்கை அணி 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவியது.

நிரோஷன் திக்வெல்லவிற்கு போட்டித் தடை விதித்தது ICC

இலங்கை அணி, இன்று மிரட்டலான ஆரம்ப துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்த காரணமாய் அமைந்த தில்ஷான் முனவீர 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்களினை விளாசி இருந்தார்.

மத்திய வரிசையில் இலங்கை அணியின் வெற்றிக்கு பெரும்பாங்கற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட அசேல குணரத்ன, வெறும் 4 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலிய அணியில் இன்று இணைக்கப்பட்ட அடம் ஷம்பாவின் சுழலில் வீழ்ந்தார். இது இலங்கை ரசிகர்களுக்கு பெறும் ஏமாற்றமாகவே இருந்தது.

எனினும், நேர்த்தியான சிக்ஸர்கள் மூலம் போட்டியினை இலங்கை அணிக்கு மீண்டும் சாதகமாக்கிய மிலிந்த சிறிவர்தன, 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 35 ஓட்டங்களினை விளாசி ஆட்டமிழந்த காரணத்தினால் போட்டி மீண்டும் ஆஸி அணியின் பக்கமே திரும்பியது.

அணித் தலைவர் உபுல் தரங்க, சாமர கப்புகெதர,  தசுன் சாணக்க மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிந்து அவுஸ்திரேலிய அணியின் வெற்றியினை மேலும் உறுதிப்படுத்தி இருந்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் இப்போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை சரிவர உபயோகப்படுத்திய சுழல் பந்து வீச்சாளர் அடம் ஷம்பா, முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளுடன் சேர்த்து மொத்தமாக 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். ஜேம்ஸ் போல்க்னரும் 3 விக்கெட்டுகளை சாய்த்து அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியிருந்தார்.

இந்தப் போட்டியின், ஆட்ட நாயகனாக அடம் ஷம்பா தேர்வு செய்யப்பட்டதோடு, தொடர் நாயனாக முன்னைய போட்டிகளில் பெறப்பட்ட த்ரில் வெற்றிகளின் சொந்தக்காரனான இலங்கை அணியின் அசேல குணரத்ன தெரிவு செய்யப்பட்டார்.

இத்தொடருடன், சென்ற வருட டிசம்பரில் இருந்து கடல் கடந்த சுற்றுப் பயணங்களில் இருந்த இலங்கை அணி, அவற்றை முழுமையாக நிறைவு செய்து நாடு திரும்பவுள்ளது. இலங்கை அணி அடுத்த மாதத்தில் சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான தொடரினை எதிர்கொள்ளவுள்ளது.

போட்டியின் சுருக்கம்